Published:Updated:

வாளி, டயர்களிலும் செடிகள் வளர்க்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாளி, டயர்களிலும் செடிகள் வளர்க்கலாம்!
வாளி, டயர்களிலும் செடிகள் வளர்க்கலாம்!

வீட்டுக்குள் விவசாயம்

பிரீமியம் ஸ்டோரி

“இந்தச் செடிகள்தாங்க என் உலகம். இந்தச் செடிகளைப் பார்க்காம என்னால ஒருநாள்கூட இருக்க முடியாது. பார்க்காம இருந்ததும் இல்ல. விதை போடுறதுல இருந்து காய்கறி பறிப்பு வரைக்கும் ஒவ்வொரு வேலையையும் குழந்தைக்குப் பண்றது மாதிரி பார்த்து பார்த்துச் செய்றேன்” என்று சிலாகிக்கிறார், சென்னை கே.கே நகரில் வசிக்கும் மாடித்தோட்ட ஆர்வலர் ராதா கண்ணன்.

கணவரின் அலுவலகத்தில், மாடியில் தோட்டம் அமைத்துப் பராமரித்து வரும் ராதா கண்ணனைச் சந்திக்க ஒரு காலை வேளையில் நாம் சென்றிருந்தபோது வாஞ்சையுடன் செடிகளைத் தடவிக்கொடுத்தபடி அவற்றோடு பேசிக் கொண்டிருந்தார், ராதா. பழைய காலணிகள், லாரி டயர்கள், தெர்மாகோல் பெட்டிகள், வாளிகள் என அனைத்துப் பொருள்களிலும் செடிகளை வளர்த்து வருகிறார், ராதா.

வாளி, டயர்களிலும் செடிகள் வளர்க்கலாம்!

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே செடிகள் மேல ஒரு காதல். ஸ்கூல் படிக்கும்போது ஒரு புராஜெக்ட்டுக்காக முதன் முதலா செடி வளர்த்தேன். அதுல இருந்துதான் எனக்குச் செடி வளர்ப்புல ஆர்வம் வந்துச்சு. எங்க வீடு கே.கே நகர்ல ஒரு அப்பார்ட்மென்ட்ல இருக்கு. அங்கதான் முதன்முதலா மாடித்தோட்டம் அமைச்சேன். தக்காளி, புடலை, வாழை, கீரை, துளசி, கத்திரினு நிறைய செடிகளை வளர்த்தேன். அபார்ட்மென்ட்ல மொட்டை மாடி எல்லோருக்கும் பொதுவானதுங்கிறதால எனக்கு நிறைய எதிர்ப்புகள். பூச்சிகள் வருது, கொசுக்கள் வருதுனு எல்லோரும் சொன்னாங்க. அபார்ட்மென்ட்வாசிகளுக்கு மாடித்தோட்டத்தோட அருமை புரியலை. அதனால, தோட்டத்தை என் கணவரோட அலுவலகத்துக்கு மாத்திட்டேன். எல்லாச் செடிகளையும் இங்க எடுத்துட்டு வந்துட்டேன்” என்ற ராதா, தோட்டத்தில் இருந்த செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“இங்க மஞ்சள், கத்திரி, தக்காளி, ரோஜா, புதினா, பாகற்காய், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், வாழை, எலுமிச்சை, கருந்துளசி, தூதுவளை, ஆகாயத்தாமரை, செம்பருத்தி, மாதுளை, கொய்யா, பீன்ஸ்னு எழுபது செடிகளை முக்கால் கிரவுண்டு இடத்துல வளர்த்துட்டுருக்கேன்.  ஆரம்பத்துல கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்துச்சு.

வாளி, டயர்களிலும் செடிகள் வளர்க்கலாம்!

கொஞ்சம் கத்துக்கிட்டபிறகு சுலபமாகிடுச்சு. மாடித்தோட்டம் அமைச்சா வீடு சேதமாகிடும்னு சிலர் சொல்றாங்க. தரையைச் சரிபண்ணி வாட்டர் புரூஃப் பெயின்ட் அடிச்சுட்டா தரைக்கோ வீட்டுக்கோ பாதிப்பு இருக்காது. நாம ஆசையா வளர்க்குற செடிகள்ல மொட்டுவிட்டு, பூ பூத்துக் காய்க்கிறதைப் பார்க்குற சந்தோஷத்துக்குக் கோடி ரூபாய்க் கொடுத்தாலும் ஈடாகாது.

மாட்டு எரு, காய்கறிக்கழிவு உரம், பஞ்சகவ்யானுதான் இடுபொருள்களாப் பயன்படுத்துறேன். வாரம் ஒருமுறை இடுபொருள்கள் கொடுப்பேன். பூச்சித்தாக்குதலைத் தடுக்க அப்பப்போ வேப்ப எண்ணெய் தெளிப்பேன். தினமும் காலை, மாலைனு ரெண்டு வேளைகளும் தண்ணீர் விடுவேன். அப்பப்போ... நோய்வாய்ப்பட்டிருக்குற இலைகளைப் பறிச்சுடுவேன். அதனால, நல்ல பலன் கிடைச்சுட்டுருக்கு” என்ற ராதா நிறைவாக,

“இப்போ என் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை இங்க இருந்தே எடுத்துக்குறேன். இயற்கையான முறையில விளையுறதால சுவையும் அபாரமா இருக்கு. என்னைப்பார்த்து என் குடும்பத்துல எல்லோருக்கும் செடிவளர்ப்புல ஆர்வம் வந்துடுச்சு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு

ராதா கண்ணன்,
செல்போன்: 73388 77452.

- சு.சூர்யா கோமதி, படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு