Published:Updated:

‘இனி என்ன செய்ய வேண்டும்?' - தென்னை விவசாயிகளுக்கு தெம்பூட்டும் விகடன் வழிகாட்டும் பயிற்சி!

‘இனி என்ன செய்ய வேண்டும்?' - தென்னை விவசாயிகளுக்கு தெம்பூட்டும் விகடன் வழிகாட்டும் பயிற்சி!
‘இனி என்ன செய்ய வேண்டும்?' - தென்னை விவசாயிகளுக்கு தெம்பூட்டும் விகடன் வழிகாட்டும் பயிற்சி!

அது திருமண மண்டபம் இல்லை. ஆயினும் நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். அங்கு மேடையில்லை..ஆனாலும் கருத்துகள் பகிரப்பட்டன. புரெஜெக்டர் இல்லை. சொற்களே அவர்களது சோகம் போக்கின. எளிமையாக நடைபெற்றது அந்த நிகழ்வு.

போர்க்களத்தை நேரில் பார்த்ததில்லை. ஆனால், வீழ்ந்து கிடக்கும் உடல்கள் இப்படித்தான் இருந்திருக்குமோ என நினைக்கத் தூண்டும் கோரக்காட்சி. தோப்பாக இருந்த இடங்களிலெல்லாம் வீழ்ந்து கிடக்கின்றன தென்னைகள். போரில் குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த சோகத்தைத் தாண்டிய பெரும் வேதனையில் இருக்கிறார்கள் டெல்டா தென்னை விவசாயிகள்.

பார்க்கும் நமக்கே கண்ணில் தண்ணீர் முட்டுகிறது. இவர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடிந்ததோ தெரியவில்லை. ஆசை ஆசையாக வளர்த்த தென்னைகள் வீழ்ந்து போன சோகம் ஒரு பக்கம், அதை அப்புறப்படுத்த முடியாமல் தினமும் பார்க்கும் கொடுமை ஒரு பக்கம் என வேதனையில் வெந்துகொண்டிருக்கிறார்கள். பலர், வீழ்ந்த மரங்களைக் கூட்டி தோப்பிலே கொள்ளி வைத்து விட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக தங்களை காத்த தென்னம் பிள்ளைகளுக்குக் கொள்ளி வைக்கும் வேதனை முகத்தில் பிரதிபலிக்கிறது.

துக்க வீட்டு சோகம் குறைந்து, அடுத்து என்ன செய்ய என யோசிக்கக் கூட முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களுக்கு நாம் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் எனக் களத்தில் இறங்கியது விகடன். தென்னை விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும்..வீழ்ந்து கிடக்கும் தென்னைகளை எப்படி அப்புறப்படுத்துவது? அவற்றை மீண்டும் உரமாக்கிக்கொள்வது எப்படி? எழுபது சதவிகிதம் குருத்து சாய்ந்த மரங்களை, இனி பிழைக்காது என நினைத்து சில விவசாயிகள் வெட்டிவிடுகிறார்கள்.

ஆனால், அவற்றை வெட்டத் தேவையில்லை. சில எளியத் தொழில்நுட்பங்கள் மூலமாக அவற்றைச் சரிசெய்துகொள்ளலாம். போன பிள்ளைகளை பற்றிய வேதனையை மறந்துவிட்டு, இருக்கும் பிள்ளைகளை சரிசெய்யும் வழிமுறைகளைக் கைக்கொள்ளுங்கள் என அவர்கள் தோள்மீது கைபோட்டு ஆறுதலாகத் தேறுதலுக்கான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்க நினைத்தோம்.

அதன் தொடர்ச்சியாக, கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தோம். டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களிலும் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று பட்டுக்கோட்டையில் நடந்த பயிற்சியை பற்றித்தான் முதல் பாராவில் குறிப்பிட்டோம். இன்று பேராவூரணி அருகேயுள்ள தென்னங்குடி கிராமத்தில் பயிற்சி நடைபெற்றது. பசுமை விகடன் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சியில், சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்.

தென்னை விவசாயத்தில் இதுவரை நாம் செய்த தவறுகள் என்ன? இனி செய்ய வேண்டியது என்ன? புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை எப்படி மீட்டெடுப்பது? முதலுதவி முறைகள். நடவு முறைகள், வீழ்ந்து கிடப்பவற்றை உரமாக்கும் யுக்திகள், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள் என ஏராளமான தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொண்டார். எளிமையான மொழியில், உதாரணங்களுடன் விளக்கிப் பேசியது விவசாயிகளை வெகுவாக கவர்ந்தது. தேவையான நேரத்தில் தேவையான உதவியாக இந்த ஆலோசனைகள் அமைந்தன. இப்படி ஒரு ஆலோசனைக்கு ஏற்பாடு செய்த விகடனுக்கு நன்றி என நெகிழ்ந்து போனார்கள் விவசாயிகள்.

வீழ்ந்து கிடக்கும் சக மனிதன் எழுந்திருக்கக் கைகொடுப்போமோ அதே போலத்தான் புயலால் வீழ்ந்து கிடக்கும் தென்னை விவசாயத்தைத் தூக்கி நிறுத்தும் ஒரு சிறு முயற்சிதான் இந்த பயிற்சி. இது விவசாயிகளிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பகுதிக்கும் இதுபோன்ற பயிற்சி வகுப்பு தேவை என விவசாயிகள் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள். அவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைகோப்போம்... கஜா துயர் துடைப்போம்...