Published:Updated:

ஊடுபயிரில் உன்னத வருமானம்... டெல்டாவில் மணக்கும் நாட்டுக் கறிவேப்பிலை!

ஊடுபயிரில் உன்னத வருமானம்... டெல்டாவில் மணக்கும் நாட்டுக் கறிவேப்பிலை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஊடுபயிரில் உன்னத வருமானம்... டெல்டாவில் மணக்கும் நாட்டுக் கறிவேப்பிலை!

மகசூல்

பெரும்பான்மையான உணவில் இடம்பெறும் விளைபொருள்களில் கறிவேப்பிலையும் ஒன்று. ‘கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை’ என்றும் சொல்லும் அளவுக்கு அனைத்து வகை உணவுகளிலும் தாளிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது, கறிவேப்பிலை. இதற்குப் பல மருத்துவக் குணங்களும் இருப்பதால், சத்தான சந்தை வாய்ப்பும் இதற்கு இருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இது பயிரிடப்பட்டாலும்... திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தனிப்பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வீட்டுத்தோட்டப்பயிராக மட்டுமே வளர்க்கப்படும் கறிவேப்பிலையைத் தென்னையில் ஊடுபயிராக 30 சென்ட் பரப்பில் சாகுபடி செய்து வருகிறார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை.

ஊடுபயிரில் உன்னத வருமானம்... டெல்டாவில் மணக்கும் நாட்டுக் கறிவேப்பிலை!

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டி எனும் கிராமத்தில் இருக்கிறது, அண்ணாதுரையின் தென்னந்தோப்பு. இங்கு 30 சென்ட் பரப்பில் தென்னையில் ஊடுபயிராக நாட்டுக் கறிவேப்பிலையை அண்ணாதுரை சாகுபடி செய்து வருவது, இப்பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலைப்பொழுதில் அண்ணாதுரையைச் சந்திக்கச் சென்றோம். ‘தளதள’வெனச் செழிப்பாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்த கறிவேப்பிலைச் செடிகளுக்கு இடையிலிருந்து, புன்னகை மலர்ந்த முகத்துடன் நம்மை வரவேற்றுப் பேசினார், அண்ணாதுரை. “எட்டாவது வரைக்கும் படிச்சிட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். இது மணலும் கரிசலும் கலந்த இருமண் பாடு. எனக்கு ஒண்ணே முக்கால் ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றேன். முக்கால் ஏக்கர் நிலத்துல 21 அடி இடைவெளியில 65 தென்னை மரங்கள் இருக்கு. தென்னைக்கு இடையில 10 அடி இடைவெளியில மூணு வயசுல 250 தேக்கு மரங்கள் இருக்கு. தென்னந்தோப்புல பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, தானாவே ஒரு நாட்டுக் கறிவேப்பிலைச் செடி வளர ஆரம்பிச்சுது. அதை அப்படியே பராமரிச்சுப் பெருக்கிட்டேன். இப்போ 30 சென்ட் பரப்புல இருக்கு. அதிக மகசூல் கிடைக்கிற வீரிய ரகங்களோட வரவால இந்த ரகம் அழிஞ்சிட்டுருக்கு. சந்தையில இந்த ரகக் கறிவேப்பிலை கிடைக்கிறதேயில்லை.

அதனால, நாட்டுக் கறிவேப்பிலைக்குச் சந்தையிலயும்  நல்ல வரவேற்பு இருக்கு. திருக்காட்டுப்பள்ளி காய்கறிச் சந்தையிலதான் நான் கறிவேப்பிலையை விற்பனை செய்றேன். நான் கொண்டு போனதுமே உடனே நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிறாங்க. வாரத்துக்கு இரண்டு தடவை கறிவேப்பிலை ஒடிச்சிக்கிட்டுப் போயி, வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்றேன். ஜூலை மாசத்துல இருந்து ஜனவரி மாசம் வரைக்கும் மகசூல் அதிகமா இருக்கும். பிப்ரவரி மாசத்துல இருந்து ஜூன் மாசம் வரை மகசூல் குறைவாத்தான் இருக்கும். ஆனா, இந்த மாதங்கள்ல சந்தையில நல்ல விலை கிடைக்கும்” என்ற அண்ணாதுரை அறுவடை செய்த கறிவேப்பிலை ஈர்க்குகளைக் கட்டுக்களாகக் கட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊடுபயிரில் உன்னத வருமானம்... டெல்டாவில் மணக்கும் நாட்டுக் கறிவேப்பிலை!

“இதுக்கு எந்தப் பராமரிப்பும் கிடையாது. வறட்சியிலயும் தாக்குப்புடிச்சி வளரும். மாசத்துக்கு ரெண்டு தடவை தென்னைக்குப் பாய்ச்சக்கூடிய தண்ணீர்லதான் இங்க வளருது. வெயில் காலங்கள்ல ரெண்டு மாசம் வரைக்கும் தண்ணி விடலைனாலும் தாக்குப்பிடிச்சுக்கும். அதே மாதிரி, பூச்சி, நோய்த்தாக்குதல்களும் கிடையாது. தென்னை, தேக்கு மரங்களுக்கும் கறிவேப்பிலையால் எந்தப் பாதிப்பும் வர்றதில்லை. எனக்கு வாராவாரம் தொடர்ச்சியான வருமானத்தைக் கறிவேப்பிலைதான் கொடுத்துட்டுருக்கு” என்ற அண்ணாதுரை, மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“30 சென்ட் நிலத்துல ஊடுபயிரா இருக்குற கறிவேப்பிலைச் செடிகள்ல இருந்து வாரத்துக்கு 40 கட்டுகள் கிடைக்குது. ஒரு கட்டுக்கு 5 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விலை கிடைக்கும். பெரும்பாலும் 10 ரூபாய் அளவுக்கு விலை கிடைச்சுடும்.

பொங்கல் சமயங்கள்ல ஒரு கட்டுக்கு 30 ரூபாய் வரைகூட விலை கிடைக்கும். சராசரியா ஒரு வாரத்துக்கு 500 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுட்டுருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் எந்தப்பாடும் இல்லாம வருமானம் தர்ற ஒரே பயிர், நாட்டுக் கறிவேப்பிலை மட்டும்தான் இருக்கும்” என்று சொல்லி கட்டுகளைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமானார், அண்ணாதுரை. 

தொடர்புக்கு

அண்ணாதுரை,
செல்போன்: 97881 91470.

- கு.ராமகிருஷ்ணன்,  படங்கள்: ம.அரவிந்த்

வேப்பங்கொட்டைக் கரைசல்

தோலுடன் உலர்த்தப்பட்ட 5 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் நன்கு இடித்து, அதனுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து ஊற வைத்து, தினமும் இருவேளைகள் கலக்கிவிட வேகண்டும். 3 நாள்களுக்குப் பிறகு இக்கரைசலை மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். 1 லிட்டர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாவுப்பூச்சி மட்டுமல்லாமல் மற்ற பூச்சிகள் தாக்கினாலும் இதே கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

கறிவேப்பிலைச் சாகுபடி பாடம்!

கறிவேப்பிலையைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து அண்ணாதுரை சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே...

தேர்வு செய்த நிலத்தில் 30 சென்ட் நிலத்துக்கு அரை டன் என்ற கணக்கில் தொழுவுரம் இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். 2 அடி இடைவெளியில் முக்கால் அடி ஆழத்துக்குக் குழி எடுத்து நாட்டுக் கறிவேப்பிலைக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். செடியை 5 அடி உயரத்துக்கு மேல் வளரவிடாத அளவுக்குக் கவாத்துச் செய்து வர வேண்டும். பக்கக் கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். மூன்று மாதங்களிலிருந்து கறிவேப்பிலையை ஒடிக்கலாம். கணுக்கள் உருவாகி வளர்ந்த மூன்று மாதங்களுக்குள் கறிவேப்பிலையை ஒடித்துவிட வேண்டும். இல்லாவிடில், அவை பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும்.

கறிவேப்பிலை ஈர்க்குகளை ஒடித்த இடத்தில் புதிய துளிர்கள் உருவாகும்போது மாவுப் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. அதனால், அவ்வப்போது வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வர வேண்டும். ஒருமுறை நாட்டுக் கறிவேப்பிலைச் செடிகளை நடவு செய்தால் 50 ஆண்டுகளுக்கு மேல் நின்று பலன் கொடுக்கும். இச்செடிகளில் 6 மாத வயதில் பூ பூத்துக் காய்கள் உருவாகும். அவை பழங்களாகி, கீழே விழுந்து, தானாகச் செடிகள் உருவாகும். செடிகள் வாட்டமாக இருந்தால் மட்டும் இடுபொருள்கள் கொடுக்கலாம். இல்லாவிடில் எந்த இடுபொருளுமே தரத்தேவையில்லை. மண் வளமாக இருந்தால் நடவுக்கு முன் அடியுரம்கூட இட வேண்டியதில்லை.

கீரை மாதிரி வெந்திடும்!

நாட்டுக் கறிவேப்பிலை குறித்துப் பேசிய அண்ணாதுரை, “இந்த இலை ரொம்ப மென்மையா இருக்கும். இதைச் சமையல்ல சேர்க்கும்போது நல்லா வெந்து, கீரை மாதிரி ஆயிடும். அதனால, சாப்பிடும்போது இதை ஒதுக்கணும்னே தோணாது.

சாம்பார், ரசம், சட்னில எல்லாம் இதைத் தாளிச்சிப்போட்டால் நல்ல மணமா இருக்கும். இந்த இலைகளை நாலஞ்சு நாள் வெயில்ல காயவெச்சி, தூளாக்கி வெச்சும் தாளிக்கப் பயன்படுத்தலாம். இட்லிப்பொடியில இந்தத் தூளைக் கலந்து சாப்பிடலாம். நாட்டுக் கறிவேப்பிலையை அரைச்சு தலையில தேய்ச்சுக் குளிச்சா, இளநரை சரியாகும்னு சித்த மருத்துவருங்க சொல்றாங்க” என ஆலோசனை வழங்கினார்.