Published:Updated:

2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!

2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!

இயற்கை

வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றைக் கட்டுவதற்காகக் கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வாங்கிப்போட்ட நிலத்தில் அங்கக வேளாண்மை மேற்கொண்டு அசத்தி வருகிறார், அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய செந்தில் நாச்சிமுத்து.

செந்தில் நாச்சிமுத்துவின் விவசாயம் குறித்துக் கேள்விப்பட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவரைச் சந்திக்கச் சென்றோம். மாநகர எல்லைக்குள் வரிசை கட்டி நிற்கும் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு இடையில்... பெருநகரப் பேரிரைச்சல்களுக்கு மத்தியில்... பேரமைதியுடன் பசுமை போர்த்திக் காணப்பட்டது, செந்தில் நாச்சிமுத்துவின் ‘பூர்ணா அங்கக வேளாண் பண்ணை’. வேலியைத்தாண்டி உள்ளே சென்றோம்.

பண்ணைப்பணியில் இருந்த செந்தில் நாச்சிமுத்துவிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். வணக்கம் சொல்லி வரவேற்ற அவர், தன்னுடைய மனைவி சண்முகபிரியா, மகன்கள் கவின், கதிர் ஆகியோரை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“திருப்பூர் மாவட்டம், தாராபுரம்தான் எனக்குப் பூர்விகம். இஞ்சினியரிங் முடிச்சுட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா போனேன். அங்கேயே ஒரு கம்பெனி ஆரம்பிச்சுட்டேன். அமெரிக்காவுல கை நிறையச் சம்பாதிச்சாலும் சொந்த ஊர் மேல எப்பவும் எனக்குப் பாசம் உண்டு. ஊர்லதான் செட்டில் ஆகணும்னு முடிவு பண்ணி... இங்க கம்பெனி, வீடு ரெண்டையும் கட்டுறதுக்காக முன்னாடியே மாநகர எல்லைக்குள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டிருந்தேன். நான் பரம்பரை விவசாயக்குடும்பத்துல பிறந்தவன்கிறதால, கை நிறையக் காசு இருந்தாலும் சொந்த ஊர்ல விவசாயம் பண்ணனும்கிற ஆசையும் மனசுல இருந்தது. நேரம் கிடைக்கிற சமயங்கள்ல விவசாயம் பத்தின செய்திகளைத் தேடித்தேடிப் படிப்பேன். அப்படித்தான் ‘பசுமை விகடன்’ உள்ளிட்ட நிறைய விவசாயப் பத்திரிகைகள் எனக்கு அறிமுகமாச்சு.

2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதுமூலமா இயற்கை விவசாயம், நஞ்சில்லா உணவு பத்தி பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் நஞ்சில்லா உணவைச் சாப்பிடணும்னு முடிவு பண்ணி அமெரிக்காவுல ‘ஆர்கானிக்’ பொருள்கள் விற்பனை செய்ற இடங்களைத் தேட ஆரம்பிச்சேன். அதெல்லாம் நாங்க இருந்த இடத்துல இருந்து ரொம்பத் தூரத்துல இருந்துச்சு. இருந்தாலும் பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செஞ்சு வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சோம்.

ஒரு கட்டத்துல, அதாவது 2009-ம் வருஷம் அமெரிக்காவுல இருந்து இந்தியா திரும்ப வேண்டியதாகிடுச்சு. இங்க வந்த பிறகு, நான் வாங்கிப்போட்டிருந்த இடத்துல சில காரணங்களால வீடு கட்ட முடியலை. வேறு இடத்துல கட்ட வேண்டியதாகிடுச்சு. அந்த ரெண்டு ஏக்கர் நிலம் சும்மாதான் இருந்துச்சு. இங்க இயற்கை உணவுப்பொருள்களைத் தேடி வாங்க ரொம்பச் சிரமமா இருந்துச்சு. அதில்லாம, அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மாதிரியான பொருள்கள்தான் கிடைச்சது. நாங்க விரும்புற காய்கறிகள், கீரைகள், பழங்கள் தேவைப்படுற சமயங்கள்ல கிடைக்கலை.

அந்தச் சமயத்துலதான், ஒருநாள் எங்க சொந்தக்காரர் ஓ.வி.ஆர்.சோமசுந்தரம் எங்க வீட்டுக்கு வந்தார். அவர் இயற்கை விவசாயி. பொள்ளாச்சி ஒடையகுளம் பகுதியில இயற்கை விவசாயம் செய்றார். அவர்கிட்ட பேச்சு வாக்குல இயற்கைக் கீரை, காய்கறிகள் சரியாகக் கிடைக்கிறதில்லைனு சொன்னேன். அப்போ அவர்தான் ‘நீங்க சும்மா போட்டு வெச்சுருக்குற 2 ஏக்கர் நிலத்துல நீங்களே இயற்கை முறையில தேவையானதை விளைவிச்சுக்கலாமே’னு யோசனை சொன்னார்.

2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!

உடனே அந்த இடத்துக்கு அவரைக் கூட்டிட்டுப் போய்க் காட்டினேன். அவர் நிலத்தைப் பார்த்துட்டு ‘நல்ல வளமான பூமி. யோசனை பண்ணாம இயற்கை விவசாயத்துல இறங்குங்க’னு சொன்னார்.

அவரே பண்ணை வடிவமைப்புல இருந்து இடுபொருள் தயாரிப்பு வரை எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தார். அதோட கோயம்புத்தூர்ல இருக்குற வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்குக் கூட்டிட்டுப் போய்... அங்கக வேளாண்மைத்துறை தலைவர் முனைவர் சோமசுந்தரத்தையும் அறிமுகப்படுத்தி வெச்சார். அதுக்கப்புறம் பல்கலைக்கழகத்துல நடந்த அங்கக வேளாண்மைப் பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன்.

பிறகு, நிலத்துல ஒரு ‘போர்வெல்’ அமைச்சோம். தொண்ணூறு அடியிலயே தண்ணி கிடைச்சது. சோலார் மின்சாரத்துக்கு ஏற்பாடு பண்ணி மோட்டார் பொருத்தினோம். அடுத்து, சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனக் கருவிகளை அமைச்சு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம்” என்று விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன செந்தில் நாச்சிமுத்து, தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!

“5 சென்ட் அளவுல நிழல் வலைப்பந்தல் அமைச்சுருக்கோம். அதுல செங்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லினு கீரை வகைகளைச் சுழற்சி முறையில சாகுபடி பண்றோம். பச்சக்கத்திரி, நீலவரிக்கத்திரி, மூலனூர் வெள்ளைக்கத்திரி, உஜாலாக்கத்திரி, கறிவேப்பிலை, வெண்டை, அவரை, பூசணி, அரசாணி, முருங்கை, பப்பாளி, வெங்காயம், குண்டு மிளகாய், சம்பாமிளகாய், குடமிளகாய், தக்காளி, காலிஃப்ளவர்னு சாகுபடி பண்றோம். வருஷம் முழுசும் எல்லாக் காய்கறிகளும் கிடைக்கிற மாதிரி சுழற்சி முறையில நடவு செய்றோம். எந்தப்பயிர் சாகுபடியா இருந்தாலும்... பசுந்தாள் உரச்செடிகளோட விதைகளை விதைச்சு மடக்கி உழுத பிறகுதான் விதைப்போம். அதோட உயிர் உரங்களைத் தொழுவுரத்துல கலந்து ஊட்டமாக்கி நிலத்துல போடுவோம். 80 அடி நீளம், 3 அடி அகலம், 1 அடி உயரத்துல நீள நீளமா மேட்டுப்பத்திகளை அமைச்சு அதுலதான் காய்கறி நாற்றுகளை நடவு செஞ்சுருக்கோம். விதையா விதைச்சாலும் சரி, நாற்றா நடவு செய்தாலும் சரி 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசல்ல விதைநேர்த்தி செஞ்சுதான் நடவு செய்வோம். எப்பவும் காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் தண்ணீர் பாசனம் பண்ணுவோம். ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 20 வகையான பயிர்கள் இருக்கும்.

2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!

சுழற்சி முறையில மாத்தி மாத்தி விதைச்சுக்கிட்டே இருக்குறதால வருஷம் முழுக்கக் காய்கறிகள் கிடைச்சுட்டே இருக்கும். இங்க கீரைக்காகக் கொஞ்சம் முருங்கையை நடவு பண்ணிருக்கோம். அதைக் கவாத்து பண்ணி செடியாவே வெச்சுருக்குறதால, தொடர்ந்து கீரை கிடைச்சுட்டே இருக்கும்.

வேலை அதிகமா இருக்குறதால, தினமும் காலை நேரத்துலயும், விடுமுறை நாள்கள்லயும் மட்டும்தான் தோட்டத்துக்கு வர முடியுது. அதனால, நான் இல்லேனாலும் இங்க வேலை சரியா நடக்கணும்கிறதுக்காக எப்போ இடுபொருள் தெளிக்கணும், எப்போ பூச்சிவிரட்டி தெளிக்கணும்னு அட்டவணை போட்டு வெச்சுருக்கோம். அதேமாதிரி எந்தெந்த சமயங்கள்ள இஞ்சிபூண்டுக்கரைசல் தெளிக்கணும், எந்தெந்த சமயங்கள்ல மூலிகைப்பூச்சிவிரட்டி தெளிக்கணும்னும் குறிச்சு வெச்சுருக்கோம். அதைச் சரியா பணியாளர்கள் செஞ்சுடுவாங்க. பண்ணை முழுக்கச் சி.சி.டி.வி கேமரா பொருத்தியிருக்கேன். நான் அமெரிக்காவுல இருந்தாலும், இங்க ஆபீஸ்ல இருந்தாலும் பண்ணையில நடக்குற வேலைகளைக் கவனிச்சுட்டே இருப்பேன்” என்ற செந்தில் நாச்சிமுத்து காய்கறி மகசூல் விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

2 ஏக்கர் நிலம்... மாதம் ரூ.60,000... மாநகரில் செழிக்கும் இயற்கை விவசாயம்!

“இங்க ஒரு நாளைக்கு 20 கிலோ தக்காளி, 10 கிலோ கத்திரி, 7 கிலோ வெண்டை, 3 கிலோ தட்டை, 5 கிலோ அவரை, 10 முருங்கைக்காய்கள், 3 அரசாணிக்காய்கள், 10 பப்பாளிப்பழங்கள், 50 கட்டுக் கீரைகள், 15 ஸ்வீட் கார்ன்கள் கிடைக்குது. அதுல எங்க வீட்டுக்குத் தேவையானது, சொந்தக்காரங்களுக்குக் கொடுத்தது போக மீதியை தோட்டத்துல வெச்சே விற்பனை செஞ்சுடுவோம். காய்கறிகள் விற்பனை மூலமா மாசத்துக்கு 60,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுல 3 பணியாளர்களுக்கு 30,000 ரூபாய் சம்பளம் போயிடும். இடுபொருள்தயாரிப்பு, பராமரிப்புக்கு 5,000 ரூபாய் வரை செலவாகிடும். இதுவரைக்கும் இங்க நிலத்துக்கான மதிப்பு இல்லாம மொத்தம் 9 லட்சம் ரூபாய் முதலீடு செஞ்சுருக்கேன். ரெண்டு மூணு வருஷத்துல அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துட முடியும்” என்ற செந்தில் நாச்சிமுத்து நிறைவாக,
 “இங்க பெருசா வருமானம் கிடைக்கணும் கிறதுக்காக விவசாயம் செய்யலை. இந்த நிலத்தோட மதிப்பே இப்போ கோடிகள்ல இருக்கு. அதனால பணம் பெருசுல்ல. அதில்லாம எனக்குச் சம்பாதிக்கிறதுக்கு வேற பிசினஸ் இருக்கு. நம்ம பிள்ளைங்க நஞ்சில்லாத உணவைச் சாப்பிடணும்கிறதுதான் எங்க ஆசை. அதுக்காகத்தான் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்கோம். விடுமுறை நாள்கள்ல என்னோட நண்பர்கள் அவங்க குழந்தைகளை இங்க கூட்டிட்டு வர்றாங்க. அவங்களுக்கெல்லாம் இயற்கை விவசாயம் பத்தி நான் சொல்லிக் கொடுத்துட்டுருக்கேன். எதிர்காலத்துல உப்பைத்தவிர வீட்டுக்குத்தேவையான அத்தனையையும் இங்கேயே உற்பத்தி செஞ்சுக்குற யோசனையும் வெச்சுருக்கேன்” என்று கண்களில் நம்பிக்கை பொங்க விடைகொடுத்தார், அந்த நவீன விவசாயி.

தொடர்புக்கு

செந்தில் நாச்சிமுத்து,
செல்போன்: 99525 55629

- ஜி.பழனிச்சாமி,  படங்கள்: தி.விஜய்