Published:Updated:

நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!

நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!

நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!

‘‘மல்லிகையில் எத்தனை வகைகள் உள்ளன. ‘ஜாஸ்மினம் நிட்டிடம்’ என்ற ரகம் உள்ளதாகக் கேள்விப்பட்டோம். இந்த ரகம் ஆண்டு முழுவதும் பூக்கும் என்கிறார்கள். இது உண்மையா?’’

எம்.பாலசுப்பிரமணி, ராமநாதபுரம்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்ச்சர் சயின்ஸ் பிரிவின் உதவிப்பேராசிரியரும், ஜாஸ்மினம் நிட்டிடம் ரகத்தின் ஆராய்ச்சியாளருமான  முனைவர் பெ.மணிமாறன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘வியாபார முக்கியத்துவம் வாய்ந்த மலர்களில் மல்லிகைக்கு ஒரு தனி இடம் உண்டு. மல்லிகை மலர் தமிழ் மக்களின் வாழ்வியல், கலாசாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. மல்லிகை உதிரி மலர்களாகவும், சரங்களாகவும், மாலையாகவும் அனைத்து சுபகாரியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மல்லிகை மலரிலிருந்து வாசனை திரவம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது அழகு சாதனப் பொருள்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மல்லிகைக்கு மருத்துவக் குணங்களும் உண்டு. மல்லிகையின் நறுமணத்தைக் கொண்டு மனிதனின் மூளை செயல்பாடுகளைச் சரிசெய்யவும், ரத்த அழுத்தம். மன உளைச்சல், படபடப்பின் மூலம் ஆற்றல் இழப்புப் போன்றவைகளுக்கு மல்லிகையைச் சித்த, ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், லண்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா, தாய்லாந்து, சீனா, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மல்லிகை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

இந்தியா அளவில், தமிழ்நாடு, மல்லிகை மலர் சாகுபடியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மதுரை, ஈரோடு, கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகமாக மலர் சாகுபடி நடந்து வருகின்றது.

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அந்த ரகத்தின் அறிவியல் பெயர் ஜாஸ்மினம் நிட்டிடம். கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள, மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறையில்தான், இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. உத்தேசமாக இரண்டு ஆண்டுகளில், இந்த ரகம் விவசாயிகள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படலாம்.

நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!

ஜாஸ்மினம் நிட்டிடம் மலர் மொட்டாக இருக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்திலும், மலர்ந்த பின்பு வெள்ளை நிறத்திலும் பல இதழ்களுடனும் நல்ல மணத்துடனும் காணப்படும். மலர் மொட்டு சுமாராக 4 செ.மீ நீளம் வரை இருக்கும். தோற்றத்தில் பிட்சி (ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்) செடிப் போன்று இருக்கும். ஆனால், பிட்சி மலரைவிட நீளமான மலர்க் காம்புகளையும், மலர் மொட்டுகளையும் உடையது. அதேபோல் பிட்சி மலரைவிட நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.

மல்லிகையில் சுமாராக 120 சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் குண்டுமல்லி, பிட்சி மற்றும் முல்லைப் போன்ற மூன்று வகை மட்டுமே வியாபார ரீதியாக முக்கியமானவை. விற்பனை வாய்ப்புகள் சிறப்பாக இருப்பதால், இதை விவசாயிகளும் விரும்பிச் சாகுபடி செய்கிறார்கள். ஆனால், இந்த மூன்று வகைகளிலும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை மலர் விளைச்சல் இருப்பதில்லை. அதே சமயம், ஆராய்ச்சியில் உள்ள ஜாஸ்மினம் நிட்டிடம் ரகத்தில் ஆண்டு முழுவதும் மலர் விளைச்சல் இருக்கும். மற்ற மல்லிகை வகைகள், சந்தையில் கிடைக்காத நேரத்தில், இந்த வகை விளைச்சலில் இருக்கும். இதனால், இதைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்த ரகத்தை மலர் சரங்களாகவும் மாலையாகவும், மற்ற மலர்களுடன் சேர்த்து பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும். இந்த மலர்ச் செடி பெரும்பாலான பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து இயற்கையாகவே தற்காத்துக்கொள்ளும் தன்மையினையும் கொண்டுள்ளது. இதை வடிகால் வசதி உள்ள நிலங்களில் சாகுபடி செய்யலாம். குறிப்பாக வண்டல் மண்ணில் சிறப்பாக வளரும்.

வழக்கமான மல்லிகை ரகங்களை நடவு செய்வதுபோல, ஜூன் முதல் நவம்பர் வரையான மாதங்களில் இந்த ரகத்தை நடவு செய்யலாம். மண்ணின் தன்மைக்கு ஏற்ப வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். இந்த மலர் ரகம் வெளியிடப்பட்டால், விவசாயிகளுக்கு மிகச்சிறந்த வருமானம் தரக்கூடிய பயிராக அமைய வாய்ப்புகள் உண்டு.’’

தொடர்புக்கு, செல்போன்: 96260 88932.

- புறாபாண்டி,  ஓவியம்: வேலு

நீங்கள் கேட்டவை: நல்ல விளைச்சல் தரும் புதிய வகை மல்லி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.