Published:Updated:

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!

விவசாயிகளின் 35 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு அரசு இனியும் மதிப்பளிக்காமல் இருந்தால், வீதியில் இறங்கி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம் என்று சவால் விடுக்கின்றனர் பி.ஏ.பி (பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம்) பாசன விவசாயிகள். கடந்த அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் நகரில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற்றது.

இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். அன்றைய தினம் திருப்பூரே விவசாயிகள் பேரணியால் ஸ்தம்பித்தது. பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகள் பெரும்படையாக நடந்துசென்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டார்கள். இந்தப் போராட்டத்துக்குத் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!

பேரணி குறித்துத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனனிடம் பேசினோம். “பி.ஏ.பி திட்டத்தில் அங்கம் வகிக்கும் 6 ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கின்றன. மற்ற 3 ஆறுகளோ மலையடிவாரத்தின் சமவெளிப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி, சுரங்கப்பாதைகள் மற்றும் கால்வாய்கள் வழியாகத் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆரம்பக் காலத்தில் 32 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைத்தது. ஆனால், பின்நாள்களில் மழைப்பொழிவு வெகுவாகக் குறைந்துபோனதால், தற்போது 13 டி.எம்.சி அளவுக்கே தண்ணீர் கிடைக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!

அதனால், ஆனைமலையாறு அணையை நாம் கட்டும்பட்சத்தில், இட்டலியாறு வழியாகக் கேரளாவின் இடமலையாறு பகுதிக்குச் செல்லும் தண்ணீரில் சுமார் 2.5 டி.எம்.சி நீர் தமிழகத்துக்குக் கிடைக்கும். அதேபோல, கடந்த 40 ஆண்டுகளில் மேல்நீராறு பகுதியில் மட்டும் சராசரியாக 9 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தத் தண்ணீர் சோலையாறு வழியாகப் பரம்பிக்குளம், தூணக்கடவு, சர்க்கார்பதி மின்நிலையம் ஆகியவற்றைக் கடந்து திருமூர்த்தி அணையை அடைய 3 நாள்களுக்கு மேலாகிவிடுகிறது. இந்த நீண்ட பயணத்தினால் ஏற்படும் தண்ணீர் விரயம் 2.5 டி.எம்.சி. குறிப்பாகப் பரம்பிக் குளத்திலிருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீரைக் கொண்டு செல்லும் கான்டூர் கால்வாயின் அளவும் 1,150 கனஅடி மட்டுமே இருப்பதால், அங்கு நீர்வரத்து அதிகமாக உள்ள காலங்களிளெல்லாம், அதிகப்படியான நீர் வீணாகச் சென்று அரபிக் கடலில்தான் போய்க் கலக்கிறது. எனவே நல்லாறு அணையைத் தமிழக அரசு கட்டினால், வீணாகச் செல்லும் தண்ணீர் அனைத்தும் முழுமையாக நமக்குக் கிடைப்பதோடு, மேல் நீராறு அணையிலிருந்து நேரடியாகவே நல்லாறு அணைக்குச் சுரங்கப்பாதையின் மூலம் சுமார் 7.25 டி.எம்.சி தண்ணீரைக் கொண்டு சேர்க்க முடியும். இந்த 2 அணைகளையும் கட்டிக்கொள்ள நமக்கு முழுமையான உரிமை இருந்தும்கூட, தமிழக அரசு இதுவரை அதற்கான எந்தவொரு முயற்சிகளையும் எடுக்கவில்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.

பி.ஏ.பி திட்டக்குழு தலைவர் பரமசிவம் பேசியபோது, “பி.ஏ.பியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் என்றைக்குமே இல்லாத அளவுக்கு இந்தாண்டு அதிக மழைப்பொழிவு இருந்திருக்கிறது. ஆனால், அதில் வீணாகச் சென்று அரபிக்கடலில் கலந்த தண்ணீரின் அளவு மட்டும் சுமார் 25 டி.எம்.சி. ஒருநாளைக்கு பி.ஏ.பியிலிருந்து சுமார் 1.25 லட்சம் கனஅடி நீர் வீணாக வெளியேறியிருக்கிறது. அதேசமயம் கேரள அரசு கட்டி முடித்த இடமலையாறு அணையும், இத்தனை ஆண்டுகளில் தற்போதுதான் முதன்முறையாக முழுக் கொள்ளளவில் நிரம்பியிருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தத் தருணத்தைப் பயன்படுத்தியாவது கேரள அரசுடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தி ‘ஆனைமலையாறு - நல்லாறு’ அணைகளைக் கட்டுவதற்கான வேலைகளைத் துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். அரசியல் கட்சிகளால் தேர்தல் காலங்களில் மட்டுமே பேசக்கூடிய விஷயமாக இருந்துவரும் ‘ஆனைமலையாறு - நல்லாறு’ திட்டத்தை, இனி ஒருபோதும் அவ்வாறே விட்டுவைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார் தெளிவாக.

- தி.ஜெயப்பிரகாஷ்

ஆலோசனை நடத்திய அமைச்சர்!

திருப்பூரில் விவசாயிகள் பேரணி முடிவடைந்ததும், தமிழகச் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும், பொள்ளாச்சி தொகுதி எம்.பி மகேந்திரனும் ஒன்றாக வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்கள். இதை அவ்விருவருக்கும் எதிர்கோஷ்டியாக உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ரசிக்கவில்லை.

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!

இதனால், கடந்த 16-ம் தேதி சில விவசாய அமைப்பினரை மீண்டும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வரவழைத்த அமைச்சர் ராதாகிருஷ்ணன், தன் பங்குக்குத் தனியாக ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, திட்டம் நிறைவேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிவிட்டு கிளம்பினார். இவர்களுக்குள்ளேயே இப்படியொரு கோஷ்டி பூசலை வைத்துக்கொண்டு, எப்படித்தான் இந்தத் திட்டத்தை உருப்படியாக நிறைவேற்றப்போகிறார்களோ! என்று தலையில் அடித்துக்கொண்டு கிளம்பினார்கள் விவசாயிகள்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் ஒரு பார்வை!

தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசும், கேரளத்தில் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசும் ஆட்சி செய்துகொண்டு இருந்த காலம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் தண்ணீர், மேற்கு நோக்கி கேரளாவுக்குள் சென்று, வீணாக அரபிக்கடலில் கலந்துகொண்டிருந்தது. இந்த தண்ணீரைக் கிழக்கு நோக்கி தமிழகத்துக்குத் திருப்பிவிட்டால், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பகுதிகளின் வறண்ட நிலப்பரப்புகள் பாசன வசதி பெறும் என்று நினைத்தது தமிழக அரசு. இதற்காகக் கேரள அரசாங்கத்துடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி பி.ஏ.பி பாசன திட்டத்தை உருவாக்கியது தமிழக அரசு. இத்திட்டத்துக்கு அன்றைய பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார்.

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் - திருப்பூரைத் திணறடித்த பேரணி!

பி.ஏ.பி திட்டத்தின் மூலம் மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பெருவாரிப் பள்ளம், தூணக்கடவு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் உப்பாறு ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டன. அதில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு ஆகிய 2 அணைகள் மட்டும் கட்டப்படவில்லை. காரணம் கேரள அரசு இடமலையாறு என்ற பகுதியில் ஒரு அணையைக் கட்டிய பிறகே, தமிழகம் மேற்கண்ட 2 அணைகளைக் கட்ட வேண்டும் என்று இரு மாநில அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரள அரசும் 1985-யிலேயே இடமலையாற்றில் அணையைக் கட்டி முடித்துவிட்டது. ஆனால், இங்கே ஆனைமலை ஆற்றிலும், நல்லாற்றிலும் தமிழக அரசு கட்டவேண்டிய அணைகள் இன்றுவரை கட்டப்படாமலேயே இருக்கிறது. கேரளம் என்றைக்கு இடமலையாறு அணையைக் கட்டி முடித்ததோ, அப்போது முதல் இங்குள்ள பி.ஏ.பி விவசாயிகள் ஆனைமலையாறு - நல்லாறு அணைகளுக்கான கோரிக்கையை முன்வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது தேர்தல் காசுலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அரசியல்வாதிகளின் காதுகளில் விழுவதே இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் விவசாயிகள்.