Published:Updated:

விவசாய வருமானம் பெருகவேண்டுமா? - வழிகாட்டும் நாமக்கல் வேளாண் திருவிழா!

விவசாயத்திலுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றிச் சிலருக்குத் தெரியவில்லை, சிலருக்கு அதில் அனுபவம் இல்லை. இந்த இரண்டையும் ஒருங்கிணைப்பதே இந்தக் கண்காட்சியின் குறிக்கோள்.

விவசாய வருமானம் பெருகவேண்டுமா? - வழிகாட்டும் நாமக்கல் வேளாண் திருவிழா!
விவசாய வருமானம் பெருகவேண்டுமா? - வழிகாட்டும் நாமக்கல் வேளாண் திருவிழா!

நாமக்கல்லில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், ஐ.சி.ஏ.ஆர் (ICAR), நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் (கேவிகே), வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை இணைந்து நடத்தும் 'வேளாண் திருவிழா - 2018' என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று (டிசம்பர் 26) தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாள்களுக்கு (26, 27, 28) இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. வாழை, நெல், மக்காச்சோளம், துவரை, கரும்பு போன்றவற்றில் மகசூல் எப்படி அதிகரிப்பது, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர் செய்வது எப்படி என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதோடு கண்காட்சியில் சொட்டுநீர்ப் பாசனத்தில் உள்ள நவீன முறை, இயற்கை முறையிலான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. உரப் பயன்பாடு, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவை பற்றிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வழிகள் என்ற தலைப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளில் விவசாயிகளின் வேளாண் பொருள்களும், நவீன இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் வருகை புரிந்திருக்கின்றனர். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, ஈரோடு போன்ற சுற்றிலுமுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடக்க நாள் நிகழ்வில் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம், "இந்த வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியின் முக்கிய நோக்கமே விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கி, வருமானம் அதிகரிக்க வைப்பதே. விவசாயத்திலுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றிச் சிலருக்குத் தெரியவில்லை, சிலருக்கு அதில் அனுபவம் இல்லை. இந்த இரண்டையும் ஒருங்கிணைப்பதே இந்தக் கண்காட்சியின் குறிக்கோள். அந்தக் குறையைப் போக்கவே விவசாயிகளுக்குத் தற்போது உள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் என்னென்ன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது போன்றவை குறித்து விளக்கிவருகிறோம்.  கெமிக்கல் முறையிலேயே எல்லாரும் விவசாயம் செய்து வந்தனர். இப்போது அந்த முறை விவசாயம் மாறி வருகிறது. இயற்கை உரம், இயற்கைப் பூச்சிக்கொல்லியை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பலவற்றை இந்தக் கண்காட்சி மூலமாகக் கற்றுக்கொள்ளலாம். உற்பத்தி செலவை குறைத்து வருமானத்தை இரட்டிப்பாக அதிகரிக்கலாம். அது எப்படியென்றால், விவசாயத்தில் நமக்குத் தெரியாத பல நுட்பங்கள் உள்ளன, அவற்றை அந்த அனுபவம் உள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் போது எளிதாக அமைகிறது. நமக்குத் தெரியாததை தெரிந்தவர்களிடம் கற்றுக்கொண்டு விவசாயத்தை மேற்கொள்ளும் போது, விவசாயம் வெற்றிகரமாக அமையும். மூன்று நாள்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அனைவரும் பயனடைய வேண்டும்" என்றார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பா.மோகன் பேசியபோது, ``பொதுவாக விவசாயத்தில் வருமானம் ஈட்டுவதை விட, அதில் ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பது எப்படி என்பதை முதலில் பார்க்க வேண்டும். கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தைச் சரியாகக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும். கலப்பு தீவனம் என்பது கால்நடைகளுக்கு முக்கியமான ஒன்றாகும். மக்காச்சோளம், பிண்ணாக்கு, தவிடு, மினரல் மிக்ஸர் போன்றவற்றின் கலவையே இது. இது ஒரு நாளைக்கு இரண்டுவேளை வீதம் கொடுத்து வந்தால் பசு மாடு ஆரோக்கியமாக இருக்கும், அதுமட்டுமல்லாமல் நிறைய பாலை கொடுக்கும். பிண்ணாக்கைக் கொடுத்தால் மாடு இளைத்துப் போகும் என்ற கருத்து நிலவி வருகிறது. இது முற்றிலும் தவறான ஒன்று. எள் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு நிச்சயம் தரலாம். மனிதர்களுக்கு இருப்பதுபோல விலங்களுக்கும் சிடி ஸ்கேன், எக்ஸ்-ரே இருக்கிறது. கால்நடைகளுக்கு எப்படிப்பட்ட நோய் இருந்தாலும் அவற்றை நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் எளிதில் கண்டறிய இயலும். பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் எவ்வளவு முக்கியமோ, அதுபோல கால்நடைகளுக்கும் இன்ஷூரன்ஸ் முக்கியம்" என்றார்.

தேனீ வளர்ப்பு முறையைப்  பற்றிப் பேசிய மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின், ``சரியாகக் கையாண்டால் தேனீ வளர்த்தாலும் லாபம் தரும் தொழிலே. ஆயிரம் வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத பொருள் தேன் மட்டுமே. தேனீக்கள் உண்ணும் பூக்களுக்கு ஏற்ப நாம் சாப்பிடும் தேனின் நிறம், சுவை மாறும். இந்தக் காலத்தில் தேனை எப்படிச் சாப்பிடுவது என்றே பலருக்கும் தெரியவில்லை. தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும். தேனீ வளர்ப்புக்கென்று பெரிய இடமோ அல்லது நிலமோ தேவையில்லை. நம் வீட்டு மொட்டை மாடியில் பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்கலாம்.தேனீ வளர்ப்பு பற்றி சரியான விழிப்புஉணர்வு மக்களிடம் இல்லை. தேனீ கொட்டிவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கிறார்கள். ஜப்பான், கொரியா போன்ற வெளிநாடுகளில் `தேனீ விஷ சிகிச்சை' என்ற பெயரில் தேனீக்களைக் கொட்ட விட்டுச் சம்பாதிக்கிறார்கள். தேனீக்களிடம் கொட்டு வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது. தேனீ வளர்ப்பு கிராமம், நகரம் என எல்லா இடத்திலும் எல்லோராலும் எளிதாக வளர்த்துச் சம்பாதிக்க முடியும்" என்றார்.