Published:Updated:

‘கவர்ச்சியாகத்தான் பேசுவார்கள் ஏமாந்துவிடாதீர்கள்!’ - பொதுமக்களுக்கு விவசாயிகள் கோரிக்கை

‘கவர்ச்சியாகத்தான் பேசுவார்கள் ஏமாந்துவிடாதீர்கள்!’ - பொதுமக்களுக்கு விவசாயிகள் கோரிக்கை
‘கவர்ச்சியாகத்தான் பேசுவார்கள் ஏமாந்துவிடாதீர்கள்!’ - பொதுமக்களுக்கு விவசாயிகள் கோரிக்கை

``சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். அரசின் கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடினால் வெற்றிபெற முடியும்'' என்று சேலம் டு உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சக விவசாயிகளுக்கு ஆலோசனையும் சொன்னார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டியக்கத்தின் மாநிலப் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ``தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து இளவரசன்கோட்டை, தியாகத்துருவம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி என முக்கிய ஊர்களை இணைத்து, சேலம் மாநகரம் வழியாகத் தேசிய நெடுஞ்சாலை எண் 68 சேலம் டு உளுந்தூர்பேட்டை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.

அதற்கான நிலங்களை விவசாயிகளான எங்களிடம் பாக்கு மரத்துக்கு 25,000, தென்னை மரத்துக்கு 50,000, ஏக்கருக்கு ஒரு கோடி என ஆசை வார்த்தை கூறி நிலங்களைக் கையகப்படுத்தினார்கள். ஆனால், அவர்கள் சொன்னத் தொகையைக் கொடுக்கவில்லை. அதையடுத்து நாங்கள் உயர் நீதிமன்றம் சென்றோம். உயர் நீதிமன்றம் எங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இதுநாள் வரை வழங்கவில்லை.

இதனால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதே போல தற்போது சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உஷாராக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

சேலம் டு உளுந்தூர்பேட்டை சாலையால் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தச் சாலையை இன்னும் சரியாக முடிக்கவில்லை. சில இடங்களில் இருவழிப்பாதையாக இருப்பதால் இந்தச் சாலையில் வருபவர்கள் கும்பல் கும்பலாக மரணம் அடைகிறார்கள். இதுவரை 4,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சாலையை முழுமையாக நிறைவு செய்வதோடு எங்களுக்குப் பொங்கலுக்குள் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் இல்லையென்றால் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்'' என்றார்.