Published:Updated:

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!
பிரீமியம் ஸ்டோரி
மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

மகசூல்

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

மகசூல்

Published:Updated:
மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!
பிரீமியம் ஸ்டோரி
மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

குறைவான வேலையாள்கள் மூலம் குறைவான பராமரிப்பிலேயே தினசரி வருமானம் கொடுக்கக்கூடியவை மலர்கள். அதனால்தான் பல விவசாயிகள் மலர்ச்சாகுபடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், மருத்துவத்தேவைக்காகப் பயன்படும் செம்பருத்திப்பூவை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி.

எட்டயபுரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்துள்வாய்பட்டி எனும் கிராமத்தில்தான், பார்த்தசாரதியின் செம்பருத்தித் தோட்டம் இருக்கிறது. ஒரு காலை வேளையில், செம்பருத்திப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த பார்த்தசாரதியைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சொந்த ஊரு கோவில்பட்டி. விவசாயத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. எம்.எஸ்ஸி எலக்ட்ரானிக்ஸ் முடிச்சுட்டுச் சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க பத்து வருஷம் எந்திரம் மாதிரிதான் வேலை செஞ்சேன். அந்தச் சமயத்துல பக்கத்து வீட்டுல இருந்த நண்பர் மூலமா ‘பசுமை விகடன்’ புத்தகம் எனக்கு அறிமுகமாச்சு. அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அது மூலமாத்தான் இயற்கை விவசாயம் பத்தியும் அதோட முக்கியத்துவம் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் இயற்கை அங்காடிகளைத் தேடிப்பிடிச்சுக் கீரைகள், காய்கறிகள், மரச்செக்கு எண்ணெய்னு வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல வேலை ரொம்பப் போர் அடிக்கவும், 2015-ம் வருஷம் குடும்பத்தோடு ஊர் திரும்பிட்டேன்.

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

அடுத்தகட்டமா வருமானத்துக்கு என்ன பண்றதுனு யோசிச்சதுல, குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த நிலத்துல இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்தேன். என்ன பயிர் சாகுபடி செய்றதுனு நண்பர்கள், சொந்தக்காரங்கனு கேட்டுட்டுருந்தேன். ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லிட்டுருந்தாங்க. அப்படியே காலமும் ஓடிட்டுருந்துச்சு.

அந்தச் சமயத்துலதான், தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் இயற்கை முறையில் செம்பருத்திச் சாகுபடி செஞ்சிட்டு வந்த இப்ராஹிம் பத்தி பசுமை விகடன்ல கட்டுரை வந்துச்சு. உடனே அவரோட தோட்டத்துக்குப்போய்ப் பார்த்தேன். அவர் கொடுத்த தைரியத்துலதான் செம்பருத்திச் சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்தேன்” என முன்கதை சொன்ன பார்த்தசாரதி தொடர்ந்தார்...

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

“மொத்தம் மூன்றரை ஏக்கர் கரம்பை நிலம். 15 வருஷமா எந்த விவசாயமும் செய்யாம சீமைக்கருவேல மரங்களா அடர்ந்து இருந்துச்சு. அதையெல்லாம் சுத்தப்படுத்திச் செம்மறி ஆட்டுக்கிடைபோட்டு நிலத்தைத் தயார் செய்தேன். மூன்றரை ஏக்கர் நிலத்துல 4,000 செம்பருத்திச் செடிகளை நடவு செய்தேன். அதில் 500 செடிகள் பட்டுப்போயிடுச்சு. இப்போ 3,500 செடிகள்ல இருந்து பூக்கள் கிடைச்சுட்டுருக்கு. கடந்த ஆறு மாசமா அறுவடை செஞ்சுட்டுருக்கேன். சென்னை, கோயம்புத்தூர், டெல்லி நகரங்கள்ல இருக்கற சித்தமருந்து தயாரிக்கிற கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து விற்பனை நிலையங்கள், அழகுசாதன பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள்னு தேடிப்பிடிச்சு நேரடியா பூக்களை விற்பனை செய்துட்டுருக்கேன். உள்ளூர்ல இருக்குற சித்த மருத்துவர்கள் மணப்பாகு தயாரிக்கிறதுக்காகத் தோட்டத்துக்கே வந்து வாங்கிக்கிறாங்க” என்ற பார்த்தசாரதி வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

“பூக்களைப் பறிச்சு அப்படியே கொஞ்சம் பூவை விற்பனை செஞ்சுடுவேன். மீதியைக் காய வெச்சு விற்பனை செய்றேன். 100 கிலோ பூவைக் காயவெச்சா 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத 200 கிலோ பூக்களைக் கிலோ 200 ரூபாய்னு விற்பனை செஞ்சுருக்கேன். அது மூலமா 40,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. 3,154 கிலோ பூக்களை உலர வெச்சதுல 616 கிலோ உலர்ந்த பூக்கள் கிடைச்சிருக்கு. உலர்ந்த பூக்கள் கிலோ 490 ரூபாய்ல இருந்து 750 ரூபாய் வரை விற்பனையாயிருக்கு. 616 கிலோ பூக்கள் விற்பனை மூலமாக 3,08,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சுருக்கு. மொத்தமாப் பார்த்தா 3,48,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இதுவரைக்கும் நிலத்தயாரிப்பு, செடிகள், சொட்டுநீர்னு 1,13,000 ரூபாய் நிரந்தரச் செலவாகியிருக்கு. களை எடுப்பு, இடுபொருள்னு 1,58,000 ரூபாய் பராமரிப்புச் செலவாகியிருக்கு. மொத்தமா இதுவரைக்கும் 2,71,000 செலவாகியிருக்கு. அதைக்கழிச்சா 77,000 ரூபாய் லாபம்” என்ற பார்த்தசாரதி நிறைவாக,

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

“இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும். பராமரிப்புச் செலவும் குறைஞ்சுடும். அதுக்கப்புறம் லாபம் அதிகரிக்கும். அதில்லாம, செம்பருத்தியில இருந்து தேநீர்ப்பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி பானம், செம்பருத்தி ஜாம்னு மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அப்படி விற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டா கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பிச்சுடும்” என்றார், நம்பிக்கையுடன்.  

தொடர்புக்கு,

பார்த்தசாரதி,

செல்போன்: 99430 06666

 - இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

இஞ்சி, பூண்டுக் கரைசல்

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைத் தலா அரைக் கிலோ அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உரலில் இடித்து 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 5 நாள்கள் வரை ஊற வைத்து வடிகட்டினால் கரைசல் தயாராகிவிடும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

இயற்கை முறையில் செம்பருத்திச் சாகுபடி செய்வது குறித்துப் பார்த்தசாரதி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

செம்பருத்திச் சாகுபடிக்குக் கரிசல் மண், கரம்பை மண் நிலங்கள் ஏற்றவை. ஆனி, ஆடிப்பட்டங்கள் நடவுக்கு உகந்தவை. மழைக்கு முன்பாக நடவு செய்தால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை உழவு செய்ய வேண்டும். பிறகு 6 அடி இடைவெளியில் ஒரு கனஅடி அளவில் குழிகள் எடுக்க வேண்டும். பிறகு சொட்டுநீர்ப் பாசனக்குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழிக்குள்ளும் தலா ஒரு கூடை தொழுவுரம் போட்டு 10 நாள்கள் ஆறவிட வேண்டும். பிறகு 2 மாத வயதுள்ள செம்பருத்திச் செடிகளை நடவு செய்து தண்ணீர் விட வேண்டும். முதல் மாதம் நிலம் காயாத அளவுக்குத் தண்ணீர் மட்டும் கொடுத்துவந்தால் போதுமானது. 2-ம் மாதத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

செம்பருத்திச் செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் மாவுப்பூச்சிகள் தாக்கினால், 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி இஞ்சி பூண்டுக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 4 மாதங்களுக்கு ஒருமுறை களைச்செடிகளை அகற்றி மூடாக்கிட வேண்டும். ஒவ்வொரு முறையும் களை எடுத்த பிறகு, ஒவ்வொரு செடியின் தூரிலும் தலா 250 மில்லி பஞ்சகவ்யாவை ஊற்றி விட வேண்டும். செடிகள் வாடிக்காணப்பட்டால், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். செம்பருத்திக்கு அதிக ஊட்டம் தேவையில்லை. ஊட்டம் அதிகம் கொடுத்தால் செம்பருத்தியின் இலைகள் சிவப்பு நிறமாக மாறி, பூக்களின் எண்ணிக்கை குறையும்.

நடவு செய்த 9-ம் மாதத்துக்குப் பிறகு பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். 12-ம் மாதத்துக்குப் பிறகு பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காலை 10 மணிக்குள் பூக்களைப் பறித்துவிட வேண்டும். பூ பூக்கத் தொடங்கி ஓர் ஆண்டு முடிந்ததில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்பாகச் செம்பருத்திச் செடிகளை ஓர் அடி உயரம் வரை மட்டும் விட்டு கவாத்துச் செய்து விட வேண்டும். கவாத்து செய்த 3 மாதத்துக்குள் மீண்டும் பூக்கத் துவங்கும். செம்பருத்தியில் ஆண்டுக்கு 9 மாதங்கள் தொடர்ச்சியாகப் பூப்பறிக்கலாம். தொடர்ந்து 15 முதல் 18 ஆண்டுகள் வரை பூ பறிக்கலாம்.

மூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..!

நிழலில் காய வைக்கவும்

செம்பருத்திப் பூக்களை வெயிலில் காய வைக்கக்கூடாது. அப்படிக் காயவைத்தால் சத்துக்கள் போய்விடும். நிழல்பகுதி அல்லது தனி அறையில் பாலித்தீன் ஷீட்டுகளை விரித்துக் காய வைப்பதுதான் சரி. இப்படிக் காய வைத்தால் நன்கு உலர மூன்று முதல் மூன்றரை நாள்கள் ஆகும். சத்துக்களும் அப்படியே இருக்கும். நன்கு காய்ந்த பூக்கள் பீட்ரூட் கிழங்கு நிறத்துக்கு மாறிவிடும். காய்ந்த பூக்களைச் சாக்குப் பைகளில் இட்டுத் தண்ணீர், குளிர் காற்றுப்படாமல் வைத்தால் 8 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். தண்ணீர் பட்டுவிட்டால், பூஞ்சணம் பிடித்துவிடும்.