பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றி வந்தவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். இவர் கடந்த சில மாதங்களாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இவர்களில் சிலர் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்பதாகவும் சிலர் நிதியுதவியும் அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோரும் சந்தித்து பேசினர்.

இந்நிலையில் முதல்வர் எடப்படி பழனிசாமி நெல் ஜெயராமனுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது, “ஜெயராமனை நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தோம். அவருக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் என்பதை அவரிடம் தெரிவித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் செய்தி தனக்கு ஊக்கமளிப்பதாக ஜெயராமன் தெரிவித்தார். அவருக்கு என்ன மாதிரியான உதவி வேண்டுமோ அதை அரசு செய்வதாக அவரின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளோம். தற்போது அவரின் உடல் நலம் சீராகி வருகிறது. அவர் அனைவரிடமும் நன்றாகப் பேசி வருகிறார்” என்று தெரிவித்தார் அமைச்சர்.