Published:Updated:

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!
பிரீமியம் ஸ்டோரி
மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

மகசூல்

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

மகசூல்

Published:Updated:
மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!
பிரீமியம் ஸ்டோரி
மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

இயற்கை விவசாயம் குறித்து ஏற்பட்டு வரும் விழிப்பு உணர்வு காரணமாக, நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாய முறைக்கு மாறி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளும் இயற்கை வேளாண்மை குறித்த திட்டங்களைச் செயல்படுத்த துவங்கி உள்ளன. அப்படியொரு திட்டம்தான், ‘பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா’ (Paramparagat Krishi Vikas Yojana) எனும் திட்டம். தமிழில் ‘பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டம்’ என்று அழைக்கப்படும் மத்திய அரசின் இத்திட்டம், கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைந்து, இயற்கை விவசாயத்துக்கு மாறி சம்பங்கி மலரைப் பயிரிட்டு நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்.

தர்மபுரியிலிருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோமனஅள்ளி. அங்கிருந்து இடதுபுறமாகச் செல்லும் சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் சென்றால் வருகிறது, பி.கொல்லஅள்ளி எனும் கிராமம். இக்கிராமத்தில் கரும்பு, மரவள்ளி, சாமந்திப் பூ வயல்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது, வெங்கடாசலத்தின் சம்பங்கித் தோட்டம். நம்மை இன்முகத்தோடு வரவேற்ற வெங்கடாசலம், சம்பங்கித் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

“விவசாயம்தான் முழுநேரத்தொழில் எனக்கு. எங்க பகுதி செம்மண், களிமண், சரளை மண் கலந்த வளமான மண். இந்தப் பகுதில விளையுற கரும்புல சர்க்கரை பதம் அதிகமாக இருக்கும். இந்தக்கரும்புக்காகவே, இந்தப்பகுதியில பாலக்கோடு கூட்டுறவுச் சர்க்கரை ஆலையை ஆரம்பிச்சாங்க. ஆலை இருக்குறதால, இந்தப் பகுதியில அதிகமா கரும்பு போடுவோம். நானும் ரெண்டு ஏக்கர்ல கரும்பு போட்டிருக்கேன். அதோட, நெல், சாமந்தி, சம்பங்கி, நிலக்கடலைனு சாகுபடி செஞ்சிட்டுருக்கேன்.

ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சிட்டு இருந்தேன். 2016-ம் வருஷம் பாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார்தான், ‘பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டம்’ பத்திச் சொல்லி அதுல இணையச் சொன்னார். ரசாயன உரம், பூச்சிக்கொல்லியையெல்லாம் அந்தத் திட்டத்துல பயன்படுத்தக்கூடாதுனு சொன்னதும் அரை மனசாத்தான் ஒத்துக்கிட்டேன். அடுத்ததா, எங்க பகுதியில 50 விவசாயிகள் இணைஞ்சு ‘பி.கொல்லஅள்ளி பாரம்பர்ய விவசாயிகள் குழு’னு ஆரம்பிச்சோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

அதுக்கப்புறம், எங்களை ஹைதராபாத், தமிழகத்துல சில பகுதிகள்னு அழைச்சிட்டுப் போய் இயற்கை விவசாயப்பயிற்சி கொடுத்தாங்க. இயற்கை இடுபொருள்கள் வாங்குறதுக்குத் தேவையான உதவிகள் செஞ்சதோடு ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பத்திலைக் கரைசல் மாதிரியான இடுபொருள்களைத் தயாரிக்கிற விதத்தை எங்க தோட்டத்துக்கே வந்து சொல்லிக் கொடுத்தாங்க. எங்ககிட்ட கலப்பின மாடுகள்தான் இருக்குதுங்கிறதால மாட்டு மூத்திரத்தைக் கொஞ்சம் அதிகமாச் சேத்துக்கச் சொல்லிருக்காங்க. அதாவது, நாட்டு மாட்டு மூத்திரத்துல 5 லிட்டர் சேர்க்கணும்னா, கலப்பின மாட்டு மூத்திரத்தை 10 லிட்டர் சேர்த்துக்குறோம். இந்த இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சபிறகு நல்ல பலன் கிடைச்சது. நான் ரொம்ப ஆர்வத்தோடு சிறப்பா இயற்கை விவசாயம் செஞ்சதால என்னையே எங்கக்குழுவுக்குத் தலைவராக்கிட்டாங்க. இப்போ முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கேன்” என்று தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன வெங்கடாசலம் தொடர்ந்தார்.

“மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 2 ஏக்கர்ல கரும்பு இருக்கு. 1 ஏக்கர் 20 சென்ட்ல சம்பங்கி இருக்கு. மீதி நிலத்துல சாமந்தி போட்டு அறுவடை முடிஞ்சுடுச்சு. இயற்கைக்கு மாறுன உடனே முதல்ல நெல்தான் போட்டேன். ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைச்சது. அடுத்து கேவரு (கேழ்வரகு) போட்டேன். இப்போ சம்பங்கி போட்டிருக்கேன். கேவரு போட்டு அறுவடை செஞ்சுட்டு சம்பங்கி போட்டா பூஞ்சணத்தாக்குதல் இல்லாம கிழங்கு நல்லா முளைச்சு வளரும்.

தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்ல பூ விற்பனைக்குப் பிரச்னை இல்லை. அதனால, எப்பவுமே பூ சாகுபடி செய்றதை வழக்கமா வெச்சுருக்கேன். சம்பங்கி, சாமந்தி ரெண்டையும் சாகுபடி செய்றேன். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை சமயங்கள்ல சாமந்திப் பூ நல்லா விற்பனையாகும். இந்தத் தடவை சாமந்திப் பூ கிலோ 160 ரூபாய் வரை விற்பனையாச்சு. சம்பங்கி, கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகிருக்கு. முன்னாடி நாட்டுச் சம்பங்கிதான் சாகுபடி செய்வேன். அது நல்ல மணமா இருக்கும். ஆனா, மகசூல் குறைவாத்தான் இருக்கும். அதனால, இப்போ, ‘பிரஜ்வல்’ங்குற வீரிய ரகச் சம்பங்கியை நடவு பண்ணிருக்கேன். இந்த ரக விதைக் கிழங்கு ஒரு டன் 25,000 ரூபாய். இதுல அதிக மகசூல் கிடைக்கும். போன பங்குனி (மார்ச்) மாசம் நடவு செஞ்சேன். இப்போ மூணு மாசமா அறுவடை செஞ்சுட்டுருக்கேன்” என்ற வெங்கடாசலம், சம்பங்கி மூலம் எடுத்து வரும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

“1 ஏக்கர் 20 சென்ட் நிலத்துல சம்பங்கி இருக்கு. ஆகஸ்ட் மாசத்துல இருந்து அறுவடை செய்றேன். ஆகஸ்ட் மாசம் குறைவாத்தான் மகசூல் கிடைச்சது. செப்டம்பர் மாசத்துல கொஞ்சம் அதிகரிச்சது. சராசரியா தினமும் 10 கிலோ அளவுக்குக் கிடைச்சது. அதுக்கப்புறம் தினமும் சராசரியா 15 கிலோ அளவுக்குப் பூ கிடைக்குது. இங்க கிணத்துப் பாசனம்தான். மழை சரியாக் கிடைக்காததால கிணத்துல தண்ணீர் குறைவாத்தான் இருக்கு. தண்ணி நிறைய இருந்தா இன்னும் கூடுதல் மகசூல் கிடைச்சுருக்கும். இதுவரைக்கும் 800 கிலோ பூ கிடைச்சுருக்கு. ஒரு கிலோ பூ 30 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகியிருக்கு. அந்த வகையில இந்த மூணு மாசத்துல சம்பங்கி மூலமா 50,000 ரூபாய் கிடைச்சுருக்கு. போன அக்டோபர் மாசம் மட்டும் 27,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இனி தொடர்ந்து மாசம் 30,000 ரூபாய் அளவுக்குக் கண்டிப்பா வருமானம் கிடைக்கும். இதுவரை வந்த வருமானம் செலவுக்கே சரியாகிடுச்சு. இனி வர்றதெல்லாம் லாபம்தான். இயற்கை முறையில விளைவிக்கிறதால இடுபொருள் செலவும் குறைவாத்தான் இருக்கு. நல்லாப் பராமரிச்சா நாலு வருஷத்துக்கு மேல மகசூல் கிடைக்கும்” என்ற வெங்கடாசலம் நிறைவாக,

“ஆரம்பத்துல வேண்டா வெறுப்பாத்தான் பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்துல சேர்ந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இப்போதான் அதோட அருமை தெரியுது. இயற்கைக்கு மாறின பிறகு சாகுபடிச் செலவு பெருமளவு குறைஞ்சுடுச்சு. எங்களை இந்தத்திட்டத்துல இணைச்சு இயற்கைக்கு மாத்துன வேளாண்துறை அலுவலர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு

வெங்கடாசலம்,
செல்போன்:
70946 10613

- த.ஜெயகுமார்,  படங்கள்: வ.யஸ்வந்த்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கர் நிலத்தில் பிரஜ்வல் ரகச் சம்பங்கியைச் சாகுபடி செய்யும் முறை குறித்து வெங்கடாசலம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

பிரஜ்வல் ரகச் சம்பங்கிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூ விற்பனை நன்றாக இருக்கும் என்பதால், மார்ச் மாதம் விதைப்பது நல்லது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு அல்லது நவதானிய விதைப்புச் செய்து வளர்ந்த பிறகு மடக்கி உழ வேண்டும். பிறகு ஐந்து கலப்பை கொண்டு இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு 250 கிலோ ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தைத் தூவி ரோட்டோவேட்டர் மூலம் உழ வேண்டும். தொடர்ந்து இரண்டு சால் உழவு ஓட்டி 2 அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். பாசனம் செய்ய வசதியாக 7 பார்களுக்கு ஒரு பாத்தி என்று அமைத்துக்கொள்ள வேண்டும். நிலத்தை ஈரமாக்கி ஓர் அடி இடைவெளியில் விதைக்கிழங்குகளை விதைக்க வேண்டும்.

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

விதைத்த 4-ம் நாளுக்கு மேல் முளைப்பு எடுக்கும். தொடர்ந்து வாரம் ஒருமுறை பாசனம் செய்து வர வேண்டும். 10-ம் நாளில் களையெடுத்து, 250 கிலோ ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தை இட வேண்டும். தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 250 கிலோ ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தை இட்டு வர வேண்டும்.

15-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். இதேபோலத் தொடர்ந்து 10 லிட்டர் தண்ணீரில் 250 மில்லி பஞ்சகவ்யா என்று கலந்து தெளித்து வர வேண்டும்.

30, 60, 90-ம் நாள்களில் களையெடுக்க வேண்டும். நுனிக்கருகல் நோய் தாக்கினால், தேமோர்க் கரைசலைத் தெளிக்க வேண்டும். இலைப்பேன் உள்ளிட்ட பூச்சிகள் தாக்கினால் மாட்டுச்சிறுநீர் அல்லது பத்திலைக்கரைசலைத் தெளிக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் பூ பறிக்கத் தினமும் 2 பேர் தேவைப்படும். அதிகபட்சம் 3 மணி நேரத்தில் பூக்களைப் பறித்துவிடலாம்.

ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம்

250 கிலோ தொழுவுரம், 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ சூடோமோனஸ், 1 கிலோ அசோஸ் பைரில்லம், 1 கிலோ ரைசோபியம் ஆகியவற்றை நன்றாகக் கலந்து... அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தத்தைத் தினமும் தெளித்து, கலக்கி வந்தால் 10 நாள்களில் ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம் தயார். இது மண்புழுப் பெருக்கத்துக்கு உதவி செய்வதோடு, மண் வளத்தை மேம்படுத்திப் பயிர்களைச் செழிப்பாக வளரச் செய்யும்.

பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டம்

பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டார வேளாண் அலுவலர் வேல்முருகன் சொன்ன தகவல்கள் இங்கே...

“இயற்கை விவசாயத்துக்காகவே செயல்படுத்தப்படும் திட்டம் இது. மூன்றாண்டுத் திட்டமான இது, 2015-ம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இந்தாண்டோடு முடிவடைகிறது. இந்தத் திட்டத்தின்போது தர்மபுரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட 4 குழுக்கள் மூலம் 200 ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாயத்தின்கீழ் வந்துள்ளன.

இந்தாண்டு புதிய விதிமுறைகளின்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு விரிவுபடுப்படுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி முதல் ஆண்டில் இடுபொருள் தயாரிப்பு மற்றும் நிலத்தினை அங்கக வேளாண்மைக்கு மாற்ற ஏக்கருக்கு 4,800 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 4,000 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 3,644 ரூபாயும் வழங்கப்படும். இயற்கை விவசாயப் பயிற்சி பெற ஒரு குழுவுக்கு 20,000 ரூபாயும் விதைகளுக்காக ஏக்கருக்கு 500 ரூபாயும் வழங்கப்படும்.

மாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி!

தமிழக அரசின் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டகலைத்துறை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 15 சதவிகித பிரீமியத்துடன் ஒரே மாதிரியான விலையுடன் அங்கக குழு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வேளாண் பொருள்களை விற்பனை செய்ய டாப் (TOP-தமிழ்நாடு ஆர்கானிக் புராடக்ட்ஸ்) என்ற பெயரில் ஒரே மாதிரியான விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகளில் முழு ஈடுபாட்டோடு உழைத்தால், இயற்கை விவசாயம்மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

இந்தத் திட்டத்தில் இணைவதற்கு 5 ஏக்கர் வரை அனுமதி உண்டு. விவசாயிகள் குழுவாக இணைந்துதான் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். இயற்கை விவசாய விளைபொருள்களை உற்பத்தியாளர் நிறுவனங்களோடு இணைந்து விற்பனை செய்வதற்கும் வழிகாட்டுகிறோம். ஒவ்வொரு குழுவிலும் 50 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஒரு குழுவில் குறைந்தபட்சம் 10 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஒவ்வோர் உறுப்பினரும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலமாவது வைத்திருக்க வேண்டும். அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை இத்திட்டத்துக்காக ஒதுக்கிக்கொள்ளலாம்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை வேளாண் முறைகளுக்கு மாறும் அத்தனை விஷயங்களையும் ஆவணப்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்குத் தேவைப்படும் உயிர் உரங்களை வேளாண் அலுவலகம் மூலமாகக் கொடுத்து விடுவோம்.

தமிழ்நாட்டில் இந்தாண்டில் வேளாண்துறை மூலமாக 150 குழுக்களையும், தோட்டக்கலைத்துறை மூலமாக 50 குழுக்களையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய ஆர்வமுள்ளவர்கள் சிட்டா, ஆதார் கார்டு, வங்கிக்கணக்குப் புத்தகம், புகைப்படங்கள் ஆகியவற்றோடு அந்தந்த மாவட்ட வேளாண் துணை இயக்குநர், தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்” என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு, வேல்முருகன்,

செல்போன்: 99524 17105