Published:Updated:

புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!

புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!
பிரீமியம் ஸ்டோரி
புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!

கால்நடை

புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!

கால்நடை

Published:Updated:
புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!
பிரீமியம் ஸ்டோரி
புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!

சுனாமி, வெள்ளம், புயல், வறட்சி... போன்ற இயற்கைப் பேரிடர்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றால் ஏற்படும் உயிர்ச்சேதங்களும் பொருள்சேதங்களும் கணக்கில் அடங்காது. இத்தகைய பேரிடர் காலங்களில், மனிதர்களைக் காப்பாற்றுவதில்தான் மீட்புக் குழுவினர் அதிகக் கவனம் செலுத்துவார்கள். இந்நிலையில், பேரிடர் காலங்களில் கால்நடைப் பாதுகாப்பு குறித்த ஒரு கருத்தரங்கைச் சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தியிருக்கிறது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.

அண்மையில் இரண்டு நாள்கள் நடந்த இக்கருத்தரங்கைக் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ நிபுணர் டாக்டர் பாஸ்குவாலினோ சான்டொரி கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர் கருத்தரங்கில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள்.

கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “நம் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் கால்நடைகள் அத்தியாவசியமானவை. விவசாயிகளின் வாழ்க்கையும் வருவாயும் கால்நடைகளைச் சார்ந்தே உள்ளன. புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களால், கால்நடைகள் பெருமளவில் பாதிக்கப்படும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வெகு காலமாகிறது.

புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!

இது விவசாயிகளின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் சான்டொரி, “இயற்கை இடர்ப்பாடுகளின்போது பலர், ‘எங்களுடைய கால்நடைகளை இங்கேயே விட்டுவிட்டு, நாங்கள் மட்டும் பாதுகாப்பான இடத்துக்கு வர மாட்டோம்’ என்று பேரிடர் மீட்புக்குழுவினரிடம் சொல்லியதை நான் அறிந்திருக்கிறேன். அந்த விவசாயிகளின் வாழ்வாதாரமே அந்தக் கால்நடைகள்தான். அவர்கள் கால்நடைகள் மீது கொண்டுள்ள பாசம் ஒரு பக்கம் என்றால், அவற்றை நாம் இழந்துவிட்டால், நம் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் இன்னொரு பக்கம். அதனால்தான் அவற்றைப் பிரிய மறுக்கிறார்கள். அதேபோல, பேரிடர் சமயங்களில் மக்களுக்குத் தங்கள் செல்லப்பிராணிகளையும் விட்டுப் பிரிய மனது வராது. தங்களது இதர முக்கிய உடைமைகளோடு சேர்த்து, அந்தச் செல்லப் பிராணிகளையும் சுமந்துகொண்டு அவர்கள் வெளியேறுவர்.

அதனால், பேரிடர் சமயங்களில் கால்நடைகளின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று” என்றார்.

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.சிங் பேசும்போது, “மாநில அரசுகள் தங்கள் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் கால்நடைத் துறையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பல மாநில அரசுகள் இதைச் செய்யத்தவறிவிட்டன. கால்நடைத் துறையும் சேர்ந்து பணியாற்றினால்தான், இயற்கைப் பேரிடர்களின்போது கால்நடைகளும் பாதுகாக்கப்படும். உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது, பேரிடர் மீட்புக் குழுவினர், மிகவும் துணிச்சலாகச் செயல்பட்டு, வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்ட மாடுகளையும், யானையையும் மீட்டது பாராட்டத்தக்க சாதனை” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு!

சென்னை ஐ.ஐ.டியின் எலெக்டிரிக்கல் இன்ஜினீயரிங் துறைத்தலைவர் டாக்டர் தேவேந்திர ஜலிஹல், “புயல், வெள்ள நேரங்களில் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்படும். மீட்புப் பணிகளின்போது தகவல் தொடர்பு மிகவும் அவசியம். அத்தகைய நேரங்களில், மிகக் குறுகிய நேரத்தில், பண்பலை ஒலிபரப்பு மூலம் தகவல் தொடர்புப் பரிமாற்றம் செய்யலாம். செல்போன்களைப் பயன்படுத்தியே, புயல் தாக்குதலின்போது கடலில் சிக்கிக் கொள்ளும் மீனவர்களை மீட்க முடியும்” என்று சொல்லியதோடு, அவை குறித்து விரிவாக விளக்கினார். இயற்கைப் பேரிடர்கள் மட்டுமல்லாமல், ரசாயன வாயுக்கசிவினால் ஏற்படும் விபத்துகள், அணுசக்தி மையங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்துச் சர்வதேசப் பார்வையுடன் விளக்கினார், டாக்டர் சரத் சந்திரா.

விழாவில், வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதோடு, பேரிடர் வருமுன் விலங்குகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் நேரங்களில் விலங்குகள் பாதுகாப்புத் திட்டம், பேரிடருக்குப் பிந்தைய நடவடிக்கைகள் ஒட்டுமொத்த செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

- எஸ்.சந்திரமௌலி