Published:Updated:

சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!
பிரீமியம் ஸ்டோரி
சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

மாடித்தோட்டம்

சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

மாடித்தோட்டம்

Published:Updated:
சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!
பிரீமியம் ஸ்டோரி
சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

“நகரத்துல இருக்குற மக்களுக்கு நல்ல இயற்கைக் காய்கறிகள் கிடைக்கிறதில்ல. ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிச்ச காய்கறிகள்தான் அதிகமாகக் கிடைக்குது. அந்தக் காய்கறிகளைச் சாப்பிட்டா நோய்கள்தான் வரும். உடம்புக்குச் சத்து கிடைக்கிறதில்ல. நகரத்துல வாழற நாம இயற்கையில விளைஞ்ச சத்தான காய்கறிகளைச் சாப்பிடணும்னா அதுக்கு ஒரே வழி, மாடித்தோட்டம்தான்” என்று மாடித்தோட்டத்துக்குக் கட்டியம் கூறுகிறார், சென்னை, புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி.

இவர் மாடித்தோட்டம் அமைத்துத் தன்னுடைய வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை விளைவித்துக் கொள்கிறார்.

தன்னுடைய மாடித்தோட்டம் குறித்துப் பேசிய வரலட்சுமி, “எட்டு வருஷமா மாடித்தோட்டம் அமைச்சுப் பராமரிச்சுட்டுருக்கேன். 20 தொட்டிகள்ல ஆரம்பிச்ச மாடித்தோட்டம் இப்போ 200 தொட்டிகளா விரிவடைஞ்சுருக்கு. மாடித்தோட்டம் அமைக்குறதுக்குப் பணத்தை விட மனம்தான் முக்கியம்.

ஆரம்பத்துல மல்லிகை, முல்லை, ரோஜானு பூச்செடிகளைதான் நட்டு வெச்சேன். அடுத்துக் கீரைகள், காய்கறிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். ‘ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன்’-ங்குற ஃபேஸ்புக் குரூப் மூலமாத்தான் பல தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். இப்போ நானும் எனக்குத் தெரிஞ்ச தகவல்களைச் சொல்லிக் கொடுத்துட்டுருக்கேன்” என்ற வரலட்சுமி செடிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்...

சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

“பீர்க்கங்காய், சுரைக்காய், பச்சை மிளகாய், கத்திரி, தூதுவளை, சித்தரத்தை, திப்பிலி, பிரண்டை, முடக்கத்தான், புதினா, வாழை, கொய்யா, அத்தி, மா, கீரைகள்னு பல தாவரங்கள் இங்க இருக்கு. இது சொந்த வீடுங்கிறதால மாடிப்படிகள், ஜன்னல்கள், வாசல், மொட்டை மாடினு எந்த இடத்தையும் விடாம செடிகளை வெச்சுருக்கேன். சுவர்கள்ல தொங்கு தோட்டமும் அமைச்சுருக்கேன். மாடியில நிழல்வலை அமைச்சுருக்குறதால அதிக வெயில், செடிகள் மேலே படாது. தினமும் எங்க வீட்டு சாப்பாட்டுல கீரைகள், மூலிகைகள் கட்டாயம் இருக்கும். மாடித்தோட்டம் அமைச்ச பிறகு கீரைகளை நான் வெளியில வாங்குறதே இல்லை. பெரும்பாலும் காய்கறிகள் மாடித்தோட்டத்துலேயே கிடைச்சுடுது. இங்க விளையுறது பத்தலைனாத்தான் இயற்கை அங்காடிகள்ல வாங்குவேன். அதனால, காய்கறி வாங்குற செலவு கணிசமாகக் குறையுது

சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

தினமும் மூணு மணி நேரத்தைச் செடிகளுக்காக ஒதுக்கிப் பராமரிக்கிறேன். எல்லாச் செடிகளுக்கும் பூவாளி மூலமாத்தான் தண்ணீர் விடுவேன். வெயில் அதிகமா இருந்தா தினமும் இரண்டு வேளை தண்ணீர் கொடுப்பேன். இல்லாட்டி காலையில மட்டும்தான் தண்ணீர் கொடுப்பேன். பூச்சித்தாக்குதல் இருந்தால் பாதிக்கப்பட்ட இலைகளைப் பறிச்சுடுவேன். தேவைப்பட்டா பூச்சிகளை விரட்ட இஞ்சிபூண்டுக்கரைசல், பெருங்காயக் கரைசல், சாம்பல்னு பயன்படுத்துவேன். எனக்குத் தேவையான காய்கறி நாத்துக்களைக் குழித்தட்டு முறையில உற்பத்தி செஞ்சுக்குவேன்.

நாத்துகளை நடவு செய்றதுக்கு முன்னாடி தொட்டியில செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, மணல் நான்கையும் சரி விகிதத்துல கலந்துபோட்டு அதுலதான் நடவு செய்வேன். காய்கறி வகைகளுக்கு 1 அடி வரை ஆழம் வரை மண் இருக்கணும். கீரை வகைகளுக்கு அரை அடி ஆழம் வரை மண் இருக்கணும். காய்கறிக் கழிவுகளை எல்லாம் செடிகளுக்கு உரமாக்கிடுவேன். காய்கறிச் செடிகளுக்கு வெயில் கண்டிப்பாகத் தேவை. வெயில் இருந்தால்தான் பூ உதிராம இருந்து காய்பிடிக்கும்” என்ற வரலட்சுமி நிறைவாக,

சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

“மாடித்தோட்டம் மூலமா வீட்டுக்குத் தேவையான கீரைகள், காய்கறிகளை இயற்கை முறையில விளைவிச்சுக்க முடியுது. பூஜைக்குத் தேவையான பூக்கள் கிடைச்சுடுது. தினமும் மாடித் தோட்டத்துல வேலை செய்றதால உடற்பயிற்சி செஞ்ச மாதிரி ஆயிடுது. அதனால, உடலும் ஆரோக்கியமா இருக்கு. உடல் தெம்பா இருக்குறதால மனசுக்கு நிம்மதி கிடைக்குது. மாடித்தோட்டம் அமைக்க அதிக இடவசதியெல்லாம் தேவையில்லை. இருக்குற இடத்துக்குத் தகுந்த மாதிரி சின்னதா அமைச்சுக்கலாம். வீட்டுக்கு உபயோகமான தாவரங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் வாளி, மண்தொட்டி, மாடித்தோட்ட பைனு எதுல வேண்டுமானாலும் செடிகளை வளர்க்கலாம். ஆனா, கவனிப்பு ரொம்ப முக்கியம். இயற்கை உரமாவே இருந்தாலும் அளவாத்தான் பயன்படுத்தணும்” என்று சொல்லி விடைகொடுத்தார், வரலட்சுமி.

தொடர்புக்கு

வரலட்சுமி,
செல்போன்:
94444 53162

- துரை.நாகராஜன்,  படங்கள்: ஆ.வள்ளிசௌத்திரி