Published:Updated:

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?
பிரீமியம் ஸ்டோரி
கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

ஆலோசனை

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

ஆலோசனை

Published:Updated:
கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?
பிரீமியம் ஸ்டோரி
கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

‘பெத்த பிள்ளை கைவிட்டாலும் நட்டு வெச்ச தென்னம்பிள்ளை காப்பாத்தும்’ என்பார்கள். அதுதான் நிதர்சனமும்கூட. பிள்ளைகளைப்போல் வளர்த்துத் தங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்களை… கஜா புயலுக்குக் காவு கொடுத்துவிட்டு கதிகலங்கி நிற்கிறார்கள், தென்னை விவசாயிகள்.

பிள்ளைகளின் படிப்புச் செலவு, குடும்பச் செலவு, கல்யாணச் செலவு… என எல்லாவற்றுக்கும் உதவியாக இருந்த தென்னை மரங்களை இழந்துவிட்டு புலம்பித் தவிக்கும் விவசாயிகளின் சோகம், கல்நெஞ்சையும் கரைக்கிறது. அரசாங்கம் ஒருபக்கம் நிவாரணங்களை அறிவித்திருந்தாலும்… அது மட்டுமே இதற்குத் தீர்வாகிவிடாது. மறுநடவுக்குப் பணம் கொடுத்தாலும் இனி நடவு செய்து அந்த மரங்கள் பயன்பாட்டுக்கு வரும்வரை வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

இந்நிலையில், ‘சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்’ என்ற ரீதியில் சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வரும் தகவல்களால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். ‘இது சாத்தியமா’ எனத் துறைசார் வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம்.

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி வீரசேனன், “சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்வது என்பது சாத்தியமே இல்லாத விஷயம். விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் செய்வதற்காகச் சில விஷமிகள் திட்டமிட்டே இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதோடு சில நிறுவனங்கள் தங்களது விவசாய இடுபொருள்களை விற்பனை செய்வதற்காக இதுபோன்ற தகவல்களைப் பரப்பி விளம்பரம் செய்கிறார்கள். தென்னை மரங்கள் மீண்டும் பிழைத்து வராது என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நான், ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, சாலை விரிவாக்கத்துக்காகச் சில தென்னை மரங்களை அகற்ற வேண்டியிருந்தது. அவற்றை வெட்ட மனமில்லாமல், வேரோடு பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் மறு நடவு செய்தோம். ஆறு மாதங்கள் வரை பசுமையாக இருந்த அந்த மரங்கள் அதற்குப்பிறகு, மஞ்சள் நிறத்துக்கு மாறி பட்டுப்போய்விட்டன.

மூன்று வயதுக்குட்பட்ட மரங்களை இப்படி மறுநடவு செய்தால் பிழைத்துக்கொள்ள ஓரளவு வாய்ப்பிருக்கிறது. பாளைவிட்ட மரங்களுக்கு மறுநடவு என்பது சாத்தியமில்லாத விஷயம். அதோடு, மறுநடவு என்பது எளிதான காரியமில்லை. மிகவும் செலவு பிடிக்கக்கூடிய விஷயம். இப்படி மறுநடவு செய்யும் மரங்கள் பலன் கொடுக்க மூன்று ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். மறுநடவு செய்து பிழைக்குமா, பிழைக்காதா என்று காத்துக்கிடப்பதைவிட, காலம் தாழ்த்தாமல், உடனடியாகப் புதிய கன்றுகளை நடவு செய்வதுதான் சரியாக இருக்கும்” என்றார்.

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

கோயம்புத்தூரில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜவஹர்லாலிடம் பேசினோம். “தென்னை மரங்களில் ஆணி வேர்கள் கிடையாது. சல்லி வேர்கள்தான் படர்ந்திருக்கும். இதனால், புயலில் சாய்ந்த தென்னை மரங்களின் வேர்கள் அறுபட அதிக வாய்ப்புகள் உண்டு. சாய்ந்து கிடக்கும் மரங்களின் அடிப்பகுதியில் கொஞ்சம் வேர்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு முழுமையாக வேரோடு பெயர்ந்துவிட்டது என எண்ணுவது தவறு. மேலும், சாய்ந்த மரங்களின் குருத்துகள் சேதமடைந்திருக்கும். குருத்து சேதமடைந்துவிட்டால், அந்த மரத்தால் பலனே கிடைக்காது. அப்படியே அதை மறுநடவு செய்து பிழைத்து வந்தாலும், அது உறுதியாக இருக்காது. சாதாரணக் காற்றுக்கே சாய்ந்துவிடும். மூன்று வயதுகுட்பட்ட தென்னங்கன்றுகளாக இருந்தாலும், வேர்கள் அறுபடாமல், மண்பிடிப்போடு இருந்தால் மறுநடவு செய்ய முயலலாம். அதுவும் பிழைக்க 50 சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது. ஆணி வேர்களை உடைய மா, வேம்பு, தேக்கு போன்ற மரங்கள்கூட மறுநடவில் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவுதான். இளம் மரங்களாகவும், வேர்கள் உடையாமல் இருந்தாலும் மறுநடவுக்கு முயற்சி செய்து பார்க்கலாம்” என்ற ஜவஹர்லால், விவசாயிகள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்துச் சொன்னார்.

“புயலில் சிக்கி சாயாமல் பிழைத்திருக்கும் மரங்களில் பூஞ்சண நோய் தாக்க வாய்ப்புள்ளது. அதற்குப் பூஞ்சணத் தடுப்பு மருந்துகளைப் பரிந்துரைக்கப்படும் அளவில் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். சாய்ந்த மரங்களின் வேர்கள் மண்ணில் இருந்தால் அந்த வேர்களில் பூஞ்சணத்தொற்று ஏற்பட்டுப் பரவ வாய்ப்புள்ளது. அதனால், அந்த இடங்களிலும் பூஞ்சணத்தடுப்பு மருந்தை ஊற்ற வேண்டும். மரங்களில் காயம் ஏற்பட்டு பிசின் வடிந்தால், அதற்குரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்யும்போது, ஏற்கெனவே மரம் இருந்த இடத்தில் நடவு செய்யாமல் சற்று தள்ளி நடவு செய்ய வேண்டும். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கு ‘மேற்குக் கடற்கரை நெட்டை’, ‘கிழக்குக் கடற்கரை நெட்டை’, ‘அரசம்பட்டி நெட்டை’, ‘வேப்பங்குளம்’ ஆகிய ரகங்கள் ஏற்றவை.

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

மரங்களை இழந்த விவசாயிகளுக்காக அதிக எண்ணிக்கையில் புதிய தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்யுமாறு விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர். இதற்கான பணிகள் எங்களது ஆராய்ச்சி நிலையங்களில் உடனடியாகத் தொடங்கப்படவுள்ளது. வேளாண்மைத்துறை மூலமாக வெளி மாநிலங்களிலிருந்து தென்னங் கன்றுகளை வாங்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய கன்றுகள் வரும் வரை நிலத்தை அப்படியே போட்டு வைக்காமல், உளுந்து, பச்சைப்பயறு, காய்கறிகள் போன்றவற்றைச் சாகுபடி செய்து வருமானம் பார்க்கலாம். இதனால் மண்வளம் கூடி புதிதாக நடவு செய்யவிருக்கும் கன்றுகளுக்குக் கைகொடுக்கும். புதிய கன்றுகளை நடவு செய்த பிறகும், ஐந்து ஆண்டுகளுக்குக் குறுகிய காலப் பயிர்களை ஊடுபயிர்களாகச் சாகுபடி செய்யலாம்” என்று ஆலோசனை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரனிடம் பேசியபோது, ‘‘விழுந்த தென்னை மரங்களை மீண்டும் மறுநடவு செய்யும்போது அத்தனை மரங்களும் முழுவதும் உயிர் பிழைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

மறுநடவு செய்யும் மரங்களை, அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளியைப் போல் கவனமாகப் பராமரித்தால் மட்டுமே மூன்றாண்டுகளுக்கு மேல் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வளவு  கஷ்டப்பட்டு, மூன்றாண்டுகள் கழித்துப் பலன் எடுப்பதற்குப் பதிலாக, புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்வதே சிறந்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் பலன் கொடுக்கக்கூடிய கலப்பினத் தென்னங்கன்றுகள் உள்ளன. ஆனால், இந்த ரகங்கள் அதிக ஆண்டுகள் நின்று பலன் தராது. அதையும் கவனத்தில் கொண்டு, மண் கண்டத்துக்கேற்ற கலப்பினக்கன்றுகளையும், மற்ற ரகக் கன்றுகளையும் கலந்து நடவு செய்து குறுகிய காலத்தில் வருமானம் பார்ப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும்.

முற்றிலும் சேதமான, குருத்து ஒடிந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு, புதிதாக நடவு செய்வதுதான் நல்லது. அதே நேரம், தென்னை மரங்கள் கீழே விழாமல், மட்டைகள் மட்டும் கீழ் பக்கமாகத் தொங்கிக்கொண்டுள்ள மரங்களை அகற்ற வேண்டியதில்லை. சிறிது காலம் பொறுத்திருந்தால் மட்டைகள் மேல்பக்கமாக வர ஆரம்பித்துவிடும். மரம் சாய்ந்து விழாமல் குருத்து மட்டும் சாய்ந்திருந்தாலோ அல்லது ஒடிந்திருந்தாலோ அம்மரங்களையும் வெட்டாமல், ஆறுமாதங்கள் வரை காத்திருக்கலாம். ஆறு மாதங்களில் புதிய குருத்து வர வாய்ப்புண்டு. ஒருவேளை ஆறுமாதம் கழித்துப் புதிய குருத்து வராத நிலையில் அம்மரத்தை வெட்டலாம்.

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

தென்னை மரங்களில் காயம்பட்டு பிசின் வடியும் சூழ்நிலையில்... அரைத்த குப்பைமேனி இலை, பசுஞ்சாணம், பஞ்சகவ்யா கலந்த கலவையைப் பூசிவிடலாம். வேர்ப்பகுதியில் பூஞ்சணம் தாக்கும் என நினைத்தால், 5 அடி விட்டம் கொண்ட மரத்துக்கு 50 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் வேர்ப்பகுதியில் இட்டு மண் கொண்டு மூடிவிடலாம்” என பரிந்துரை செய்தார்.

தொடர்புக்கு:

தோட்டக்கலைக் கல்லூரி, கோயம்புத்தூர். தொலைபேசி: 0422 6611284.
தென்னை ஆராய்ச்சி நிலையம்,
வேப்பங்குளம், தஞ்சாவூர்,
தொலைபேசி: 04373 260205,
04373 260124.
செந்தூர்குமரன், செல்போன்: 94438 69408.

- ஆர்.குமரேசன், கு.ராமகிருஷ்ணன்,

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ம.அரவிந்த்

கஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா?

50 வயது மரங்களைக்கூட உயிர்ப்பிக்கலாம்!

“புவி வெப்பமயமாதலைக் குறைக்கப் பேருதவி செய்பவை மரங்கள். அதனால், சாலையோர மரங்கள் (தென்னை, பனை தவிர), பழமரங்கள் ஆகியவை உடையாமல் வேரோடு சாய்ந்திருந்தால்... அவற்றை விறகுக்காக வெட்டி விடாமல் மறுநடவு செய்து உயிர் பிழைக்க வைக்க முயற்சிக்கலாம். ஐம்பது வயதான மரங்களைக்கூட இப்படிப் பிழைக்க வைக்க முடியும். இதுவும் செலவு பிடிக்கக்கூடிய விஷயம்தான் என்றாலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மரங்களை மறுநடவு செய்ய முயற்சி எடுத்தால், மரங்கள் பிழைத்து வளர வாய்ப்புள்ளது. அது, புவி வெப்பமாதலைக் குறைக்கச் செய்யும் சிறு உதவியாக இருக்கும்” என்று சொல்லும் செந்தூர்குமரன், அதற்கான தொழில்நுட்பங்களை விவரித்தார்.

“வேரோடு சாய்ந்த மரங்களின் வேர்ப்பகுதி மண்ணிலிருந்து பிய்ந்து இருந்தால்… அப்பகுதியைச் சாய்வாக வெட்ட வேண்டும். வெட்டிய பகுதியில் பாலித்தீன் பையில் பஞ்சகவ்யாவை ஊற்றி வேர் நனையுமாறு கட்டிவிட வேண்டும். பஞ்சகவ்யா மிகச் சிறந்த வேர் வளர்ச்சியூக்கி. பஞ்சகவ்யாவில் 5-10 நிமிடங்கள் வேர்ப்பகுதி மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும். பிறகு, மரத்தின் மேல்பகுதியில் உள்ள கிளைகளை வெட்டிவிட வேண்டும். கிளைகள் பிரியும் இடத்திலிருந்து இரண்டு முதல் மூன்றடி வரை விட்டு வெட்டிவிட வேண்டும். மரங்களில் இலைகள் இருக்கக் கூடாது. மேல் பகுதியில் சாய்வாக வெட்டாமல், வட்டமாகவே வெட்ட வேண்டும். வெட்டிய பாகத்தில் அரைத்த குப்பைமேனி இலை, பசுஞ்சாணம், பஞ்சகவ்யா கலந்த கலவையைப் பூசி பாலித்தீன் பை கொண்டு தொப்பிப்போலக் கட்டி விடவேண்டும். மரம் தரையில் சாய்ந்து இருக்கும்போதே இந்த வேலைகளைச் செய்துவிட வேண்டும்.

அடுத்து வேரின் விட்டத்தைவிட இரண்டு அடி கூடுதலாக இருக்குமாறு குழி எடுக்க வேண்டும். உதாரணமாக, வேரின் விட்டம் மூன்றடி இருந்தால், ஐந்தடி விட்டத்தில் குழியெடுக்க வேண்டும். குழி பெரிதாக இருந்தால்தான் சிரமம் இல்லாமல் மரத்தைக் குழிக்குள் இறக்க முடியும். குழியில் ஒன்றரை அடி உயரத்துக்கு மணலைக் கொட்டி நிரப்ப வேண்டும். அதற்கு மேல் செம்மண், குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து கொட்டி குழியை மூடிவிட வேண்டும்.

பிறகு, ‘பொக்லைன்’ எந்திரம் மூலமாக மூடிய குழியிலிருந்து மணலுக்கு மேல் உள்ள கலவையை மட்டும் வெளியே எடுத்துவிட்டு... குழிக்குள் ‘கிரேன்’ மூலமாக மரத்தை இறக்க வேண்டும். பிறகு, இரண்டு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு, அரைக்கிலோ அசோஸ்பைரில்லம், அரைக்கிலோ பாஸ்போபாக்டீரியா, 100 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கொட்டி, குழியில் இருந்து எடுத்த செம்மண் கலவையையும் கொட்டி இறுக்கமாக மிதித்துவிட வேண்டும். தொடர்ந்து தண்ணீர்விட்டுப் பராமரித்து வந்தால் மரம் வேர்விட்டு துளிர்க்கத்தொடங்கும்” என்று ஆலோசனை சொன்னார்.