Published:Updated:

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4

இயற்கை காபியில் கொழிக்கும் கொலம்பிய விவசாயிகள்!திரைகடல்

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4

இயற்கை காபியில் கொழிக்கும் கொலம்பிய விவசாயிகள்!திரைகடல்

Published:Updated:
வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4

லகெங்கும் கோலோச்சும் வெற்றிகரமான இயற்கை வேளாண் முயற்சிகள், வழிமுறைகள், இயற்கை வாழ்வியல் ஆகியவற்றை முன்னிறுத்தும் இயக்கங்கள் பற்றிய விழிப்பு உணர்வு தொடர் இது.

கொலம்பியாவின் காபி உலகப்புகழ் பெற்றது. தென் அமெரிக்கா கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கொலம்பியாவை, ஆண்டிஸ் மலைத்தொடர் தென் வடலாய் இரண்டாகப் பிரிக்கிறது. இம்மலைத்தொடர், மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இம்மலைப்பகுதி, காபி பயிருக்கு ஏற்றத் தட்ப வெப்பத்துடன் உள்ளதால், ‘அரபிக்கா’ வகைக் காபிக் கொட்டைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. பல காலமாக உலகக் காபி உற்பத்தியில், பிரேசிலுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த கொலம்பியா, வியட்நாம் நாட்டினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தற்போது மூன்றாமிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆண்டுக்கு 8,10,000 டன் காபிக் கொட்டைகளை உற்பத்தி செய்கிறது, கொலம்பியா.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4

கொலம்பியாவின் பைசா (Paisa) பகுதி, ‘காபி முக்கோணம்’ (Triangulo del Cafe) என்று அழைக்கப்படுகிறது. கல்டாஸ் (Caldas), கிண்டியோ (Quindio) மற்றும் ரிசர்ல்டா (Risaralda) ஆகிய பிரதேசங்கள் இப்பகுதியில் உள்ளன. 13,873 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இந்தக் காபி கலாசாரப் பகுதி, 2011-ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பால், ‘உலகப் பாரம்பரியக் களம்’ (World Heritage Site) என அறிவிக்கப்பட்டது.

1980-களில் ‘ஜுவான் வால்டேஸ்’ (Juan Valdez) என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் உலகச்சந்தைகளின் கதவைத் தட்டிய ‘கொலம்பிய காபி கூட்டமைப்பு’, உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஆர்வம் செலுத்தியது. இதனால், வேதியுரங்களும் உயர் விளைச்சல் விதைகளும் கொலம்பிய காபித் தோட்டங்களை நிறைத்தன. காபி உற்பத்தி ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க அதே வேகத்தில் சுற்றுச்சூழல் பாழ்பட்டு வந்தது.

ஆனால், உலக காபிச் சந்தையில் 40 ஆண்டுகளில் இல்லாத கடும் விலைச்சரிவு கடந்த 2001-ம் ஆண்டில் ஏற்பட்டது. இது லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளின் 25 மில்லியன் காபி விவசாயிகளைப் பாதித்தது. கொலம்பியாவின் கல்டாஸ் பகுதியில், 2000-04-ம் ஆண்டுக் காலகட்டத்தில், காபி உற்பத்திக்கான செலவுத் தொகைகூடக் கிடைக்காத சூழலில், பல விவசாயிகள் காபி உற்பத்தியை நிறுத்திவிட்டு நகரங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர். மலைக்கிராமங்களில் இருந்தவர்கள் மீண்டும் முதலீடு செய்யப் போதுமான பணமின்றித் தவித்தனர். பருவநிலை மாற்றத்தால், அவ்வப்போது பெய்யும் தொடர் மழையும் காபி விளைச்சலைப் பாதித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் காபி மரங்களின் அடர்த்திக் குறைந்ததோடு, மண்வளமும் குன்றியது. பல ஆண்டுகளாகக் காடுகள் அழிப்பாலும், ரசாயன விவசாயம் செய்த காரணத்தாலும் மண்ணரிப்பு, நிலச்சரிவு, நீர் மாசுபாடு ஆகிய பிரச்னைகளும் சேர்ந்துகொண்டன. கடைசியில் காபி விவசாயிகளுக்குக் கடும் தலைவலிதான் மிச்சமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4

இந்தச் சூழலில், கல்டாஸிலுள்ள ரியோசூஸியோ (Riosucio) பகுதியில் இயங்கும் ஆஸ்புரோகஃபே (ASPROCAFE Ingruma) என்ற சிறு காபி விவசாயிகளின் கூட்டமைப்பு, இயற்கை காபி உற்பத்தியின் மூலம் பிரச்னைகளை எதிர்கொள்ள முயற்சி செய்தது. 1992-ம் ஆண்டிலிருந்தே இயற்கை காபி விவசாயத்தை ஊக்குவித்து வரும் இந்த அமைப்பு, 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், முறையாகப் பதிவு செய்துகொண்டு இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கியது.

இயற்கை முறையிலான காபி உற்பத்தியில், செடிகளின் அடர்த்தியை அதிகரிக்கவும், அதிக விளைச்சலைத் தரும் செடிகளை நடவும், காபி செடிகளுக்கிடையில் பழமரங்களை நடவும் ஊக்குவிக்கப் பட்டது. மண் வளத்தைக் கூட்டுதல், நீராதாரங்களைப் பாதுகாத்தல், இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல், உணவுத் தேவைக்காகக் காய்கறித் தோட்டங்கள் அமைத்தல், காபி சக்கையிலிருந்து பயோகேஸ் தயாரித்தல் ஆகியவற்றுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கால்நடைகள் வாங்கப் பெண்களுக்குக் கடன் கொடுக்கப்பட்டது. இயற்கை முறையில் விளைவிப்பதால் காபிக்கு அதிக விலை கிடைத்தது. நீடித்த நிலைத்த காபி உற்பத்தி ஒருபுறமிருக்க, விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பும், எரிபொருள் தேவையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டன.

இந்தக் கூட்டமைப்பின் விவசாயிகளில் பெரும்பாலானோர் ‘எம்பரா சம்பி’ (Embara Chambi) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நான்கு பழங்குடி குடியிருப்புக்களைச் சார்ந்தவர்கள் (La Montaa, Bonafont, San Lorenzo and Lomaprieto-Canamomo). அவ்வினப் பெண்கள், காபி விதைகள், சோள விதைகள், கிழங்கு விதைகள் போன்றவற்றைச் சேகரிக்கிறார்கள்.

இயற்கை விவசாயிகளான பெண்கள், கூட்டமைப்பின் செயல் பாடுகளிலும் பொறுப்பெடுத்து உள்ளனர். அடிப்படையில் களச் செயற்பாட்டாளரான ரோசியோ (Rocio Motato Suarez), அமைப்பின் பொதுச்செயலாளராக உள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் விவசாயிகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறார். லஸ் மரினா (Luz Marina Garcia Ruiz), சமூகம் சார்ந்த திட்டங்களுக்குப் பொறுப்பெடுத்துள்ளார்.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 4

இவர் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், உணவுப் பாதுகாப்பு, பள்ளிகளில் மதிய உணவளிக்கும் திட்டம் ஆகியவற்றை நிர்வகிக்கிறார். யானத் (Yaneth Taborda Morales), காபி கொள்முதல், தரம் பிரித்தல் ஆகியவற்றைப் பார்த்துக் கொள்கிறார். ஏஞ்சலிக்கா (Angelica Arroyave Cordoba), காபி சுவையறிதலில் கில்லாடி. 2015-ம் ஆண்டில் கொலம்பியாவின் தேசிய காபி சுவையறியும் போட்டியில் முதலிடத்தையும், உலக அளவில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றவர்.

கூட்டமைப்பு ஜனநாயகத் தன்மையோடு செயல்படுகிறது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில், பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுக்குழுவில் உறுப்பினராக இருக்கும் விவசாயிகளே, நிர்வாகக் குழுவையும், சமூகக் கட்டுப்பாட்டுக் குழுவையும் தேர்ந்தெடுப்பர். அமைப்புக்கான கொள்கை முடிவுகளையும் பொதுக்குழுவே தீர்மானிக்கும். கிட்டத்தட்ட 3,300 காபி விவசாயிகள் இந்தக் கூட்டமைப்பில் உள்ளனர். இதில், கணிசமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பிலுள்ள விவசாயிகள் அனைவரும் நியாய வணிக (Fair Trade) சான்றிதழைப் பெற்றவர்கள். இதில் 200 விவசாயிகளுக்கும் மேல், இயற்கை வேளாண் சான்றிதழையும் பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தொழிலாளர்களே நடத்தும் ‘ஈக்குவல் எக்ஸ்சேஞ்ச்’ (Equal Exchange) எனப்படும் நியாய வணிக நிறுவனம், அஸ்புரோகஃபே கூட்டமைப்பிடமிருந்து சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காபியைக் கொள்முதல் செய்கின்றது.

கூட்டமைப்பு, இயற்கை வேளாண் பயிற்சிகள் நடத்துவதற்கும் அதன் சமூகத் திட்டங்களுக்கும் கூட ஈக்குவல் எக்ஸ்சேஞ்ச் உதவுகிறது. அஸ்புரோகஃபே கூட்டமைப்புக்கு விவசாயிகளின் ஒற்றுமை ஒரு பக்கம் பலமென்றால், ஈக்குவல் எக்ஸ்சேஞ்ச் போன்ற வணிக நிறுவனங்களின் ஆதரவு இன்னொரு பக்கம் பலமாக இருக்கின்றது.

எந்த நாட்டிலிருந்தாலும், விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அவர்களுக்கு உதவும் சந்தைகளை உருவாக்கினால், எதையும் சாதிக்கலாம் என்று நம்முள் நம்பிக்கையை விதைக்கிறது, அஸ்புரோகஃபே காபி விவசாயிகள் கூட்டமைப்பு.

- பயணம் தொடரும்

- க.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism