Published:Updated:

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

பிரச்னை

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

பிரச்னை

Published:Updated:
கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

புயலின் கோரத்தாண்டவத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களே நிலை குலைந்து போயுள்ளன. குடிக்கத் தண்ணீர் இல்லாமல், வீடுகள் இடிந்த நிலையில் சாலையோரங்களில் மக்கள் சமைத்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார வசதி இல்லாமல் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.  பெரும்பான்மையோர் முகாம்களில் அடைகளமாகியும் ஐம்பதுக்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியுள்ளது புயல். லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் விழுந்து விவசாயிகள் வாழ்வு கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 16-ம் தேதி வீசிய ‘கஜா’ எனப் பெயரிட்ட புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை, சீர்காழி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராமபட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும்  அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் என பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றன.

இதுவரை இப்பகுதிகளில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு குறிப்பு சொல்கிறது. கால்நடைகளையும் காவு வாங்கியிருக்கிறது கஜா புயல்.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

மின் கம்பிகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்றவை சேதமடைந்ததால் மின்சாரம்  முற்றிலுமாகத் தடைப்பட்டுள்ளது. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள், மக்கள். பல ஆண்டுகளாக வருமானம் கொடுத்துக் கொண்டிருந்த தென்னை, மா, பலா, நெல்லி, கொய்யா, வேம்பு, ஆல், அரசு, பூவரசு, வேங்கை உள்ளிட்ட கோடிக்கணக்கான மரங்களும்; பொங்கல் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வாழை, கரும்பு, மரவள்ளி, வெற்றிலை உள்ளிட்ட இன்னும் ஏராளமான பயிர்களும் அழிந்து நாசமாகி விவசாயிகளை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவாரூர் மாவட்டம், கருவாக்குறிச்சியைச் சேர்ந்த நடராஜன், “நான் ஒரு ஏக்கர்ல தென்னை வெச்சுருந்தேன். வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுட்டுருந்துச்சு. அதை நம்பிதான் என் குடும்பம் இருந்தது. புயல்ல பெரும்பாலான மரங்கள் முறிஞ்சி போயிடுச்சு. எங்க ஊர்ல மட்டும் 200 ஏக்கர் பரப்புல தென்னை அழிஞ்சி போயிடுச்சி’ என்றார், வேதனையுடன்.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், “நாங்க ரெண்டு ஏக்கர்ல மரவள்ளி பயிர் பண்ணி ஏகப்பட்ட செலவு செஞ்சுருந்தோம். இப்போ அறுவடைக்குத் தயாரா இருந்த சமயத்துல எல்லாமே போயிடுச்சி. பல ஆயிரம் ரூபாய்க்கு மேல நஷ்டம்” என்றார்.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவாழம் பொழில் கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி பழனிவேல், “6 ஏக்கர்ல 6,000 வாழை மரங்கள் வெச்சுருந்தேன். எல்லாத்துலயுமே தார் விட்டுருந்துச்சு. புயல்ல அவ்வளவு மரங்களும் சாஞ்சுடுச்சி. பொங்கல் சமயத்துல அறுவடை செஞ்சுருந்தாக் கிட்டத்தட்ட 12,00,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுருக்கும். அவ்வளவும் போச்சு” எனப் புலம்பினார்.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!
கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் புலியூர் நாகராஜன், “திருச்சி, கரூர் ரெண்டு மாவட்டங்கள்ல மட்டும், 4,000 ஏக்கர்ல 40,00,000 லட்சம் வாழை மரங்கள் பயிர் செஞ்சிருந்தாங்க. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள்லயும் ஆயிரக்கணக்கான ஏக்கர்ல வாழைச் சாகுபடி இருந்துச்சு. கஜா புயல்ல கிட்டத்தட்ட 50,00,000 வாழை மரங்கள் அழிஞ்சு போயிடுச்சு. ஒரு ஏக்கருக்கு 5,00,000 ரூபாய் இழப்பீடு கொடுத்தால்தான் வாழை விவசாயிகள் மீண்டு வர முடியும். மக்காச்சோளம், எலுமிச்சை உள்பட இன்னும் பல பயிர்கள் புயல்ல பாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு விவசாயிக்கும் உரிய இழப்பீடு கொடுக்கணும்” என்றார்.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி வீரசேனன், “கிட்டத்தட்ட ஒரு கோடி தென்னை மரங்கள் அழிஞ்சுபோச்சு. இன்னும் லட்சக்கணக்கான மரங்கள்ல குருத்து திருகிப்போனதால ‘இப்போ விழலாமா... அப்புறம் விழலமா?’ங்கிற நிலையிலதான் இருக்கு. ஒரு தென்னை மரம் வருஷத்துக்கு 2,000 ரூபாய்னு 20 வருஷத்துக்கு நின்னு பலன் கொடுக்கும். இந்தக் கணக்குல தமிழக அரசு ஒரு தென்னைக்கு 50,000 ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும். சாஞ்சு கிடக்குற மரங்களை அரசாங்கமே அப்புறப்படுத்திக் கொடுக்கணும். விவசாயிகள் மறுபடியும் தென்னைச் சாகுபடியை மீட்டெடுக்க, இலவசமாகத் தென்னங்கன்றுகள் கொடுக்கணும். தென்னை மறு சீரமைப்புக்கு ஆலோசனை வழங்க மையங்களை அமைக்கணும்” என்று வேண்டுகோள் வைத்தார். போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள், விவசாயிகள்.

- கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், தே.தீட்ஷித், அ.குரூஸ்தனம், க.சதீஷ்குமார், அ.ஜார்ஜ், ம.அரவிந்த், ஏ.எஸ்.ஈஸ்வர்

ஒரு தென்னை மரத்துக்கு 1,100 ரூபாய், நெல்லுக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாய்...

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதன்படி தென்னையில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாயும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு மரத்திற்கு 1,100 ரூபாய் வழங்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர, தென்னையில் மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் பெற முடியும்.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

நெல் பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும். கரும்பு, வாழை, காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்ற பாசன பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும். இப்பயிர்களை மறுசாகுபடி செய்ய ஆகும் செலவில் 40 முதல் 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.

முந்திரிப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 18,000 ரூபாயும், அவற்றை வெட்டி அகற்றிட மரத்திற்கு 500 ரூபாயும், மறுசாகுபடி செய்ய 40 முதல் 50 சதவிகித மானியம் வழங்கப்படும். சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியமாக 75,000 ரூபாய் வரையும் மறுசாகுபடி செய்வதற்கு வழங்கப்படும்.

பயிர் சேதமா?

வேளாண் துறையை அணுகவும்!


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேதம் குறித்து வேளாண் துறை கணக்கிட்டு வருகிறது. வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணா மூர்த்தி டெல்டா மாவட்டங்களில் கணக்கெடுப்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

களத்திலிருந்து பேசிய தட்சிணாமூர்த்தி, “புயல் பாதித்த மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதியாக வேளாண் உதவி அலுவலர்கள் பயிர்சேத விவரங்களைக் கணக்கிட்டு வருகிறார்கள். ஆனால், இன்னும் போய் கணக்கிட முடியாத பகுதிகள் இருக்கக்கூடும்.

கஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்!

பயிர் சேதத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, அதைப்பற்றி கணக்கிடாமல் இருந்திருந்தால், அந்தந்த மாவட்ட வேளாண் இணை இயக்குநருக்குத் தகவல் தெரிவித்தால், அவர்கள் உதவி வேளாண் அலுவலர்களை அனுப்பி சம்பந்தப்பட்ட விவசாயியின் வயலில் பயிர் சேதத்தைக் கணக்கிடுவார்கள்.

அதேபோல் உழவன் செயலியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் வட்டார உதவி வேளாண் அலுவலர்களின் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் அந்த செல்போன் எண்களுக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்த பிற மாவட்ட விவசாயிகளும் செயலியைப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்கலாம். பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் உரிய நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும்” என்றார் உறுதியாக.

தொடர்புக்கு,

வேளாண் இணை இயக்குநர், தஞ்சாவூர். செல்போன்: 97894 50578.

வேளாண் இணை இயக்குநர், திருவாரூர். செல்போன்: 73977 53311.

வேளாண் இணை இயக்குநர், நாகப்பட்டினம். செல்போன் 94422 12851.

வேளாண் இணை இயக்குநர் புதுக்கோட்டை. செல்போன்: 86374 34022.