Published:Updated:

`மருந்து வாங்கி அடித்தும் நெற்பயிரில் நோய் கட்டுப்படவில்லை!’ - கடலூர் விவசாயிகள் வேதனை

`மருந்து வாங்கி அடித்தும் நெற்பயிரில் நோய் கட்டுப்படவில்லை!’ - கடலூர் விவசாயிகள் வேதனை
`மருந்து வாங்கி அடித்தும் நெற்பயிரில் நோய் கட்டுப்படவில்லை!’ - கடலூர் விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் டெல்டா கடைமடை பகுதியாகக் காட்டுமன்னார்கோயில், குமராட்சி பகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு காவிரியில் முன் கூட்டியே தண்ணீர் வந்ததால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலூர் மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியைக் கடந்த அக்டோபர் மாதம் ஆர்வத்துடன் தொடங்கினர். காட்டுமன்னார் கோயில், குமராட்சி பகுதியில் மட்டும்  சுமார் 45,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணியையும் விவசாயிகள் மேற்கொண்டனர்.


 

தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் நன்கு செழித்து வளர்ந்து வந்துள்ளது. இதில் முன்கூட்டியே நடவு செய்த பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கிவிட்டது. இருப்பினும் தை மாதம் தொடக்கத்தில்தான் அறுவடை பணிகள் தீவிரமாக இருக்கும். இதற்காக  விவசாயிகள் தங்களைத் தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் சம்பா நெற்பயிரை வைரஸ் நோய் தாக்கியுள்ளது.  

குமராட்சி, கீழக்கரை, முள்ளங்குடி,விளத்தூர், வீரநத்தம், திருநாறையூர், எடையார், பிள்ளையார்தாங்கல், வவ்வால்தோப்பு உட்பட 
பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்திருந்த சம்பா நெற்பயிரில் இந்த வகை நோய் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.
இதனால் கடைகளில் மருந்து வாங்கி நெற்பயிரில் அடித்தும் நோய் கட்டுப்படவில்லை. மாறாகத் தீவிரமடைந்து  பரவி வருகிறது. 
இதனால் நெற்கதிர்கள் நன்கு செழித்து வளராமல் போய்விடும். மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் 
கவலை அடைந்துள்ளனர்.

இதுபற்றி கொள்ளிடம் கீழணை, பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், ``கஜா புயல் வந்ததிலிருந்தே 
வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. கடுமையான குளிரும் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் நெற்பயிர்களில் இந்த நோய் 
தாக்கியுள்ளது. நன்கு வெயில் அடித்தால் ஓரளவுக்கு நோய் தாக்குதல் குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்த நோய் பற்றி
 விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளைத் தெரிவிக்க வேளாண் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
 இதற்கு முன்பு வேளாண் அதிகாரிகள் கிராமம்தோறும் வந்து விழிப்பு உணர்வு செய்வார்கள். ஆனால், இந்த ஆண்டு எங்களை 
அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை’’ என்றார்.