‘ஆஷா’ (ASHA) எனப்படும் ‘நீடித்த நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு’ சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அளவில் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘விவசாயிகள் விடுதலை விழா’ (கிஸான் ஸ்வராஜ் சம்மேளன்) என்ற விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தில் வித்யாபீட் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. இருபது மாநிலங்களிலிருந்து விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆதிவாசிகள், பெண் விவசாயிகள், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக் கிட்டத்தட்ட 1,500 பேர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதைக்காவலர்கள் மரபு விதைக் கண்காட்சியை அமைத்திருந்தனர். அதில் ஆயிரக்கணக்கான பாரம்பர்ய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. புதுமையும் விஞ்ஞானமும் கலந்து வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் சிறந்த பாமர விஞ்ஞானிகள், தங்களது வழிமுறைகளைச் செயல் விளக்கங்களோடு சொல்லிக் கொடுத்தனர்.
ஆதிவாசிகளின் வாழ்க்கை முறை குறித்த காணொளிக் காட்சி காட்டப்பட்டது. இயற்கை வேளாண் பொருள்கள், இயற்கைப் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட காதி ஆடைகள், கைநூற்பு நூல்கள், கை நெசவுத் துணிகள், பயனுள்ள பண்ணைக்கருவிகள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எட்டு மாநிலங்களின் பாரம்பர்ய உணவுகள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சி நடந்த மூன்று நாள்களில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு மாநில உணவு வகைகள் பரிமாறப்பட்டன. நஞ்சற்ற இயற்கை விவசாயம், சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, கால்நடை வளர்ப்பு, மண்வளப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, விதைப் பன்மயம், நியாய விலை கிடைப்பதற்கான கொள்கைகள், சந்தை, வர்த்தகக் கொள்கைகள்... எனப் பல தலைப்புகளில் தொடர் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யோகேந்திர யாதவ், சாய்நாத், கவிதா குருகண்டி, கபில் ஷா, அஃப்சர் ஜாஃப்ரி, அனாமிக் ஷா, பேராசிரியர் அனில் குப்தா, ஈலாபென் பட், முனைவர் சுதர்ஷன் ஐயங்கார், முனைவர் ராஜேந்திர கிமானி, ‘அறச்சலூர்’ செல்வம், முனைவர் ரஜீந்தர் சவுத்ரி, முனைவர் ராமு, உல்கா மஹாஜன்... எனப்பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாகப் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு குழுக்கள் மூலம் அனுபவ பகிர்வு அரங்குகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘அறச்சலூர்’ செல்வமும் நானும் (அனந்து) இணைந்து டிசம்பர் மாதம் 24-ம் தேதி இந்த அனுபவ பகிர்வு அரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
- அனந்து