இயற்கைக்கு மாறும் அமெரிக்க விவசாயிகள்!

வளர்ந்து வரும் பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்களால், உலக நாடுகளின் பல பகுதிகளில் சிறு, குறு விவசாயிகளின் விளைபொருள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சிறு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை அந்தந்தப்பகுதி மக்களிடம்தான் விற்பனை செய்வார்கள். அதேபோல, அமெரிக்காவின் இலினியாஸ் பகுதி விவசாயிகள், ‘சமுதாயம் சார்ந்த விவசாயம்’ (Community Supported Agriculture-CSA) என்னும் வழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, தங்களது விளைபொருள்களை உள்ளூரிலியே சந்தைபடுத்துவதுதான் அவர்களது முக்கியக் குறிக்கோள். பல கார்ப்பரேட் நிறுவனங்கள், உணவுத்தொழிலில் இறங்கி வருவதால், இத்தகைய சிறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இப்பிரச்னையைச் சமாளிக்கும் விதமாக அவர்கள் இயற்கை விவசாயத்துக்கு மாற முடிவு செய்துள்ளார்கள். இதனால், பெரு நிறுவனங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அதனால், பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சூடானில் முதலீடு செய்யும் துருக்கி!
2019-ம் ஆண்டு முதல் சூடான் நாட்டின் விவசாய நிலங்களில் முதலீடு செய்ய இருக்கிறது, துருக்கி நாட்டின் வேளாண் துறை. கடந்த வாரம் துருக்கி மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இணைந்து... கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரான கார்டோம் நகரில், ‘விவசாயம் மற்றும் கால்நடை நிறுவனம்’ ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் துருக்கி 80 சதவிகித முதலீட்டையும், சூடான் 20 சதவிகித முதலீட்டையும் செய்துள்ளது. துருக்கி-சூடான் உடன்படிக்கை-2014-ன்படி இந்நிறுவனம் செயல்படும். இரு நாடுகளும் விவசாயத்திறன் மற்றும் வளங்களைப் பகிர்ந்து நிலையான உணவு பொருள்களை உற்பத்தி செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தின்படி... சூடான் நாட்டில் 7,80,000 ஹெக்டேர் பரப்பில் 99 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய உள்ளது, துருக்கி. முதல்கட்டமாக 12,500 ஹெக்டேர் பரப்பில் பணிகளைத் தொடங்கவுள்ளன. இத்திட்டம் ‘Win-Win’ என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. சூடான் விவசாயப் பொருள்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது, துருக்கி. துருக்கியின் பருவநிலையில் விளையாத பொருள்களைச் சூடானில் விளைவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மகாராஷ்டிராவின் விதைத் தாய்!
மகாராஷ்டிர மாநிலம், கொம்பலேனி கிராமத்தைச் சேர்ந்த ரஷிபாய் சோமா, 15 பாரம்பர்ய நெல் ரகங்கள், 9 பாரம்பர்ய துவரை ரகங்கள் மற்றும் அறுபதுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய காய்கறி விதைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றைச் சேகரித்துப் பாதுகாத்து வருகிறார். இதனால், அவரை ‘விதைத்தாய்’ எனப் புகழ்கிறார்கள், அம்மாநில விவசாயிகள். விதைச் சேகரிப்பு மட்டுமில்லாமல், இயற்கை முறை விவசாயம் குறித்தும் பரப்புரை செய்து வருகிறார், ரஷிபாய். இவர் ஒரு சுயதொழில் கூட்டமைப்பை உருவாக்கி கிராமப்பெண்களின் உதவியுடன் மரபு விதைகளைச் சேகரித்து வருகிறார். விதை வங்கியைத் தொடங்கி, விவசாயிகளுக்கு மரபு விதைகளை வழங்கி வருகிறார்.

மந்திரத்தால் பயிர் வளரும்!
விவசாயிகளை, ‘காஸ்மிக் ஃபார்மிங்’ (Cosmic Farming) எனும் முறைக்கு மாற வலியுறுத்தி வருகிறது, கோவா அரசு. அதாவது, பயிர்களின் அருகில் இருபது நாள்களுக்கு வேத மந்திரங்களை உச்சரித்தால் பயிர் உற்பத்தித்திறன் மற்றும் தரம் உயரும் என விவசாயிகளிடம் பரப்புரை செய்து வருகிறது, அம்மாநில அரசு. இத்திட்டத்தை வலுப்படுத்த ‘சிவ் யோகா ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘பிரம்மகுமாரி யோகா’ ஆகிய அமைப்புகளிடம் ஆலோசனை கேட்டுள்ளது, கோவா அரசு. தினமும் 20 நிமிடங்கள் எனத் தொடர்ந்து 20 நாலள்களுக்கு வயலில் வேத மந்திரங்களைச் சொல்வதன் மூலம் பிரபஞ்சத்தின் சக்தி விவசாய நிலங்களுக்குள் சென்று உற்பத்தி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த முறையில் எந்தவித செயற்கை உரங்களையும் பயன்படுத்துவதில்லை.
- பா. நந்தினி