Published:Updated:

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7
பிரீமியம் ஸ்டோரி
அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

ஏற்றுமதிகே.எஸ்.கமாலுதீன்

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

ஏற்றுமதிகே.எஸ்.கமாலுதீன்

Published:Updated:
அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7
பிரீமியம் ஸ்டோரி
அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

இந்திய நிலக்கடலையை விரும்பும் மலேசியா!

ஏற்றுமதியில் காய்கறிகள், பழங்கள் வரிசையில் வெல்லத்துக்கும் முக்கிய இடம் உள்ளது. மூன்றாயிரம் ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது, வெல்லம். உலக அளவிலான வெல்ல வர்த்தகத்தில் 70 சதவிகித அளவு இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. சர்க்கரையில் குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகியவை மட்டுமே உள்ளன. வெல்லத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகியவற்றோடு வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவையும் அடங்கி உள்ளதால், மருத்துவத் தன்மை கொண்டதாகக் கருதப் படுகிறது. நம் நாட்டின் கண்டுபிடிப்பான வெல்லம், 2017-18-ம் ஆண்டில் 2.5 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. அதன் மூலம் 1,380 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது.

கரும்புச்சாற்றைக் காய்ச்சிதான் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அவை ‘கியூப்’ (Qube), ‘ரவுண்டு’ (Round) என்ற பெயர்களில் அனுப்பப்படுகின்றன. அச்சு வெல்லத்தின் அளவு (சைஸ்) இரண்டிலிருந்து இரண்டரை அங்குல(இன்ச்) அளவு இருக்க வேண்டும். இவற்றை அரைக்கிலோ அளவில் பேக் செய்ய வேண்டும். அதேபோல, ஒவ்வொரு உருண்டைவெல்லத்தின் அளவும் அரைக்கிலோ அளவில் இருக்க வேண்டும். எடை அளவு எக்காரணம் கொண்டும் குறையக்கூடாது. எடைக்குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் திரும்பவும் இறக்குமதியாளரிடமிருந்து ஆர்டர் கிடைக்காது. அதனால், எடையைச் சரியாக கையாள வேண்டும்.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருண்டை வெல்லத்தை 20 எண்ணிக்கையில் ஒரு பாக்ஸில் போட்டு 10 கிலோ பாக்ஸ்களாக அனுப்பலாம். வெல்லம், அடர்ந்த மற்றும் லேசான தங்க நிறத்தில் இருக்க வேண்டும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் வெல்லத்தை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. பனை வெல்லம், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றுக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இவற்றை அரைக்கிலோ அளவில் பேக் செய்து அனுப்பலாம். செப்டம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை விழாக்கள் அதிகமிருப்பதால், அந்தக்காலகட்டத்தில் வெல்லத்துக்கு அதிகத்தேவை இருக்கும்.

தமிழ்நாட்டில் சேலம், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு வெல்லம் உற்பத்தியாகிறது. இந்தாண்டு 1 கிலோ வெல்லத்தை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கிறோம். ஒரு பாக்ஸ் (10 கிலோ) வெல்லம் 750 ரூபாயிலிருந்து 850 ரூபாய் வரை விற்பனையாகி இருக்கிறது. நாங்கள் வெல்லத்தை விலைக்கு வாங்கித்தான் அனுப்பி வருகிறோம். உற்பத்தி செய்பவர்களே நேரடியாக ஏற்றுமதி செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

விழாக்காலங்களில் பொரி, அவல் ஆகியவற்றுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. விநாயகர் சதுர்த்தி முதல் பொங்கல் பண்டிகை வரை இவை அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. பொரி, அவல் இரண்டையும் 100 கிராம், 250 கிராம் அளவில் பாக்கெட்கள் போட்டு அனுப்பி வருகிறோம். அதேபோலச் ‘சோயா மீல்மேக்கர்’க்கும் அதிகளவு ஏற்றுமதி வாய்ப்புள்ளது.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

நிலக்கடலை

நம்நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பொருள் நிலக்கடலை. உலக அளவில் நிலக்கடலை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 2017-18-ம் ஆண்டுக் காலத்தில் 5 லட்சம்  மெட்ரிக் டன் ஏற்றுமதியின் மூலம் 3,386 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. நிலக்கடலையை மலேசியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

மலேசியாவின் தேசிய உணவான ‘நாசிலிமா’ (Nasi Lemak) என்ற உணவில் நிலக்கடலை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய்ப்பாலில் வேகவைத்த சோறு, எண்ணெய்யில் பொறித்த நிலக்கடலை, நெத்திலிக் கருவாடு, மசாலாக் கூட்டு எனக் கலந்து கட்டிச் சாப்பிடப்படும் உணவு இது. மலேசிய மக்களின் வீடுகளிலும் அனைத்து உணவகங்களிலும் அதிகம் உண்ணப்படும் உணவு வகை இது. மலேசிய மக்கள் வசிக்கும் புரூனே, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் இந்த உணவு பிரபலம். மலேசியாவுக்கு அருகிலுள்ள தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டாலும்... இந்திய நிலக்கடலையைத்தான் மலேசியாவில் விரும்பி வாங்குகிறார்கள். மலேசியாவின் பாரம்பர்ய உணவில் நமது நிலக்கடலை இருப்பதால், நம் முன்னோர் கடல் கடந்து வாணிபம் செய்தது நிரூபணமாகிறது. அதோடு, நிலக்கடலைக்கு அயல்நாட்டில் ஒரு நிரந்தரச்சந்தை இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். சட்னி, சாஸ் தயாரிப்பிலும் நிலக்கடலை அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலும், கர்நாடகாவில் தாவணிகரேவிலும் நிலக்கடலையைக் கொள்முதல் செய்கிறோம். நிலக்கடலையை அனுப்புவதற்கு முன் நிர்ணயிக்கப் பட்டுள்ள தரப்பரிசோதனை அவசியம். நிலக்கடலையில் ‘அப்லோடாக்சின்’ தாக்குதல் இருக்கக் கூடாது (கடலையை மெல்லும்போது கசப்பாக இருந்தால், அது அப்லோடாக்சின் பாதிக்கப்பட்ட கடலை). இத்தாக்குதல் இருந்தால் வெளிநாட்டில் கண்டிப்பாக வாங்கமாட்டார்கள். நிலக்கடலையைப் பரிசோதிக்க மைசூருவில் சி.எஃப்.டி.ஆர்.ஐ ஆய்வகம் உள்ளது. சென்னை, ஓசூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் ‘அபீடா’வால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் இருக்கின்றன. அவற்றில் பரிசோதித்து ஆய்வறிக்கையை வாங்கி நிலக்கடலையுடன் அனுப்ப வேண்டும். அதோடு அபீடா மூலமாக, ‘நிலக்கடலை விதைக்காக அனுப்பப்படவில்லை. உணவுக்காகத்தான் அனுப்பப்படுகிறது’ என்பதற்கான என்.ஓ.சி (No Objection Certificate) வாங்க வேண்டும். நிலக்கடலையை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா ஆகிய நாடுகள் அதிக அளவில் வாங்குகின்றன. அமெரிக்காவிலிருந்து நிலக்கடலை ஆர்டர் வந்தால் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அந்நாட்டில் நிலக்கடலை இறக்குமதிக்குக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.

நிலக்கடலையின் அளவு 50-60, 60-70, 70-80  எண்ணிக்கையில் (ஜாவா டைப் போல்டு) இருக்க வேண்டும். சிறிய சைஸ் (80-90 எண்ணிக்கை) நிலக்கடலையையும் ஏற்றுமதி செய்யலாம். இது சட்னிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டோடு இருக்கும் நிலக்கடலை, ஏற்றுமதிக்கு அனுமதிக்கப் படுவதில்லை. ஒரு கிலோ நிலக்கடலை, நம் ஊரில் அதிகபட்சம் 60-110 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யும்போது, ஒரு கிலோ 90-130 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். மஞ்சள், மிளகாய், வாழை குறித்து அடுத்த இதழில்...

- ஏற்றுமதி பெருகும்  

வெல்லம் ஏற்றுமதியில் பாக்கெட் மீது அச்சிடப்பட வேண்டியவை

1. நிகர எடை (Net Weight)

2. காலாவதியாகும் தேதி (Expiry Date)

3.ஏற்றுமதியாளர் (Exported By)

4.இறக்குமதியாளர் (Imported By)

5.புராடக்ட் ஆஃப் இண்டியா (Product of India)

நிலக்கடலையின் பரிசோதனை அறிக்கையில் இருக்க வேண்டியவை

ஈரப்பதம் - 7%

தானிய அளவு- 3%

நார்ச்சத்து- 10-14%

புரதம்- 40-45%

உடைப்பு-1%

கேள்வி பதில்

“மறு ஏற்றுமதி என்றால் என்ன... சிங்கப்பூர், துபாய், மொரீசியஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் ‘மறு ஏற்றுமதி நாடுகள்’ என அழைக்கப்படுவதன் காரணம் என்ன?”

கே.லாவண்யா, சென்னை-88


“இதை ரீ புரடியூஸ் (Reproduce) நாடுகள் என்று அழைப்பார்கள். அதாவது ஆயத்த ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ், மெஷினரி போன்றவை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வரும். அவற்றை முழுப்பொருளாக மாற்றி அனுப்பும் நாடுகளைத்தான் மறு ஏற்றுமதி நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு நாட்டில் ஒரு பொருள் கிடைக்கும். அதற்கான உபரிப்பொருள்கள் கிடைக்காது. அப்படிப்பட்ட பொருள்கள், உபரிப்பொருள்கள் கிடைக்கும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு முழுப் பொருளாக உருவம் பெற்று, மற்றொரு நாட்டுக்கு ஏற்றுமதி ஆகும். இந்த வகையில் சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் போன்ற நாடுகள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றன”

“சீனாவுக்கு வெண்பன்றி ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். அங்கிருந்து ‘பையர் ஆர்டர்’ பெறுவது எப்படி?”

கார்த்திகேயன், சிவகிரி, ஈரோடு மாவட்டம்.


“ஆடு, மாடு, கோழி, குதிரை, ஒட்டகம் போன்ற உயிருள்ளவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்புவதென்றால் சுங்கத்துறையில் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஏனென்றால் உயிருள்ள பொருள்களை அனுப்புவது தடை செய்யப்பட்ட பொருள்கள் (Restricted Products) என்ற பிரிவின் கீழ் வருகிறது. சிலவற்றைச் சில காரணங்களுக்காகத் தடுத்து வைத்திருக்கலாம். அதனால், சுங்கத் துறையில் முறையாக விசாரித்துவிட்டு பிறகு பைய்யர் ஆர்டரைப் பற்றி யோசிக்கலாம்.”

“வெளிநாட்டுக்கு மண்புழு உரம் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டேன். என்னிடம் பண்ணைத் தேவைக்குப் போக நிறைய மண்புழு உரம் உள்ளது. அதை ஏற்றுமதி செய்யலாமா?”

@குணா


“உயிருள்ள எந்தப் பொருளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. எந்தவொரு நாட்டின் மண், விதை ஆகியவற்றை அவ்வளவு எளிதில் இன்னொரு நாட்டுக்குக் கொண்டு சென்றுவிட முடியாது. நம்நாட்டைப் பொறுத்தவரை காயர் பித்துக்குத்தான் ஏற்றுமதிக்கான அனுமதி உண்டு. இந்தக் காயர்பித் தான் இயற்கை உர தேவைக்காக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை ஏற்றுமதி செய்தால் மானியம் கிடைக்கும். அதனால், மண்புழு உரத்தை இந்தியாவுக்குள் விற்பனை செய்ய முயற்சி செய்யுங்கள். இப்போதிருக்கும் நடைமுறையின்படி மண்புழு உரத்தை ஏற்றுமதி செய்ய முடியாது.”

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

கேள்விகள் கேட்கலாம்!

ஏற்றுமதி வியாபாரம் குறித்த உங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவுள்ளார், கே.எஸ்.கமாலுதீன். கேள்விகளை ஏற்றுமதி, கேள்வி-பதில் பகுதி, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும், pasumai@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism