‘‘வெளிநாட்டிலிருந்து திரும்பி விவசாயம் தொடங்கியுள்ளோம். எங்கள் உறவினர் ‘தேங்காயாக விற்பதைவிட, இளநீர் விற்பனையில் கூடுதல் வருமானம் கிடைக்கும்' என்று சொல்கிறார். இந்தத் தகவல் உண்மையா?’’
கே.எல்.பிரசாத், வேலூர்.
தென்னைச் சாகுபடி ஆலோசகர் சந்திரசேகர் பதில் சொல்கிறார்.
‘‘நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான். தேங்காய் விற்பனையைக் காட்டிலும், இளநீரில் நல்ல லாபம் பார்க்க முடியும். இளநீருக்காகவே சில ரகங்கள் உள்ளன.

இதில் செவ்விளநீர் (Chowghat Orange Dwarf) ரகம் ஏற்றது. மற்ற ரகங்களைக் காட்டிலும் இதில் குளுக்கோஸ் கூடுதலாக உள்ளது. சராசரியாக ஒவ்வொரு காயிலும் 350 மில்லி அளவுக்கு இளநீர் இருக்கும். சுவையும் நன்றாக இருப்பதால், நுகர்வோர் விரும்பிக் குடிப்பார்கள். கோடைக் காலத்தில், ஓர் இளநீர் அதிகபட்சமாக 50 ரூபாய் வரைகூட விற்பனையாகிறது. ஆனால், தேங்காய் விலை அப்படியில்லை. தேங்காயுடன் ஒப்பிட்டால், இளநீர் சாகுபடி செய்வதுதான் லாபகரமானதாக இருக்கும். செவ்விளநீர் ரகத்தை ஏக்கருக்கு 80-100 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 200 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய்க் குறைந்தபட்சமாக 10 ரூபாய்க்கு விற்றாலும், 80 மரங்களில் ஓராண்டுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்.
நேரடியாக விற்றால், இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்தாலும் கூடுதல் விலை, நிச்சயம் கிடைக்கும். போர்களின்போது, காயம்படும் வீரர்களுக்கு குளுக்கோஸுக்குப் பதிலாக இளநீரை உடலில் ஏற்றுவது வெளிநாடுகளில் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி உயிர் காக்கும் மருந்தாகப் பயன்படக்கூடிய இளநீர் குறித்த விழிப்பு உணர்வு, நம் நாட்டிலும் பெருகி வருகிறது. எனவே, அருகிலுள்ள பெரிய மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, நோயாளிகளுக்கு இளநீர் விற்பதன் மூலம் நிலையான வருமான வாய்ப்பை உருவாக்க திட்டமிடுங்கள். செவ்விளநீரை நடவு செய்தால், மூன்றாம் ஆண்டுத் தொடங்கி, ஐம்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதற்கான தென்னங்கன்றுகளை சுமார் முப்பது ஆண்டுகள் வயதுகொண்ட மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் விதைகளின் விவரங்களைச் சொல்லவும்?’’
எம்.மல்லிகா, உடுமலைப்பேட்டை.
‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையங்களில் சாமை, குதிரைவாலி, வரகு, உளுந்து, சாம்பல் பூசணி, புடலங்காய் போன்றவை தற்போது விற்பனைக்கு உள்ளன. இருப்பு உள்ளவரை மட்டுமே விதைகள் கிடைக்கும். எனவே, முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.’’
- புறாபாண்டி
விதைகள் கிடைக்கும் ஆராய்ச்சி நிலையங்களின் முகவரிகள்
* வேளாண் ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம். (சாமை, குதிரைவாலி, வரகு)
தொலைபேசி: 0416 2272221,
* எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையம் ஈரையனூர் கிராமம். திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்-604 002 , (உளுந்து)
தொலைபேசி: 04147 250293,
* வேளாண் ஆராய்ச்சி நிலையம், வைகை அணை, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம் 625 512. (சாம்பல் பூசணி, உளுந்து)
தொலைபேசி: 04546 242615
அலைபேசி: 94420 27002
* காய்கறி ஆராய்ச்சி நிலையம் நெடும்வீர்பட்டு, பாலூர், கடலூர் மாவட்டம் - 607 102. (புடலங்காய்)
தொலைபேசி: 04142 212538
அலைபேசி: 94436 89074
* வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர், ஈரோடு மாவட்டம் - 638 451. (உளுந்து)
தொலைபேசி: 04295 240244
அலைபேசி: 94438 53473
* காய்கறிப் பயிர்கள் துறை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம் (புடலங்காய்)
தொலைபேசி: 04546 231726
அலைபேசி: 94420 76436

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.