Published:Updated:

தென்னை மரங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம்! - களமிறங்கிய பசுமை விகடன்...

தென்னை மரங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம்! - களமிறங்கிய பசுமை விகடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னை மரங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம்! - களமிறங்கிய பசுமை விகடன்...

ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் ‘கஜா’ புயலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள், தென்னை விவசாயிகள்தான். முள்ளில் சிக்கிய சேலையாய்ச் சின்னா பின்னமாகிக் கிடக்கின்றன, புயலால் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகள். வாழ்வாதாரங்களை இழந்த துக்கத்தில் கண்கலங்கி நிற்கிறார்கள், தென்னை விவசாயிகள். 

தென்னை மரங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம்! - களமிறங்கிய பசுமை விகடன்...

இந்நிலையில் ‘பசுமை விகடன்’ இதழைத் தொடர்புகொண்ட சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம், “எங்கள் பேராவூரணி பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தோப்பில் சாய்ந்து நிற்கும் தென்னை மரங்களைக் காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா” என்று கேட்டார். உடனடியாக, குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரனைப் பேராவூரணி பகுதிக்கு அழைத்துச் சென்றோம். பேராவூரணிக்கு அருகில் உள்ள தென்னங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம்.

நூற்றுக்கணக்கான தென்னை மரங்களைப் புயலுக்குக் காவு கொடுத்துவிட்டு கதிகலங்கி இருந்த ராமகிருஷ்ணன், ‘‘தென்னை மரங்கள்தான் எங்க குடும்பத்துக்கு வாழ்வாதாரமா இருந்துச்சு. பெத்த பிள்ளைகளை மாதிரி பார்த்துக்கிட்டுருந்தேன். இனிமேல் என்ன செய்யப்போறோம்னு தெரியலை. எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு. விழுந்து கிடக்குற மரங்களை ஒதுக்கக்கூட முடியலை. மரம் கழிக்க ஆள் கிடைக்கலை. கரன்ட் வர்றதுக்கு இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னு சொல்றாங்க. ரொம்பக் கஷ்டமாயிருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெடித்து அழத்தொடங்கினார். அவருக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தென்னை மரங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம்! - களமிறங்கிய பசுமை விகடன்...

தொடர்ந்து ராமகிருஷ்ணன், பாலசுப்ரமணி, பிரகதீஸ்வரன் ஆகிய தென்னை விவசாயிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார், செந்தூர்குமரன்.

“காற்றில் சிக்கி, கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருக்கும் அனைத்து மட்டைகளையும் வெட்டிவிடாதீர்கள். உடைந்து தொங்கும் மட்டைகளை மட்டும்தான் வெட்ட வேண்டும். உடையாமல் தொங்கும் மட்டைகள், இன்னும் சில நாள்களில் தானாக நிமிர்ந்துவிடும். ஒடிந்து தொங்கும் மட்டைகளை ஓர் அடி விட்டு, ‘கட்டர்’ மூலமாகச் சீராக வெட்ட வேண்டும். அரைத்த குப்பைமேனி இலை, பசுஞ்சாணம், பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து பசைபோலத் தயார்செய்து மட்டையில் பூசிவிட வேண்டும்.

வெட்டும்போது குருத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 75 சதவிகிதத்துக்கு மேல் குருத்து ஒடிந்திருந்தால் அம்மரத்தைக் காப்பாற்றுவது கடினம். ஓரளவு மட்டும் பாதிப்பு இருந்தால்... இரண்டு, மூன்று மாதங்களில் புது குருத்து உருவாகிவிடும். ஒருவேளை குருத்து சாய்ந்திருந்தால், மூன்று குச்சிகளை வைத்து முக்கோண வடிவில் கட்டி வைக்க வேண்டும்

தோப்புகளில் கிடக்கும் மட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தோப்புக்குள் வாய்க்கால் மாதிரி எடுத்து, கழிவுகளை அதில் போடலாம். ஓர் அடுக்கு மட்டைகளைப்போட்டு அவற்றின் மேல், சாணக் கரைசல் அல்லது இ.எம் கலவையைத் தெளிக்க வேண்டும். பிறகு அடுத்த அடுக்கு மட்டைகளைப் போட்டு தெளிக்க வேண்டும். இப்படி வாய்க்கால் நிரம்பும் வரை அடுக்கடுக்காகப் போடலாம். இப்படிச் செய்வதால் கழிவுகள் விரைவில் மட்கி உரமாகிவிடும்.

ஒடிந்த தென்னை மரங்களை மறுநடவு செய்தால் பெரிய பலன் கிடைக்காது. ஓரளவு சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை வேண்டுமானால் நிமிர்த்தி வைக்கலாம். எனவே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய கன்றுகளை நடவு செய்வதுதான் சிறந்தது’’ என்று ஆலோசனை வழங்கினார், செந்தூர்குமரன்.

தொடர்புக்கு செந்தூர்குமரன், செல்போன்: 94438 69408


ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார், ம.அரவிந்த்