Published:Updated:

பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!

பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!

பிரச்னை

“பாரம்பர்ய விதைகளைப் பத்திரப்படுத்துங்கள்... அவை இன்று பயன்படாவிட்டாலும், என்றைக்காவது பயன்படும்” என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ‘விதைகள்தான் பேராயுதம்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதோடு அவர், தனது வாழ்நாள் முழுக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எதிர்த்தும் வந்தார். 

பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!

இந்நிலையில், பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விஞ்ஞானி பி.சி.கேசவனுடன் இணைந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி குறித்து வெளியிட்ட ஓர் அறிக்கை தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் பி.சி.கேசவன் ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ‘நிலையான உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பின் கீழ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்திரி, கடுகு ஆகிய பயிர்கள் குறித்து, சில விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில், ‘பி.டி (மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகம்) பருத்தி தோல்வியடைந்த ஒன்று’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், “பி.டி பருத்தி இந்தியாவில் தோல்வியடைந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. பி.டி பருத்தி, விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரப் பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது. விஞ்ஞான ரீதியிலான உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளும், அடிப்படை அறிவியல் ஆய்வுகளும் இல்லாதவை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள். இவற்றால் செலவுகள் அதிகரிக்கின்றன. வெளிநாட்டு மரபணுக்களை நமது தாவரங்களில் உட்செலுத்தும் போது, தாவரங்களின் மூலக்கூறுகள் மற்றும் செல் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துத் துல்லியமாகப் புரிந்துகொள்ளப் படவில்லை”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!

ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதன் இப்போது அதை மறுத்து வருகிறார். இதுபற்றி அவர் தரப்பில் விளக்கம் கேட்டபோது, “அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் சிறிய அளவு மட்டுமே நான் பங்களிப்பு செய்திருக்கிறேன். அதனால், கட்டுரையின் முழுமையான ஆசிரியர் பி.சி கேசவன்தான். எப்போதுமே புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக இருப்பவன் நான். அதிலும், மரபணு மாற்றம் போன்ற தொழில்நுட்பங்களுக்கு என்றுமே எனது ஆதரவு உண்டு” சொல்லியிருக்கிறார்.

இந்தச் சர்ச்சை பற்றிப் பேசிய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “எம்.எஸ்.சுவாமிநாதன் ஆரம்பத்தில் இருந்தே இப்படி மாற்றி மாற்றித்தான் சொல்லி வருகிறார். அறிவியலையும், அரசியலையும் ஒன்றாக நடத்துபவர்கள் மக்களிடம் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். பி.டி விதையை அறிமுகப்படுத்திய நிறுவனமே, தோல்வியை ஒத்துக்கொண்டு தயாரிப்பை நிறுத்திவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்குத் தலைவர் பி.சி.கேசவன்தான். அவரும், எம்.எஸ்.சுவாமிநாதனும் சேர்ந்துதான் இந்தக்கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். 

பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!

பி.சி.கேசவன், ஆரம்பத்தில் இருந்தே ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் நம் மண்ணுக்கு நிலையானவை அல்ல. அவை பாரம்பர்ய விதைகளை அழித்து விதைப் பன்முகத் தன்மையையும் அழிக்கும். மரபணு மாற்றம் செய்த பயிர்களில் பிரச்னைகள் அதிகமாக இருக்கிறது’ என்று சொல்லி வருகிறார். இந்நிலையில் இந்தக்கட்டுரையை முக்கியத்துவம் பெற்றதாகக் கருதியாக வேண்டும். மேலும் அக்கட்டுரையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரி, கடுகு ஆகியவற்றைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்ப ட்டுள்ளது” என்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் விமலாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, “பி.டி பருத்தியைத் தமிழக அரசு பெரும்பாலும் ஊக்குவிப்பதில்லை. அதனால், நாங்களும் பி.டி பருத்தியை விவசாயிகளிடம் உபயோகப்படுத்த சொல்வதில்லை. பி.டி விஷயத்தில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை” என்றார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், “மரபணு மாற்றுக் கடுகு விதைகளைக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் இறங்கியுள்ளது, மத்திய அரசு. பி.டி பருத்தி அதிக விளைச்சல் கொடுத்தன என்று சொல்கிறார்கள். உண்மைதான், ஆனால், ஆராய்ச்சிப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்டதால் மட்டுமே பருத்தி விளைச்சல் அதிகமாகவில்லை. ‘இதற்கு முழுமையான தொழில்நுட்பம் வேண்டும்’ என்று முதலில் இருந்தே சொல்லி வருகிறோம்.

2002-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.டி பருத்தி, 2018-ம் ஆண்டில் தோல்வியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் பி.டி பருத்திக்காக விவசாயிகள் சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் 95 சதவிகிதம் பருத்தி பி.டி வகையைச் சேர்ந்ததுதான். இப்போது பெரும்பாலான இடங்களில் பி.டி பருத்தி விதைகள் மட்டும்தான் கிடைக்கிறது. உடனடியாக மத்திய அரசும் மாநில அரசும் முயற்சி எடுத்து விவசாயிகளுக்குப் பி.டி அல்லாத பருத்தி விதைகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்றார் உறுதியாக.

துரை.நாகராஜன்