Published:Updated:

`உயிரே போனாலும் ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - என்.எல்.சி-க்கு எதிராகக் கொதித்த அய்யாக்கண்ணு!

`உயிரே போனாலும் ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - என்.எல்.சி-க்கு எதிராகக் கொதித்த அய்யாக்கண்ணு!
`உயிரே போனாலும் ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - என்.எல்.சி-க்கு எதிராகக் கொதித்த அய்யாக்கண்ணு!

நெய்வேலி என்.எல்.சி மூன்றாவது சுரங்கம் அமைக்க சேத்தியாத்தோப்பு முதல் கம்மாபுரம் வரை  26 ஊராட்சிகளில் 12,500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தர்மநல்லூர் கிராமத்தில் அய்யாக்கண்ணு  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ``தமிழகத்திலேயே வளமான பகுதி இதுதான். காவிரி டெல்டா என எங்கும் பார்க்க முடியாத ஒரு செழுமையை, வளமையை இங்கு பார்க்கிறோம். வருடத்துக்கு மூன்று போகம் விளையக்கூடிய வளமான பகுதி இதை எடுத்துவிட்டால், விவசாயியை விரட்டிவிட்டால் கார்பரேட் கம்பெனிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு வருவார்கள். இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்டால் தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் ஆண்மையை இழப்பார்கள், பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிடுவார்கள். இதற்காகத்தான் இப்பகுதியில் இருக்கக்கூடிய 12,500 ஏக்கர் நிலங்களை எடுத்து நம்மை வஞ்சிக்கப்பார்கிறது அரசு. காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என்கிறார்கள். இங்கு நிலக்கரி சுரங்கம் என்கிறார்கள். எங்கே போய் தமிழர்கள் வாழ்வது, எப்படி வாழ்வது பிறந்த ஊரில் நான் இருந்தால் எவ்வளவு பெருமை. அந்தப் பெருமையை நாம் இழந்துவிட்டு நாடோடியாக வாழ வேண்டுமா? ஆந்திரா, ஒடிசா, பீகாரில் காட்டுப்பகுதியில் சுரங்கம் இருக்கு. இங்கு வளமையான பகுதியை எல்லோருக்கும் உணவு கொடுக்கக்கூடிய பகுதியை எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள்.

தமிழர்களை வஞ்சிக்கப்பார்க்கிறார்கள், தமிழகத்தைப் பாலைவனமாக மாற்றப்பார்க்கிறார்கள். நம்மை அழிக்கப்பார்க்கிறார்கள். இந்தத் திட்டம் வெற்றியடைய நாங்கள் விடமாட்டோம். எங்கள் உயிரைக் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர, ஒரு பிடி மண்ணைக்கூட தரமாட்டோம். நந்திக்கிராமத்தில் என்ன நடந்தது. எவ்வளவு போராட்டம் கோர்ட் என்ன சொல்லிச்சு, விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் சொன்னது. அது போல வழக்கைப் போடுவோம், போராட்டம் நடத்துவோம், ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது. நாங்கள் வெற்றியடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.