Published:Updated:

உலகம் சுற்றும் உழவு!

உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

 இயற்கைக்கு மாறும் பிரேசில்!

உலகம் சுற்றும் உழவு!பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரத்தில் ‘ரியோ ரூரல்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 45,000 சிறு விவசாயக்குடும்பங்கள் பயன்பெற உள்ளன. இத்திட்டத்துக்கு உலக வங்கியும் நிதி அளிக்க முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, இயற்கைக் காய்கறிகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர். திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகள், விவசாயக் கழிவுகளை மேலாண்மை செய்யும் முறைகள் குறித்த பயிற்சிகளை அளித்து வருகிறது, அந்நாட்டு அரசு. இத்திட்டத்தின் மூலம், இயற்கை வளங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் எனச் சொல்கிறார்கள், அந்நாட்டு விஞ்ஞானிகள். இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதற்காகத் தலா 7,000 டாலர் வழங்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலகம் சுற்றும் உழவு!

இந்தோனேசியாவை மீட்டெடுத்த ஆஸ்திரேலியா!

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, பல நாடுகளில் ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படுத்திய பாதிப்பை யாராலும் மறக்க முடியாது. அச்சம்பவத்தின்போது, இந்தோனேசியாவில் 1,70,000 பேர் பலியானார்கள். 62,000 விவசாயிகள் இடம் பெயர்ந்தனர். பெரும்பகுதி விவசாய நிலங்கள் குப்பை மற்றும் உப்பு நீரால் சூழப்பட்டு மண்ணின் வளம் குறைந்து போனது. இதனால், பெரும் நஷ்டத்துக்குள்ளாகினர், விவசாயிகள். அந்தச் சமயத்தில், இந்தோனேசியாவுக்குப் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும்... தொடர்ந்து 14 ஆண்டுகளாக இந்தோனேசியாவுக்கு உதவி கொண்டிருக்கிறது, ஆஸ்திரேலியா நாட்டின் சர்வதேச விவசாய ஆராய்ச்சி நிலையம் (ACIAR).

உலகம் சுற்றும் உழவு!

நிலத்தின் வளத்தை அதிகரித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை இந்தோனேசியா நாட்டின் நிலங்களில் மேற்கொண்டு... விவசாயிகளிடம் நிலக்கடலை, பீன்ஸ், மக்காச்சோளம் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்ய வலியுறுத்தினர், ஆஸ்திரேலியா நாட்டின் விஞ்ஞானிகள். அவ்விவசாயிகளுக்கு நெல் சாகுபடியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

உலகம் சுற்றும் உழவு!

அதோடு, விவசாயிகளுக்குத் தேவையான தொடர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன. மேலும், தேவையான இடுபொருள்களையும் வழங்கி இந்தோனேசியா நாட்டின் விவசாயிகளை ஊக்குவித்தது, ஆஸ்திரேலியா. அதன் விளைவாக இந்தோனேசியா நாட்டு விவசாயிகள் தற்போது அதிக மகசூல் எடுத்து, பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.

உலகம் சுற்றும் உழவு!

நெல் கொள்முதல் அதிகரிப்பு!

மேற்கு வங்கத்தில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, நெல் கொள்முதல் 8 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுச் சம்பாச் சாகுபடியில் 27,000 டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் சம்பாச் சாகுபடியில் 2,14,000 டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தை விலையைவிட அரசு அதிக விலை கொடுத்துக் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வமாக உள்ளனர். அடுத்த ஆண்டு, 52,00,000 டன் நெல் கொள்முதல் இலக்கு வகுத்துள்ளது, அம்மாநில அரசு. ஒவ்வொரு விவசாயியிடமிருந்து அதிகபட்சமாக 9 டன் அளவு நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், அனைத்துத் தரப்பு விவசாயிகளும் தங்களது நெல்லைக் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து நல்ல விலை பெற முடியும்.

நவீன முறையில் பயிர் சேதக் கணக்கீடு!

ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் பயிர் சேதத்தைக் கணக்கிடும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்க இருக்கிறது, மத்திய அரசு. இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் அரசு அலுவலர்கள் நேரில் சென்று கணக்கீடு செய்யும்போது கால விரயமும் அதிகச் செலவும் ஏற்படுகிறது. இதைத்தடுக்கும் முறையில்தான் நவீனத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பிரதான் மந்திரி பசல் பீம் யோஜனா’வின் கீழ்... தேசிய தொலை உணர்வு மையம் (NRSC), காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையம் (CGIAR), விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம் (CCAFS), விண்வெளி ஆராய்ச்சி மையம் (SAC), இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம் (IASRI) ஆகியவற்றின் உதவியில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், குறியீட்டு சார் இழப்பீடு, ‘ஸ்மார்ட் சர்வே’ மாதிரி கணக்கெடுப்பு போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் மூலம் விரைவாக, பாதிப்புகளைக் கணக்கெடுக்க முடியும்.

உலகம் சுற்றும் உழவு!

சர்வதேச பல்லுயிர் மாநாடு!

அஸ்ஸாம் மாநிலம், ஜொரத் நகரத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘சர்வ தேச நிலையான வேளாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு’ குறித்த மாநாடு நடைபெற்றது. நான்கு நாள்கள் நடைபெற்ற இம்மாநாட்டில், பருவநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட 1,038 ஆராய்ச்சி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் புஜர்பருஷா, “இந்த ஆராய்ச்சி ஆவணங்கள் மூலம், புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். தொடர்ந்து சராசரி வெப்பநிலை உயர்ந்து வருவதால்... வருங்காலத்தில் 6 சதவிகித அளவு பூச்சிகள், 8 சதவிகித அளவு பயிர் வகைகள், 4 சதவிகித அளவு முதுகெலும்பு உள்ள உயிர்கள் அழிவதற்கு வாய்ப்புண்டு. அதனால், புவி வெப்பத்தைக் குறைக்கக்கூடிய நிலையான வேளாண்மை அவசியம்” என்றார்.

- பா.நந்தினி