தமிழ்நாட்டின் பாரம்பர்ய அடையாளங்களில் ஒன்று பனைமரம். உச்சி முதல் வேர் வரையிலான அனைத்துப் பகுதிகளும் பலன் தருவதால்தான் பனைமரத்தையும் ‘கற்பகத்தரு’ என்கிறார்கள் மக்கள். இந்தியாவில் உள்ள மொத்தப் பனை மரங்களில் 50 சதவிகித மரங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பனைமரங்களில் 50 சதவிகித மரங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில்தான் உள்ளன.

தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையன்று சூரியக் கடவுளுக்கு வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை, காய்கறிகளுடன் பனங்கிழங்கும் இடம்பெறும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பனங்கிழங்கைப் பல ஆண்டுகளாக விளைவித்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருமாள்பட்டி. இப்பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பாத்திகளிலிருந்து பனங்கிழங்குகளைத் தோண்டி எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்த கோவிந்தராஜைச் சந்தித்தோம்.

“பனைத்தொழில்தான் எங்க பரம்பரைத் தொழில். நான் சின்ன வயசுல இருந்தே அப்பாவோடு சேர்ந்து பனைத்தொழிலுக்கு வந்துட்டேன். விருதுநகர் மாவட்டத்துல ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சுற்றுவட்டார மலையடிவாரப் பகுதிகளில் பனைமரங்கள் அதிகம் உண்டு. ஆனா, காட்டுப்பன்றிகளோட தொல்லையால பனங்கிழங்கு உற்பத்தி கொஞ்சம் சவாலான விஷயம்தான். எனக்குச் சொந்தமா 70 பனை மரங்கள் இருக்கு. அதுல 50 மரங்கள் பலன் தந்துக்கிட்டுருக்கு. கிடைக்குற பதனீரை இறக்கி கருப்பட்டி காய்ச்சிட்டுருக்கேன். நான் நுங்கு இறக்குறதில்லை. பழத்துக்காக மரத்துலயே விட்டுடுவேன். இங்க கிடைக்கிற பனம்பழங்கள் இல்லாம மத்த விவசாயிகள்ட்ட இருந்தும் பனம்பழங்களை விலைக்கு வாங்கிப் பனங்கிழங்கு உற்பத்தி பண்ணிட்டுருக்கேன். ஒவ்வொரு வருஷமும் மார்ச் மாசத்துல இருந்து ஆகஸ்ட் மாசம் வரைக்கும் பனை சீசன் இருக்கும். மே மாசத்துல இருந்து செப்டம்பர் மாசம் வரை பனம்பழங்கள் கிடைக்கும். இப்படிக் கிடைக்கிற பனம்பழங்களைச் சேகரிச்சுப் பனங்கிழங்கு உற்பத்தி செஞ்சுக்கிட்டுருக்கேன்” என்ற கோவிந்தராஜ் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“மொத்தம் 15 பாத்திகள்ல 1,50,000 கொட்டைகளை விதைச்சுருக்கேன். விதைச்ச கொட்டைகள்ல 60 சதவிகித அளவுதான் தேறி வரும். அந்த வகையில 90,000 கிழங்குகள் வரை கிடைக்கும். 25 கிழங்குகள் கொண்ட கட்டுகளாகக் கட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தையில் தினமும் நேரடியா விற்பனை செய்றேன். இந்தச் சீசன்ல இதுவரைக்கும் 40,000 கிழங்குகளைத் தோண்டி விற்பனை செய்திருக்கேன். 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 100 ரூபாய்னு விற்பனையாகுது. இதுவரைக்கும் 1,600 கட்டுகள் மூலம் 1,60,000 ரூபாய் வருமானமாகக் கிடைச்சிருக்கு.

ஒரு கொட்டை ஒரு ரூபாய்ங்கிற கணக்குல 1,50,000 ரூபாய் செலவாகிட்டது. அதுபோகப் பாத்தி எடுக்கத் தண்ணீர் பாய்ச்சனு 10,000 ரூபாயைச் செலவு கணக்குல சேர்த்தா இதுவரை வந்த வருமானம் செலவுக்கே சரியாகிடுச்சு. இனி கிடைக்கிற 50,000 கிழங்குகளை விற்பனை செய்றப்போ 2,00,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. குறைச்சு வெச்சுக்கிட்டாலும் 1,70,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும்னு எதிர்பார்க்கிறேன். அது முழுக்க எனக்கு லாபம்தான்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு
கோவிந்தராஜ்,
செல்போன்: 99659 17289

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

120 நாள்களில் அறுவடை!

பனங்கிழங்கு உற்பத்தி குறித்து கோவிந்தராஜ் சொல்லிய தகவல்கள், இங்கே இடம்பிடிக்கின்றன...

பனம்பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்துப் பனைஒலை அல்லது சணல் சாக்குக் கொண்டு மூடி 20 நாள்கள் வரை வைத்திருந்தால்... பழங்கள் ஒரே சீராகப் பழுத்து விதைக்கத் தயாராகிவிடும். பிறகு பழங்களின் சதைப்பகுதியைக் கையால் பிதுக்கி கொட்டைகளைப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பழத்திலும் 1 முதல் 3 விதைக்கொட்டைகள் வரை இருக்கும். வண்டு துளைத்த கொட்டைகள் மற்றும் தரமற்ற கொட்டைகளைக் கழித்துவிட வேண்டும்.

பனங்கிழங்கு வளர்ப்புக்குச் செம்மண் மற்றும் கரிசல் மண் வகைகள் ஏற்றவை. அரை அடி ஆழத்துக்குக் குழி எடுத்துத் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்ப வேண்டும். பிறகு, விதையின் கண் போன்ற முளைப்புப் பகுதியைக் குழியின் உள்பகுதியில் வைத்து, நெருக்கமாக அடுக்க வேண்டும். பின்னர், விதைக்கொட்டைகள் வெளியில் தெரியாதபடி மண்ணைப் பரப்பி மூடி தண்ணீர் விட வேண்டும். முதல் 20 நாள்களுக்குத் தினமும் தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து 20 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்தால் போதுமானது.

விதைத்த 20-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைக்கத் தொடங்கும். 40-45 நாள்களில் வேர் பிடித்துவிடும். 60-ம் நாளுக்குமேல் பாத்திகளில் விரிசல் ஏற்படும். இது கிழங்கு பருமன் பிடித்து வளரத்துவங்கி உள்ளது என்பதற்கான அறிகுறி. இப்படி விரிசல் வந்தவுடன் விரிசல் தெரியாத அளவுக்கு மண்போட்டு மூட வேண்டும். இல்லாவிட்டால், வெப்பத்தால் கிழங்கின் வளர்ச்சி பாதிக்கப்படும். விதைத்த 100-ம் நாளுக்கு மேல் கிழங்குகளை அறுவடை செய்யலாம். கிழங்கின் தோல் வெடித்துப் புள்ளிகளோடு காணப்பட்டால் அறுவடை நிலைக்கு வந்துவிட்டது எனத் தெரிந்துகொள்ளாலாம்.

120-ம் நாளுக்கு மேல் கிழங்கை எடுக்காமல் விட்டால், கிழங்கு முற்றி பீலி (குருத்து ஓலை) வெளிவந்துவிடும். பீலி வெளியில் தென்பட்டாலே கிழங்கு நன்கு விளைந்து முற்றத் துவங்கிவிட்டது என அர்த்தம். 150-ம் நாளுக்கு மேல் கிழங்கு சுருங்கி பீலிகள் அதிகரித்து மரமாக வளரத் துவங்கிவிடும். அதனால், சரியான காலத்தில் கிழங்குகளை அறுவடை செய்துவிட வேண்டும். இதற்குக் கண்டிப்பாக ரசாயன உரம் பயன்படுத்தக் கூடாது. அறுவடை செய்த பனங்கிழங்கின் அடிப்பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் கொட்டைகளை இரண்டாக வெட்டினால் உள்ளே பஞ்சுபோல வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பன்றிகளிடமிருந்து பாதுகாப்பு!

காட்டுப்பன்றிகளின் தாக்குதலிலிருந்து பனங்கிழங்குகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசிய கோவிந்தராஜ், “மலையடிவாரப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளோட தாக்குதல் அதிகம். கூட்டம் கூட்டமாக வரும் பன்றிகள் தோட்டங்களுக்குள் புகுந்து பாத்திகளைக் கிளறி துவம்சம் செய்துடும். பன்றிகள்கிட்ட இருந்து தோட்டத்தைக் காப்பாத்துறதுக்காகக் கம்புகளை ஊன்றி 5 அடி உயரத்துக்குக் கம்பிவலை வேலி போட்டிருக்கேன். தரைக்குள்ள ஒன்றரை அடி ஆழத்துக்கும் கம்பிவலை வேலியைப் பதிச்சிருக்கேன். அதனால, மண்ணைத் தோண்டி பன்றிகள் உள்ளே வர்றதில்லை.

இதுபோகத் தென்னைநார் கயிற்றுல அரைஅடி இடைவெளியில சரவெடி அல்லது அணுகுண்டு பட்டாசுகளை வரிசையாகக் கட்டிடுவோம். இந்தக் கயிற்றை வேலிகள்ல கட்டி, சாயந்தரம் ஏழு மணிக்குக் கொளுத்தி விட்டுடுவோம். கொஞ்சம் கொஞ்சமா கயிறுல நெருப்பு பரவிக்கிட்டே போய்க் குறிப்பிட்ட நேர இடைவெளியில வெடிகள் தொடர்ந்து வெடிச்சுட்டே இருக்கும். இந்தச் சத்தத்துக்குப் பயந்து பன்றிகள் வராது. தோட்டத்தின் வேலிகளில் 20 அடி இடைவெளியில் ஒரு கயிறு வீதம் கட்டிவிடுவோம். வேலிகள்ல ஃபியூஸ் போன டியூப்லைட்டுகளை ஊன்றி வெச்சா அதைப் பார்த்தும் பன்றிகள் பயப்படுது” என்றார்.

இதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் தோட்டத்தைச் சுற்றி அகழி தோண்டி பனங்கிழங்கைப் பாதுகாத்து வருகிறார். அதுகுறித்துப் பேசிய தமிழ்ச்செல்வன், “மலையடிவாரப் பகுதிகள்ல பனங்கிழங்கு உற்பத்தி சாதாரண விஷயம் கிடையாது. அந்த அளவுக்குக் காட்டுப் பன்றிகளோட தொல்லை அதிகம். முள்வேலிகள், கம்பிவேலிகள்லாம் போட்டும் பலனில்லை. இந்த வருஷம், வேலிக்கு உள்பகுதியில 2 அடி அகலம் மற்றும் 2 அடி ஆழத்துல அகழி எடுத்துருக்கேன். அதனால, பன்றிகள் வர்றதில்லை” என்று அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தோலுடன் அவிக்கக் கூடாது!

பனங்கிழங்கை வேகவைக்கும் முறை குறித்துப் பேசிய தமிழ்ச்செல்வன், “கிழங்குகளைத் தோலுடன் அவிக்கக் கூடாது. தோலில் உள்ள காரல் தன்மையால், கிழங்கு கசப்பாகிவிடும். கிழங்குகளின் தோலை நீக்கிவிட்டு மண்பானை அல்லது பாத்திரத்தில் கிழங்குகளைப் போட்டு, மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள்பொடி, உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கிழங்கை இரண்டாகப் பிரித்துப் பார்க்கும்போது, வேகமாகப் பிரிந்தால் கிழங்கு நன்றாக வெந்துவிட்டது என அர்த்தம். கிழங்கைத் தீமூட்டி கங்கில் போட்டுச் சுட்டும் சாப்பிடலாம். அவித்த கிழங்குகளை இரண்டாகக் கீறி, இரண்டு நாள்கள் வெயிலில் காய வைத்து சிறிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அவற்றுடன், மிளகாய் வற்றல், பூண்டு கலந்து உரலில் போட்டு இடித்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம். இந்தக்கிழங்கு மாவு கொண்டு உப்புமா, தோசை போன்றவற்றைச் சமைத்தும் சாப்பிடலாம்” என்றார்.