Published:Updated:

`பிரகதி மஞ்சள் பற்றித் தெரியுமா’- 6 மாதத்தில் அட்டகாசமான மகசூல்

`பிரகதி மஞ்சள் பற்றித் தெரியுமா’- 6 மாதத்தில் அட்டகாசமான மகசூல்
`பிரகதி மஞ்சள் பற்றித் தெரியுமா’- 6 மாதத்தில் அட்டகாசமான மகசூல்

அறுவடைக்கு ஒன்பது மாதங்கள் எடுக்கும் மஞ்சள் வகைகளுக்கு மத்தியில், ஆறே மாதத்தில் அதிக மகசூல் கொடுக்கும் பிரகதி மஞ்சள் வகை தமிழகத்தில் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது.

மஞ்சளுக்குப் பெயர் பெற்ற ஈரோடு மாவட்டத்தில் பிடிஎஸ்-10 மற்றும் ஈரோடு சம்பா ஆகிய மஞ்சள் வகைகள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஸ்பைஸ் ரிசர்ச் நிறுவனம் ‘பிரகதி’ என்ற புதிய மஞ்சள் வகையை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ஆறே மாதத்தில் அதிக மகசூல் கொடுக்கும் இந்தப் பிரகதி வகை மஞ்சளை ஈரோடு மாவட்டம் எலவநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வசுந்தரம் என்ற விவசாயி பயிரிட்டு, அதிக மகசூலைக் கண்டிருக்கிறார். இந்தப் பிரகதி வகை மஞ்சளைப் பயிரிட்டுப் பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாகவும், இதைப் பயிரிட்டால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என ஸ்பைசஸ் போர்டின் ஈரோடு மண்டல துணை இயக்குநர் நல்லகண்ணு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவரிடம் பேசினோம். “பயிரிட்டு ஒன்பது மாதங்களில் அறுவடை செய்யும் மஞ்சளுக்கு மத்தியில், ஆறே மாதங்களில் அட்டகாசமான மகசூலைக் கொடுக்கிறது பிரகதி வகை மஞ்சள். மற்ற மஞ்சள் வகைகளைக் காட்டிலும் குறைந்தளவு தண்ணீரே தேவைப்படுவதாலும், ஆறு மாதங்களில் அறுவடைக்குத் தயாராவதும்தான் இந்த மஞ்சளின் சிறப்பு. 9 மாதப் பயிரான பிடிஎஸ் - 10 வகை மஞ்சளை ஒரு ஏக்கருக்குப் பயிரிட்டால், கிட்டத்தட்ட 3 டன் வரையிலான பாலீஷ் செய்யப்பட்ட மஞ்சள் கிடைக்கும். கிட்டத்தட்ட அதற்கு இணையான விளைச்சலை இந்தப் பிரகதி வகை மஞ்சள் ஆறே மாதத்தில் கொடுக்கிறது.

மேலும், மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருளானது புற்றுநோய்க் கிருமிகளை அழிப்பது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அந்தக் குர்குமின் என்ற வேதிப் பொருளானது மற்ற மஞ்சள் வகைகளில் சுமார் 3 சதவிகிதம் அளவுக்குத் தான் இருக்கிறது. ஆனால், இந்தப் பிரகதி வகை மஞ்சளில் குர்குமினின் அளவு 5 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. எனவே, ஒரு குவிண்டாலுக்கு 8,000 வரை விலை போகும் மஞ்சளுக்கு மத்தியில், குறைந்த நாளில் அதிக மகசூல், அதிக குர்குமின் தன்மை கொண்ட பிரகதி மஞ்சளானது சந்தையில் 10,000 ரூபாய் வரை விலைபோகும்” என்றார்.