Published:Updated:

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0
பிரீமியம் ஸ்டோரி
பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

புதியதொடர்

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

புதியதொடர்

Published:Updated:
பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0
பிரீமியம் ஸ்டோரி
பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

யலில் ஏதாவது பூச்சியைப் பார்த்ததும் உடனடியாகப் பூச்சிக்கொல்லி வாங்க ஓடுபவரா நீங்கள்... அப்படியிருந்தால், உங்களுக்காகத்தான் இத்தொடர்!

பூச்சிகளின் உலகம் மிகப் பிரமாண்டமானது. அதன் இனப்பெருக்க விகிதம், மனிதனைவிடப் பல மடங்கு அதிகமானது. அதனால்தான், பூச்சிகளின் எண்ணிக்கை, உலகில் அதிகளவில் இருக்கிறது. பொதுவாகப் பூச்சிகள், முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி என நான்கு படிநிலைகளைக் கொண்டவை. பூச்சிகளின் இளம்பருவமான புழுப்பருவத்தில் ஒவ்வொரு புழுவும் தன் உடல் எடையைப்போல 50 மடங்கு அளவு உணவை உண்டு 48 மடங்கு அளவு கழிவை வெளியேற்றுகின்றன. பயிரில் இழப்பை உண்டாக்குகின்றன, மனிதர்கள் உள்பட உயிரினங்களுக்கு நோயைப் பரப்புகின்றன என்பதுதான் பூச்சிகளைப் பற்றிப் பொதுவாக நாம் அறிந்து வைத்திருக்கும் விஷயங்கள். ஆனால், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் புறச்சூழலையும் உணவு வளையத்தையும் நிர்வகிப்பதில் பெரும்பங்காற்றுபவை பூச்சிகள்தான். உலகில் அழிந்துபோன உயிரினங்களின் பட்டியலில் ஒரு பூச்சி இனம்கூட இடம் பெறவில்லை என்பது ஆச்சர்யமான உண்மை. அவை அழியாததற்குக் காரணம் அவற்றின் உருவ அமைப்புதான்.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

ஒரு கணக்குக்கு உலகில் யானை மிதித்து 2,000 பேரும், பாம்பு கடித்து 10,000 பேரும் இறக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இந்த விகிதத்தோடு ஒப்பிட்டால் கொசுக்களால் கடிபட்டு நோய்த்தொற்றுகளுக்குள்ளாகி இறப்பவர்கள் 1,00,000 பேருக்கும் அதிகம். இப்போது முடிவு செய்து கொள்ளுங்கள் உலகில் பலசாலியான உயிரினம் எது என்பதை. இப்படிப்பட்ட பராக்கிரமங்களைக் கொண்டிருப்பதால்தான் பூச்சிகளைப் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு அவசியம் என்பதாக உள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு மிக மிக அவசியம்.

பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், மண்ணில் உள்ள பொருள்களை மட்க வைக்கும் பூச்சிகள் என மூன்று வகைகள் உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டில் ‘பசுமை விகடன்’ இதழில் தொடர்ந்து வெளிவந்த ‘பூச்சிகளும் நம் நண்பர்களே’ தொடரில்... நன்மை செய்யும் பூச்சிகளைப் பற்றிப் பார்த்தோம். தீமை செய்யும் பூச்சிகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், மட்க வைத்து மண்ணைப் பொன்னாக்கும் பூச்சிகளைப் பற்றிப் பெரும்பாலானோருக்குத் தெரியாது. இந்தப் ‘பூச்சிகளும் நம் நண்பர்களே 2.0’ தொடரில் அவற்றைப் பற்றியும் பார்க்க இருக்கிறோம். உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பூச்சிக்கொல்லி கொசுவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான். 1939-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பால் முல்லர் என்பவர் கொசுக்களைக் கொல்வதற்காக, ‘டி.டி.டீ’(DDT) எனும் பூச்சிக்கொல்லியை உருவாக்கினார். அது கொசுக்களை அழிப்பதைக் கண்டறிந்த பிறகு, முல்லர் சொன்ன வாசகம் ‘இனி உலகத்தில் கொசுக்களே இருக்காது’ என்பதுதான். ஆனால், இன்றுவரை அந்த வாசகத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்கள், விஞ்ஞானிகள். ஆனால் முடியவில்லை. கொசுக்களை அழிக்க, தென் கிழக்கு ஆசிய நாடுகள் செலவழிக்கும் தொகை, அமெரிக்கா ராணுவத்துக்குச் செலவழிக்கும் தொகைக்கு ஈடானது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

உணவுகளைச் சிதைக்கும் பூச்சிகளில் கரப்பான் பூச்சிக்கு முக்கியப்பங்கு உண்டு. மனிதன் சாப்பிட்டு மீதமான உணவுகளை, தன் உணவாக எடுத்துக்கொண்டு அதை அப்புறப்படுத்தும் பூச்சி உண்மையில் சிறந்ததுதானே. ‘கரப்பான் பூச்சி இருந்தா வீட்டுல செல்வம் சேரும்’ என இன்றும் கிராமங்களில் சொல்வதைக் கேட்கலாம். அவை, நமது உணவின் மீதத்தை எடுத்து அப்புறப் படுத்துகின்றன. இதுபோன்ற புரிதல்கள் இல்லாததால், மனிதனுக்கும், பூச்சிகளுக்கும் இடையில் நடக்கும் போரில் பூச்சிகள் அதிகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

2050-ஆம் ஆண்டில் மனிதனின் உணவுத் தேவைக்கு ஏற்ப, உணவு உற்பத்தி இருக்குமா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அப்படி ஒரு தட்டுப்பாடு ஏற்பட்டால், நமக்கு உணவாகக் கைகொடுக்கக் காத்திருப்பவை, பூச்சிகள்தான். ஒரு கிலோ மாட்டுக்கறியில் இருக்கும் புரோட்டீன், ஒரு பூச்சியில் இருக்கிறது. நமது எதிர்கால உணவே பூச்சிகளாக இருக்கக்கூடும். இதுவரை உலகில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்ட உயிரின வகைப்பாடு பட்டியலில் 57 சதவிகிதம் பூச்சிகள்தான். மீதி 43 சதவிகிதம்தான் மனிதர்கள், ஆடு, மாடு, கோழி எல்லாமே. இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் பூச்சி இனங்கள்தான் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன. பூச்சிகளின் வகைகளில் இது வெறும் பத்துச் சதவிகிதம் மட்டுமே. இன்னும் 90 சதவிகித அளவு பூச்சிகள் வகைப்படுத்தப்படவில்லை. இதுவரை, 4,00,000 வண்டு வகைகள், 1,70,000 வண்ணத்துப்பூச்சி மற்றும் அந்துப் பூச்சி வகைகள், 1,20,000 ஈ வகைகள், 82,000 கதிர் நாவாய் பூச்சி வகைகள், 1,10,000 எறும்புகள் மற்றும் தேனீ வகைகள், 5,000 தட்டான் பூச்சி வகைகள், 2,000 கும்பிடு பூச்சி வகைகள், 20,000 வெட்டுக்கிளி வகைகள், 1,50,000 குளவி வகைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது யோசித்துப் பாருங்கள்... நாம் பூச்சிகளின் உலகத்தின் வசிக்கிறோமா... இல்லை பூச்சிகள் நம் உலகில் வசிக்கின்றனவா என்று!

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

இந்தப் பூச்சிகள்தான் மனிதனின் வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மனிதன் உண்ணும் உணவுகள், பூச்சிகளால்தான் உருவாக்கப்படுகின்றன. மனிதனைப் போலவே பூச்சிகளுக்கும் நரம்பு மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் ஆகியவை உள்ளன. மனிதனால் மூக்கு, வாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி மட்டுமே சுவை உணர்வைக் கண்டறிய முடியும். பூச்சிகளுக்கு அதைவிட மேலான கண்டறியும் திறன் உண்டு. ஒலி, ஒளி இரண்டையும் கண்டுபிடித்துப் பயன்படுத்துபவை பூச்சிகள்தான். காட்டில் இருக்கும் சில்வண்டு, இறக்கை மூலமாகத் தன் இணையைத் தேடுவதற்குக் கொடுக்கும் ஒலியானது 2 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கேட்கும். மின்மினிப் பூச்சிகள் இணை மற்றும் இரைதேட வெளிச்சத்தை (ஒளியை) வெளியிட்டுப் பறக்கின்றன.

தேனீக்கள், எறும்புகள், கறையான்கள் போன்ற பூச்சி இனங்கள் கூட்டுக் குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு பூச்சியையும் பார்த்துத்தான் அடுக்கு மாடி வீடுகள், விமானம் மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகள் போன்ற புதிய தொழில்நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டன. பூச்சிகளைப் பார்த்துக் கண்டறிய வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு முட்டையிலிருந்து ஓர் உயிரினம் வருவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஒட்டுண்ணி குளவிகள், ஒரு முட்டையிலிருந்து 100 குளவிகளை உருவாக்கும் திறன் வாய்ந்தவை. ராணித் தேனீ, ஒருமுறை உடலுறவு வைத்துக் கொண்டால், ஓர் ஆண்டில் இரண்டு லட்சம் முட்டைகளை இடும் வல்லமையைப் பெற்றது.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

இக்காலகட்டத்தில் அதிகமான பூச்சிக்கொல்லிகளைத் தெளித்துத் தீமை செய்யும் பூச்சிகளோடு நன்மை செய்யும் பூச்சிகளையும், மண்ணை வளமாக்கும் பூச்சிகளையும் அழித்து வருகிறோம். மண்ணைப் பொன்னாக்கி விவசாயிகளை வளமாக்கும் பூச்சிகளைப் பற்றி இத்தொடரில் தொடர்ந்து பார்க்கலாம்... வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்.

- அறிவோம்

 - நீ.செல்வம்,

தொகுப்பு: ஆர்.குமரேசன்

இவரைப் பற்றி...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரைச் சேர்ந்த நீ.செல்வம், தற்போது மதுரை மாவட்ட வேளாண் உதவி இயக்குநராக (பயிர் காப்பீடு) பணியாற்றி வருகிறார். இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2000-ஆம் ஆண்டில் உலக உணவு மற்றும் வேளாண் கழகம் சார்பில்... கர்நாடக மாநிலத்தில் நடந்த ‘ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு’ப் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தவர். அந்த ஆறு மாத வயல்வெளிப் பள்ளிப் பயிற்சிதான் இவரைப் பூச்சிகளின்பால் அதிகக் கவனத்தைத் திருப்பியது. நன்மை செய்யும் பூச்சிகளின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர்... அதைப் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வேளாண் அலுவலர்களுக்கு வயல்வெளிப் பள்ளிப் பயிற்சிகள் அளித்துள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் சுற்றி விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

தான் கற்ற பயிற்சி, பெற்ற அனுபவம் ஆகியவற்றைத்தான் உங்களிடம் எடுத்து வைக்கப் போகிறார், செல்வம். குறிப்பாக, பூச்சிகள் விவசாயிகள் மற்றும் மனிதக்குலத்துக்கு எந்த வகையில் நண்பர்களாக இருக்கின்றன என்பதைப் பற்றித் தெள்ளத் தெளிவாக உங்களுக்கு விளக்குவார்.

பூச்சிகளே எதிர்கால உணவு!

`2050
-ஆம் ஆண்டில் உலகின் முக்கிய உணவுப்பொருளாக இருக்கப்போவது பூச்சிகள்தான்’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது ஐ.நா சபை. `உலகின் மொத்தப் பரப்பளவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏற்கெனவே பூச்சிகளை உணவாக உட்கொள்ள ஆரம்பித்து விட்டன. இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்’ எனப் பயமுறுத்துகிறது ஐ.நா சபை.

‘இனிவரும் காலங்களில், மனித உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உற்பத்தி செய்தால் போதும். நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களைப் பயிர் செய்ய, பல லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், வறட்சி போன்றவற்றின் காரணமாகச் சாகுபடி நிலங்கள் குறைந்துவரும் சூழலில், அது சாத்தியமில்லாத ஒன்று. அதே நேரம், ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து கிடைக்கும் தானியங்கள் எத்தனை நபர்களின் பசியைப் போக்குமோ அத்தனை நபர்களின் பசியை, பத்துக்குப் பத்து அறையில் பூச்சிகளை வளர்ப்பதன் மூலம் போக்க முடியும். பூச்சிகளில் அதிக அளவு புரதம் உள்ளது. எனவே, பூச்சிகளை உணவாக உட்கொள்வதன் மூலம் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கலாம்’ என்கிறது, ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கை.

இன்னும் 30 ஆண்டுகளில், பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நிச்சயம் இடம் பிடிக்கும். நீங்கள் உண்ணாவிட்டாலும், உங்கள் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் நிச்சயம் பூச்சி உணவை ருசி பார்ப்பார்கள். இந்தியாவில் ஈசலைப் பிடித்து வறுத்து உண்ணும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, ஒன்பது பில்லியன் கோடியாக உயரும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில், உணவுப்பாதுகாப்பு மிக அவசியமானது. அனைத்து மக்களின் உணவுத் தேவையை வேளாண் துறையால் மட்டும் பூர்த்திச் செய்ய முடியாது. அதனால், மாற்று உணவு அவசியமான ஒன்று. அந்த மாற்று உணவாகத்தான் பூச்சிகளை அடையாளம் காட்டுகிறது, ஐ.நா சபை. தற்போதுள்ள 720 கோடி மக்களில் கிட்டத்தட்ட 200 கோடிப் பேர் பூச்சிகளையும் ஒரு வகை உணவாக உட்கொள்கிறார்கள் என்பதுதான் ஐ.நா சபை சொல்லும் காரணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism