Published:Updated:

சட்டப்பஞ்சாயத்து!

சட்டப்பஞ்சாயத்து!
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பஞ்சாயத்து!

வழிகாட்டும் தொடர்...புதியதொடர்

சட்டப்பஞ்சாயத்து!

வழிகாட்டும் தொடர்...புதியதொடர்

Published:Updated:
சட்டப்பஞ்சாயத்து!
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பஞ்சாயத்து!

நான்கே கேள்விகளில் பட்டா மாறுதல்!

நிலத்துக்குப் பட்டா வாங்க எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? குடும்ப அட்டைக்கான கட்டணம் எவ்வளவு? இந்த இரண்டு கேள்விகளைச் சிலரிடம் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள். ஆனால், உண்மை வேறு. நாம் வாங்கும் நிலத்தைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, நாம் கட்டும் பதிவுக்கட்டணத்துடனேயே பட்டா மாற்றுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி விடுகிறோம். ஆனால், ‘பட்டாவுக்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தனியாகப் பணம் கட்டவேண்டும்’ என்று சொல்வார்கள். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதும் உண்டு.

சட்டப்பஞ்சாயத்து!

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி நான்கே நான்கு கேள்விகள் கேட்டால் போதும். ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் உங்கள் பெயருக்குப் பட்டா மாறிவிடும்.

அந்த நான்கு கேள்விகள்...

1. நிலம் எந்தத் தேதியில் வாங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

2. அந்தப் பதிவு உங்களுக்கு எந்தத் தேதியில் வந்துள்ளது?

3. அந்தப் பதிவு வந்த தபால் பதிவேட்டின் நகல் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

4. எங்கு, எப்போது பட்டா மாற்றம் செய்யப்படும்? 

இவற்றைக் கேட்டால் போதும்... உடனே பட்டா மாற்றம் செய்யப்பட்டுவிடும்.

அரசு அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும்... அதாவது பட்டா, நியாய விலைக்கடை அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற எந்தச் சேவைகளாக இருந்தாலும் அவற்றுக்கான அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொண்டால், நம் பணமும் நேரமும் மிச்சமாகும். ஆனால், இடைத்தரகர்களிடம் பணத்தைக் கொடுத்து, அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்து வேலையை முடிக்கக்கூடிய மனநிலையில்தான் பலரும் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சட்டப்பஞ்சாயத்து!

இன்று எல்லோரிடமும் குடும்ப அட்டை இருக்கும், அந்தக் குடும்ப அட்டைக்கு அரசாங்கம் நிர்ணயித்த தொகை எவ்வளவு என்று பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. அதற்கு அரசு நிர்ணயித்துள்ள தொகை 5 ரூபாய்தான். ஆனால், இடைத்தரகர்களிடம் 500 ரூபாய்க்கு மேல் கொடுத்து குடும்ப அட்டை வாங்கியவர்கள் கூட உண்டு.

சில நிலப்பிரச்னைகளுக்கு ஆவணங்களைப் பார்த்துத்தான் பதில் சொல்ல முடியும். அதற்காக எங்கள் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையிலும் முகாம் நடத்துகிறோம்.

துணை ஆட்சியராக இருந்து ஓய்வுபெற்ற நண்பர் ஒருவர், இதில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குகிறார். அவர் வருவாய்த் துறையில் 30 ஆண்டுகள் பணி செய்தவர். ஆவணங்களைப் பார்த்தவுடன், அதில் உள்ள நிறை, குறைகளைத் தெளிவாகச் சொல்லிவிடுவார். அதோடு, வழக்குத் தொடர சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் தெளிவாகச் சொல்லிவிடுவார்.

- வழிகாட்டல் தொடரும்

 சிவ.இளங்கோ

சட்டப்பஞ்சாயத்து!

இவரைப் பற்றி...

திருவாரூர் மாவட்டம், பொய்கைநல்லூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சிவ.இளங்கோ. முதுகலை (இதழியல்) முடித்துவிட்டுப் பத்திரிகை துறையில் பணியாற்றினார். பத்திரிகையில் எழுத மட்டுமே முடியும், சில விஷயங்களைத் தீர்க்க வேண்டுமானால், ஓர் இயக்கமாக இயங்கினால்தான் முடியும் என நினைத்து மக்கள் சக்தி இயக்கத்தோடு இணைந்து செயலாற்றினார்.

டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய நூல்களின் தீவிர வாசகர். சென்னையில், 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி, இவரது சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்தான் துவக்கி வைத்தார். அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டுமானால், நல்ல அரசு நிர்வாகம் வேண்டும். மக்களுக்கு விழிப்பு உணர்வு இருந்தால்தான் நல்ல நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற ரீதியில் இவரின் பயணம் தொடர்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism