Published:Updated:

வைகை, முல்லைப்பெரியாறு ஆறுகளில் தொடரும் தண்ணீர் திருட்டு.! - கலெக்டர் கவனிப்பாரா?

வைகை, முல்லைப்பெரியாறு ஆறுகளில் தொடரும் தண்ணீர் திருட்டு.! - கலெக்டர் கவனிப்பாரா?
வைகை, முல்லைப்பெரியாறு ஆறுகளில் தொடரும் தண்ணீர் திருட்டு.! - கலெக்டர் கவனிப்பாரா?

வைகை மற்றும் முல்லைப்பெரியாறு ஆறுகளில் தொடரும் தண்ணீர் திருட்டு குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிற்கு தொடர் புகார் மனுக்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் நடவடிக்கை தான் இதுவரை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை வைகை மற்றும் முல்லைப்பெரியாறு ஆகிய இரண்டு ஆறுகளைக் கொண்டு தான் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் தேவை ஆகியவை சமன்செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆறுகளின் கரைகளில் இருக்கும் தென்னை மற்றும் மா தோட்டங்களுக்குச் சட்ட விரோதமாக மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடுவது இன்றுவரை தொடர் கதையாகவே உள்ளது. “விவசாயத்திற்குத் தானே தண்ணீர் என்று சும்மா இருக்கும் விசயம் இல்லை இது. ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் இல்லை நூற்றுக்கணக்கான ஏக்கர் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்.

சிலர், தங்கள் தோட்டங்களில் பெரிய தொட்டி கட்டிவைத்து தண்ணீரை சேமிக்கிறார்கள். ஆறு வறண்டு இருன்ந்தாலும் குழி தோண்டி தண்ணீர் திருடுகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தால் மோட்டார் இயக்காமல் இருக்க மின்சாரத்தைத் துண்டிக்கிறார்கள். ஆனால், அவர்கள் டீசல் மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கிறேன் என்கிறார். அதோடு சரி… இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது தொடர்பாக கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, “ஒவ்வொரு வட்டத்திற்கு ஒரு துணை ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறன. வரும் காலம் கோடைக் காலம் என்பதால் ஆற்றில் இருந்து தண்ணீர் திருடும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை பாயும்.!” என்றனர்.