Published:Updated:

`கூட்டம் நடக்கும்போதே அதிகாரிகள் அலட்சியமா செல்போன் பயன்படுத்துறாங்க!’ - விவசாயிகள் வேதனை

`கூட்டம் நடக்கும்போதே அதிகாரிகள் அலட்சியமா செல்போன் பயன்படுத்துறாங்க!’ - விவசாயிகள் வேதனை
`கூட்டம் நடக்கும்போதே அதிகாரிகள் அலட்சியமா செல்போன் பயன்படுத்துறாங்க!’ - விவசாயிகள் வேதனை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது அதிகாரிகள் பலரும் பிரச்னைகளைப் பற்றி கேட்காமல் செல்போனையே பயன்படுத்திக்கொண்டிருந்தது விவசாயிகளுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கர்ணன்: வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதிகாரி: கால்வாயைத் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, நிதி கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

விவசாயி விஜயமுருகன்: தமிழ்நாட்டில் விவசாயத்தை முற்றிலும் அழிப்பதற்காகவே மக்காச்சோள பயிரிலேயே கலந்து அமெரிக்கன் படைப்புழுக்கள் பரப்பப்பட்டுள்ளன. தற்போது அந்தப் படைப்புழுக்கள் கரும்பிலும் பரவிவிட்டன. எனவே, அந்தப் படைப்புழுக்களை பரப்பிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அருணாச்சலம்: மக்காச்சோளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அமெரிக்கன் படைப்புழுக்கள் தொடர்ந்து ஆய்வகத்தில் சோதனை நடத்தினோம். அவை விதையுடன் சேர்ந்து பரப்பப்படவில்லை. வட அமெரிக்காவில் உள்ள பூச்சிகள் நாளொன்றுக்கு 100 கி.மீ வேகத்தில் பறந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் வந்து படைப்புழுக்களை பரப்பியுள்ளன. முதல்முறை இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இதை, சரிசெய்ய முடியவில்லை. அந்தப் புழுவின் தன்மை கண்டறியப்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.http://வட அமெரிக்காவில் உள்ள பூச்சிகள் நாளொன்றுக்கு 100 கி.மீ வேகத்தில் பறந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் வந்து படைப்புழுக்களைப் பரப்பியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட எந்தப் பயிர்களுக்கும் இதுவரை பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. பயிர் காப்பீட்டுக்குத் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலைக் கேட்டாலும் யாரும் தரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் காப்பீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு ரூ.8.5 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். அப்படியென்றால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் செலுத்தியவர்களின் கதி என்ன? என விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயி: வத்திராயிருப்பு பகுதியில் 1,500 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக்கிணறு அமைத்து சிலர் அனுமதியின்றி தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் விவசாயத்துக்கே தண்ணீரின்றி ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இதைக் கண்காணிக்க வேண்டும்.

ஆட்சியர்: தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனுமதியின்றி பல அடி தூரம் ஆழத்தில் தண்ணீர் எடுப்பவர்கள் குறித்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

விவசாயி: மூலவைகை ஆற்றில் இருந்து அரசரடி வழியாக பிளவக்கல் அணைக்குத் தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

அதிகாரி: கால்வாய் அமைக்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளன. விரைவில் பணிகள் முழுவதும் முடிவடைந்துவிடும் என்றார்.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அதிகாரிகள் சிலர் அறைக்குள்ளேயே போன் பேசிக்கொண்டும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டும் இருந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, ``நாங்கள் எங்கள் குறைகளைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் இங்கே வந்துள்ளோம். ஆனால், கலெக்டர் இருக்கும்போதே அதிகாரிகள் எல்லாம் செல்போனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகவா நாங்கள் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து இங்கே வந்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்தனர்.