Published:Updated:

`ஜெயராமனை போலீஸார் எங்கு வைத்திருக்காங்கன்னு தெரியல!’ - பதற்றத்தில் கதிராமங்கலம் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ஜெயராமனை போலீஸார் எங்கு வைத்திருக்காங்கன்னு தெரியல!’ - பதற்றத்தில் கதிராமங்கலம் மக்கள்
`ஜெயராமனை போலீஸார் எங்கு வைத்திருக்காங்கன்னு தெரியல!’ - பதற்றத்தில் கதிராமங்கலம் மக்கள்

`ஜெயராமனை போலீஸார் எங்கு வைத்திருக்காங்கன்னு தெரியல!’ - பதற்றத்தில் கதிராமங்கலம் மக்கள்

கதிராமங்கலத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பொதுமக்களிடம் எதுவும் தெரிவிக்காமல் திடீரென ஒ.என்.ஜி.சி அலுவலர்கள் அங்குள்ள எண்ணெய்க் கிணற்றில் போலீஸ் துணையோடு பராமரிப்புப் பணிகள் செய்தனர். பேராசிரியர் ஜெயராமன் மற்றும் மக்கள், `என்ன பணிகள் செய்கிறீர்கள்' எனக் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் ஜெயராமனையும் ராஜீவ் என்பவரையும் கைது செய்துகொண்டு சென்றனர். அவர்களை உடனே விடுதலை செய்யவில்லை என்றால் கடைவீதியில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவோம் என மக்கள் தெரிவித்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ளது கதிராமங்கலம். இந்தக் கிராமத்தில் பிரதான தொழில் விவசாயம்தான். எப்போதும் பசுமை சூழ்ந்த வயல்களால் செழிப்பாக இருக்கும் இந்தக் கிராமம் ஒ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்க தொடங்கியதில் இருந்து தன் செழிப்பை இழந்து வந்தது. நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்குச் சென்றதோடு காற்று, குடிநீர் என அனைத்தும் மாசடைந்துவிட்டதாகக் கதிராமங்கலம் மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், குடி நீர் குழாய்களில் வரும் தண்ணீர் எண்ணெய் கலந்து வருவதாகவும், எண்ணெய் வாடை அடிப்பதாகவும் அதனால் தண்ணீரைக் குடிக்கவே முடியாது என்றும் தெரிவித்து வந்தனர். மேலும், இதனால் மக்கள் பலவித நோய்களால் தாக்கப்படுவதாகவும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தைவிட்டு முற்றிலும் வெளியேற வேண்டும் எனப் போராட ஆரம்பித்தனர். அதே ஆண்டு ஜூன் 30-ம் தேதி ஒ.என்.ஜி.சி குழாயில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் வயல்களில் எண்ணெய் கலந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதைக் கண்டித்து மக்கள் அந்த இடத்தில் திரண்டு அறவழியில் போராட ஆரம்பித்தனர். `கலெக்டர் அண்ணாதுரை நேரில் வந்து கூறினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம்' என்ற நிலையில் ஒ.என்.ஜி.சி குழாய் வெடித்து தீப்பிடித்தது. இதற்குப் போராடிய மக்கள்தான் காரணம் எனக் கூறி போலீஸ் ஆண், பெண் என யாரையும் பார்க்காமல் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில் காவல்துறையினர் ஒ.என்.ஜி.சி-க்கு ஆதரவாகச் செயல்பட்டு மக்கள் கலவரம் நடத்தியதாகப் பலர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அந்தச் சமயத்திலும் பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, `ஒ.என்.ஜி.சி எங்கள் ஊரைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம்' என அங்குள்ள ஐயனார் கோயிலில் தினமும் அறவழி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் பிறகு, கதிராமங்கலம் மீது அனைவரது பார்வையும் திரும்பின. ஆளும் கட்சியான அ.தி.மு.க, மத்திய பி.ஜே.பி அரசை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து அவர்கள் நடத்திய போராட்டத்திலும் கலந்துகொண்டனர். இந்தச் சமயத்தில் கதிராமங்கலம் பாகிஸ்தான் எல்லை என்கிற அளவுக்குக் கதிராமங்கலத்தைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது. போலீஸாரின் கெடுபிடியால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கும் வெளியே சென்று வருவதற்கும் சிரமப்பட்டு பல வித இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த நிலையில் இப்போது வரை ஒரு சிலராவது ஐயனார் கோயிலில் கூடி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அப்பகுதி மக்களைச் சமாதானம் படுத்தும் விதமாக 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூட கட்டடம், தண்ணீர் டேங்க் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்ததோடு இன்னும் பல வசதிகள் செய்யப்படும் என்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கதிராமங்கலத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஜீப் மற்றும் இரண்டு வேன்களில் போலீஸார் வட்டமடித்தனர் பின்னர் கடைத்தெருக்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், தீயணைப்பு வாகனமும் வந்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த ஒ.என்.ஜி.சி அலுவலர்கள் எண்ணெய்க் குழாய்களைச் சுத்தப்படுத்தும் பணியை செய்யத் தொடங்கினர். மக்களுக்கு ஒருவித குழப்பமும் அச்சமும் ஏற்பட பேராசிரியர் ஜெயராமனைத் தொடர்புகொண்டு தகவல் கொடுத்துள்ளனர். உடனே தன் மனைவியோடு வந்த ஜெயராமன் என்ன பணிகள் செய்கிறீர்கள், ஏன் எந்தவித முன்னறிவிப்புமின்றி செய்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்குள் அங்கு நின்ற போலீஸார் நீங்க முதல்ல ஜீப்பில் ஏறுங்க எனக் கூறியவரைத் தள்ளிவிட்டு கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அவரோடு ராஜிவ் என்பவரையும் கைது செய்தனர். இந்தச் சம்வத்தால் கதிராமங்கலத்திம் மீண்டும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய கதிராமங்கலம் மக்கள், ``இன்று காலை ஏராளமான ஜீப் மற்றும் வேனில் வந்த போலீஸார் கதிராமங்கலத்தையே வலம் வந்தனர். எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பழையபடி காவல்துறை, கலவரத்தைத் தூண்டப்போகுதே என்றும் ஒஎன்ஜிசி மூலம் ஏதும் பெரிய பிரச்னை  நடக்கபோகிறதோ என நினைத்து அச்சம் கொண்டு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்குத் தகவல் சொன்னோம். அவரும் தன் மனைவியுடன் உடனே கிளம்பி வந்தார். அப்போது ஒஎன்ஜிசி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ பணி செய்துகொண்டிருந்தனர். ஜெயராமன் மற்றும் நாங்கள் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு பராமரிப்புப் பணிதான் எனச் சொன்னார்கள். எந்த அறிவிப்பும் இல்லாமல் மக்களிடம் எதுவும் தெரிவிக்காமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் அவரை தள்ளிவிட்டு, கழுத்தை நெரிச்சு போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்றனர். அவரோடு ராஜீவ் என்பவரையும் அழைத்து சென்றனர். எங்கே அவர்களை வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது போலீஸ் செய்யும் அராஜகம். உடனே ஜெயராமன்,ராஜிவ் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் கதிராமங்கலம் கடைவீதியில்  நங்கள் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்'' என்றனர்.
 

ஜெயராமன் மனைவியிடம் இது குறித்துப் பேசினோம். ``ஒ.என்.ஜி.சி ஏதோ போலீஸை திரட்டி பணி செய்கிறார்கள் எனச் சொன்னதும் நானும் என் கணவரும் கிளம்பி வந்தோம். ஒஎன்ஜிசி அதிகாரிகளிடம் என்ன ஏது என விவரம் கேட்டார் என் கணவர் ஜெயராமன். ஆனால், எதையுமே கூறாமல் அவரைத் தரதரவென இழத்துச் சென்றனர் போலீஸார். அவர் இப்போது எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர் வந்தால்தான் நான் இந்த ஊரைவிட்டுச் செல்வேன். இல்லையென்றால் இங்கேயே இருந்து போராட்டம் நடத்துவேன்’’ எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் கதிராமங்கலத்தில் மீண்டும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு