Published:Updated:

கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்!
கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... 2சட்டம்சிவ.இளங்கோ

பிரீமியம் ஸ்டோரி

ற்போது டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யப் படாதபாடு பட்டு வருகிறார்கள். அதனால், பயிர்க்கடன், பயிர்க் காப்பீடு போன்ற விவரங்களைப் பார்ப்பதற்கு முன் லஞ்சம் கொடுக்காமல் நெல்லை விற்பனை செய்வது குறித்துப் பார்ப்போம்.போதிய மழையின்மை, கஜாப் புயலின் தாக்கம், சரியான நேரத்துக்குக் காவிரி நீர் கிடைக்காதிருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால், இந்த ஆண்டுச் சராசரி அளவைவிட நெல் விளைச்சல் குறைவாகத்தான் உள்ளது. வழக்கமாக ஏக்கருக்கு 30 மூட்டை (60 கிலோ மூட்டை) அறுவடையாகும் வயல்களில் தற்போது 20 முதல் 25 மூட்டை அளவுதான் மகசூல் கிடைத்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் 80 சதவிகித நெல் வயல்களில் எந்திரம் மூலம்தான் அறுவடை நடக்கிறது.  

கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்!

தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை, குறைந்த வாடகைக்கு நெல் அறுவடை எந்திரங்களை விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறது. ‘முதலில் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. குறைந்த வாடகையில் கிடைப்பதால் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டயர் மூலம் ஓடும் எந்திரத்துக்கு ஒரு மணி நேர வாடகை 875 ரூபாய். இதே எந்திரத்தைத் தனியாரிடம் வாடகைக்கு எடுத்தால் மணிக்கு 1,800 ரூபாய் வரை கட்டணம் கொடுக்க வேண்டியிருக்கும். ஈர வயல்களில் அறுவடை செய்யக்கூடிய பெல்ட் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 1,425 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயித்திருக்கிறது, வேளாண் பொறியியல் துறை. இந்த எந்திரத்துக்கு வெளியில் 2,300 வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. ‘ஆண்ட்ராய்டு செல்போன்’ மூலம் ‘உழவன்’ (Uzhavan) செயலி வழியாகவே அறுவடை எந்திரங்களுக்குப் பதிவு செய்யும் வசதி விரைவில் வர உள்ளது.

கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்!



விவசாயிகளின் பணத்தேவையைப் பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் குறைந்த விலையில் நெல் கொள்முதல் செய்வதைத் தடுக்கும் நோக்கத்தில்... அரசே கொள்முதல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டவைதான், நேரடிக் கொள்முதல் நிலையங்கள் (Direct Purchase Centre-DPC). இந்தக் கொள்முதல் நிலையங்களை உரிய காலத்தில் திறக்காமல் தாமதப்படுத்தினால், விவசாயிகள் குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். முன்பு நவம்பர் மாத இறுதியிலேயே ஒவ்வொரு பகுதியிலும் கொள்முதல் நிலையங்களைத் திறந்துவிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதக் கடைசியில்தான் கொள்முதல் மையங்களைத் திறந்தனர் கொள்முதல் அதிகாரிகள். அதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். ‘தனியார் வியாபாரிகள் அரசு அதிகாரிகளைக் ‘கவனித்து’ விடுவதால்தான் கொள்முதல் நிலையங்கள் தாமதமாகத் திறக்கப்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டும் உண்டு.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளைக் குறிப்பிட்டு ‘டோக்கன் எண்’ கொடுப்பார்கள். அந்த எண்ணின்படி வரிசை முறையில்தான் நெல்லை விற்பனை செய்ய முடியும். விவசாயிகள் எடுத்துச் செல்லும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகித அளவுக்குள் இருக்க வேண்டும்.

ஈரப்பதம் சரிபார்த்த பிறகு, நெல்லை எந்திரம்மூலம் சுத்தப்படுத்தித் தூற்றி 40 கிலோ அளவு கொள்ளளவுள்ள சாக்குப் பையில் நிரப்பி... கொள்முதல் நிலைய கோடு எண், மாவட்ட கோடு எண், நெல் ரகம், லாட் எண் ஆகியவற்றை எழுதுவார்கள். நெல் எடை 40 கிலோ, சணல் சாக்குப்பை எடை 665 கிராம் சேர்த்து 40 கிலோ 665 கிராம் அளவுதான் எடை இருக்க வேண்டும். ஆனால், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை ஏமாற்றி 42 கிலோவுக்கு மேல் நெல்லை எடுத்து விடுவார்கள். அதனால், எடைபோடும்போது விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும். மூட்டையில் நெல்லின் அளவு 41 கிலோ அளவு மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்!

அதேபோல விவசாயிகள் கொண்டுவரும் நெல்லில் ஒரு மூட்டைக்கு 100 கிராம் வீதம் அதிகபட்சமாக 20 மூட்டைக்கு 2 கிலோ வரைதான் ‘மாதிரி நெல்’ (பில்லேஜ்) எடுக்க வேண்டும். 20 மூட்டைக்கு மேல் நெல் கொண்டுபோனாலும் கொள்முதல் நிலையத்தில் 2 கிலோ வரைதான் மாதிரி நெல் எடுக்க வேண்டும். கூடுதலாக மாதிரி நெல் எடுத்தால், அதற்கு விவசாயிகள் அனுமதிக்கக் கூடாது. ஒரு கிலோ மோட்டா ரக நெல் 18 ரூபாய் வீதம் 40 கிலோ மூட்டைக்கு 720 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சன்னரக (பொன்னி, பாபட்லா உள்ளிட்ட ரகம்) நெல்லுக்குக் கிலோ 18 ரூபாய் 40 காசு வீதம் 40 கிலோ மூட்டைக்கு 736 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத்தொகைதான் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லுக்கான தொகை உடனடியாக ரொக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்டது. தற்போது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்கு 10 நாள்கள்வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் வங்கியின் ‘பாஸ்புக்’ நகல் கொடுத்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதால்தான் வங்கிமூலம் பணப்பட்டுவாடா செய்யப் படுகிறது. ஆனாலும், அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லைச் சுத்தம் செய்து மூட்டைப் பிடிக்க 40 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால்தான் பில் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது. 

கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்!

நாங்கள் கள ஆய்வு செய்தவரையில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்காத கொள்முதல் நிலையமே தமிழகத்தில் கிடையாது. லஞ்சப் பணம் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவருக்கும் செல்வதால் கொள்முதல் நிலையத்தில் உள்ள பணியாளர்கள் பயப்படாமல் லஞ்சம் கேட்கிறார்கள். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. அரசு விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவை செயல்படுவதில்லை. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தலா ஒரு பட்டியல் எழுத்தர் (Bill clerk), உதவியாளர் (Helper), காவலர் (Watch Man) என மூன்று பேர் இருப்பர். இவர்கள் ஒரு நாளைக்கு 800 நெல் மூட்டைகளை மட்டுமே பில் போட்டு எடுக்க வேண்டும். ஒரு நாளில் 800 மூட்டை அளவு நெல்லைத்தான் எந்திரம்மூலம் சுத்தம் செய்து எடை போட்டுத் தைத்து அடுக்க முடியும்.

அதேபோல விவசாயிகள் விளைவித்துக் கொண்டு வரும் தரமான நெல் ரகங்கள் அனைத்தையுமே கொள்முதல் செய்ய வேண்டும். எந்த ரகத்தையும் வாங்க மாட்டோம் என மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுத்தாலோ, லஞ்சம் கேட்டாலோ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக (TNCSC) மண்டல மேலாளரிடம் புகார் செய்யலாம். அதற்குரிய நடவடிக்கை இல்லை என்றால், சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் புகார் செய்ய வேண்டும்.

விவசாயிகள் விழிப்பு உணர்வோடு இருந்தாலும் அதையும் மீறி லஞ்சம் கேட்கும்பட்சத்தில்... லஞ்சம் கொடுக்காமல் நெல் விற்பனை செய்யத் தயாராக இருக்கும் விவசாயிகள், எங்கள் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை அணுகலாம். திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலப் பத்து மணி முதல் மாலை 5 மணிவரை 76671 00100 என்ற செல்போன் எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

- வழிகாட்டல் தொடரும்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்களின் அலைபேசி எண்கள்:

திருவாரூர் - 9442 255542

தஞ்சாவூர் - 94437 32305

நாகப்பட்டினம் - 94433 42843

கடலூர் - 94421 30630

புதுக்கோட்டை - 94431 01720

திருச்சி - 94431 41723.

பொது மேலாளர்கள் - 94440 84512, 94440 81005, 94440 82448, 94454 56558, 94458 61671, 94440 82448

நிர்வாக இயக்குநர் - 044 26426773 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு