பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘நா
ட்டின் முன்னேற்றத்துக்காக ஒரு யோசனையைச் சொல்கிறேன். மனிதர்களின் சிறுநீரிலிருந்து, விவசாயத்துக்குப் பயன்படும் யூரியா எனும் உரத்தைத் தயாரிக்க முடியும். இதைச் செயல்படுத்தினால், யூரியாவை இறக்குமதி செய்யவேண்டிய தேவையே இருக்காது.’’

தானாகவே தெரியும்!-இப்படிச் சொல்லியிருப்பவர் வேளாண் விஞ்ஞானி அல்ல. மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

உடனே, இதற்கு மதச்சாயம் பூசி, அவரைக் கோமாளியாகச் சித்திரிக்க ஆரம்பித்துவிட்டனர் எதிர்க்கட்சியினரும் நெட்டிசன்களும்! எல்லாவற்றையும் எள்ளி நகையாடுவது என்பது ஆபத்தான போக்கு. அமைச்சர் சொல்லியிருப்பதில் என்ன உண்மை என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருவதுதான் முக்கியம். அமைச்சர் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையே. மனித சிறுநீரில், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. இதை அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்துள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பே திருச்சி மாவட்டம், முசிறி பேரூராட்சி, ‘வேஸ்ட்’ மற்றும் ‘ஸ்கோப்’ ஆகிய அமைப்புகள் இணைந்து பொதுக் கழிப்பறையைக் கட்டின. அதை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதுகுறித்துப் பசுமை விகடன் செப்டம்பர் 10, 2008 இதழில் ‘நீங்களும் ஓர் உரத் தொழிற்சாலைதான்! கழிவறைக்கு வாங்க காசு தருகிறோம்’ என்று அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இப்போதும்கூட, இந்தக் கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன. இவை வழக்கமான கழிவறைகள் அல்ல. உழவுக்குத் தேவையான உரத்தை உற்பத்தி செய்யும் கம்போஸ்ட் கழிவறைகள் ஆகும். கொஞ்சம் முயற்சி செய்தால், இதுபோன்ற கம்போஸ்ட் கழிவறைகளை நாடு முழுக்கக் கட்டிமுடிக்க முடியும்.

‘உண்டவன் உரம் பண்ணுவான்!’ என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். இந்தப் பூமியில் கழிவுகள் என்று ஏதுமில்லை. ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதுதான் உயிர்ச்சூழல் பன்மயத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதைப் புரிந்துகொள்ள மனமிருந்தால் போதும். மார்க்கம் தானாகவே தெரியும்.

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு