Published:Updated:

தக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன?
தக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன?

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி

மீப காலத்தில், காய்கறிக்கடைகளில் அரைக்கிலோ அளவு தக்காளி கேட்டால்... ‘கிலோவே ஏழு ரூபாய்தான். ஒரு கிலோவா வாங்கிக்கோங்க சார்’ என்று கடைக்காரர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. சில்லறை விலைக்கு விற்கும் காய்கறிக் கடைகளிலேயே ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகி வரும் சூழ்நிலையில்... விவசாயிகளிடம் என்ன விலைக்கு வாங்குவார்கள் என்று யோசித்துப் பாருங்கள். 

தக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன?

‘தக்காளி விலை வீழ்ச்சி...’, ‘அறுவடை செய்யும் செலவுக்குக்கூடக் கட்டாத விலை கிடைப்பதால், தக்காளி வயலில் ஆடு, மாடுகள் மேய்கின்றன’  என்றெல்லாம் தக்காளி விலை நிலவரம் குறித்து ஒவ்வோர் ஆண்டும் செய்திகள் வருவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், எப்போதும் விலை வீழ்ச்சி ஏற்பட்ட ஒருசில வாரங்களிலேயே மீண்டும் விலை படிப்படியாக அதிகரிக்கத்தொடங்கி ஒரு நிலையான விலைக்கு வந்துவிடும். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தக்காளி மிகக்குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருவதுதான் வேதனை. இதுகுறித்துத் தக்காளி விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் சிலரிடம் பேசினோம். கடந்த 30 ஆண்டுகளாகப் போகம் தவறாமல் தக்காளிச் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், திருப்பூர் மாவட்டம் எஸ்.அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி. அவரிடம் தக்காளி விலை நிலவரம் குறித்துப் பேசினோம்.

“தக்காளி ஒரு குறுகிய காலப்பயிர். சரியாகப் பராமரிச்சா ஏக்கருக்கு 15 டன் அளவு வரை மகசூல் எடுக்கலாம். ஒரு ஏக்கர்ல விதைச்சா தினமும் 40 பெட்டி (ஒரு பெட்டியின் கொள்ளளவு 15 கிலோ) வரை பழங்கள் கிடைக்கும். இப்போ பொதுவா விவசாயிகள் சாகுபடி செய்து வர்ற வீரியரகத் தக்காளிக்குப் பட்டம் கிடையாது. தண்ணீர் வசதி இருந்தா போதும், வருஷம் முழுக்கச் சாகுபடி செய்யலாம். அதனாலதான் வருஷம் முழுக்க மார்க்கெட்ல தக்காளி கிடைக்குது. போன வருஷமெல்லாம் தக்காளிக்கு நல்ல விலை கிடைச்சது. இந்த ஆறு மாசமாவே தக்காளிக்குச் சரியான விலை கிடைக்கலை. ஒரு கிலோவுக்குப் பத்து ரூபாய்க்கு மேல கிடைக்கலை. மார்ச் ஒண்ணாம் தேதியில இருந்து பார்த்தா கிலோவுக்கு ஆறு ரூபாய்க்கும் குறைவாத்தான் விலை கிடைக்குது. கிடைக்கிற விலை அறுவடை, வேன் வாடகை, ஏற்றுகூலி, இறக்கு கூலி, மார்க்கெட் சுங்கம் இதுக்கே சரியாப்போயிடுது. பல நேரங்கள்ல இந்தச் செலவுகளுக்கேகூடப் பத்த மாட்டேங்குது. அதனாலதான் அறுவடையே செய்யாம வயல்லயே விடுற சூழ்நிலை உருவாகிடுது.

உழவு, உரம், நாத்து, நடவு, களை எடுக்க, பாசனம் பண்ணனு ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை செலவாகுது. வெயில் காலங்கள்ல பழங்கள் வெடிச்சுச் சேதம் ஏற்படும். இவ்வளவு செலவு பண்ணியும் கடைசியில விலை இல்லேன்னா என்ன செய்ய முடியும். இப்ப விதைச்ச தக்காளி பறிக்கமாட்டாம வயல்ல கிடக்கு. ஆனா, அடுத்தப் போகத்துல நல்ல விலை கிடைச்சுடும்கிற நம்பிக்கையில நாத்து தயாரிப்புல இறங்கிட்டோம். இதுதான் சம்சாரிங்க பாடு” என்றார்.

செஞ்சேரிமலைப் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி வீரக்குமார் என்பவரிடம் இதுகுறித்துப் பேசினோம். “தமிழ்நாட்டுல விளையுற தக்காளி பெருமளவுல கேரளாவுக்குத்தான் போகுது. சொல்லப்போனா, கேரளாவை நம்பித்தான் தமிழ்நாட்டுத் தக்காளி மார்க்கெட்டே இருக்கு. ஒட்டன்சத்திரம், திருப்பூர், கிணத்துக்கடவு, நாச்சிப்பாளையம், உடுமலைப்பேட்டை மார்க்கெட்கள்ல இருந்து தினமும் கிட்டத்தட்ட 500 லாரி அளவுக்குக் கேரளாவுக்குத் தக்காளி போகும்.

இப்போ கர்நாடக மாநிலத்துல அதிகளவுல தக்காளி விளையுது. மானாவாரியாவே ஆயிரக்கணக்கான ஏக்கர்ல தக்காளி விளையுறதால, கிலோ 4 ரூபாய் விலைக்கு லாரி லாரியா கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தக்காளியை அனுப்புறாங்க. மானாவாரியா விளையுறதால அவங்களுக்கு உற்பத்திச் செலவு குறைவு. அதனால இந்த விலை அவங்களுக்குக் கட்டுபடியாகுது. கர்நாடகத் தக்காளி குறைவான விலையில கிடைக்கிறதால... கேரள வியாபாரிகள், தமிழ்நாட்டு தக்காளியை வாங்குறதைக் குறைச்சுக்கிட்டாங்க. இதனால, தக்காளிக்கு இங்க விலை கிடைக்கலை. நம்ம பகுதியில பெரும்பாலும் இறவைப்பாசனத்துலதான் தக்காளி விளைவிக்கிறாங்க. இதனால, உற்பத்திச்செலவு அதிகம். இத குறைஞ்ச விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தயாரா இல்லை. அதனாலதான் அறுவடையே செய்யாம விட்டுடுறாங்க. கர்நாடகாவுல இருந்து தக்காளி வரத்து குறைஞ்சாத்தான் தமிழ்நாட்ல விலை அதிகரிக்கும்” என்றார், வீரக்குமார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் ‘ஓமலூர்’ பெரியண்ணனிடம் பேசியபோது, “கர்நாடகாவுல மழை வளமும், மண் வளமும் நல்லா இருக்கு. மானாவாரியிலயே ஏக்கருக்கு 40 டன் வரை மகசூல் கிடைக்குது. விளைச்சல் அதிகமாக இருக்குற ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு விளைபொருள்களை அனுப்புவது இயல்பா நடக்கிற விஷயம்தான். ஒரு சில நேரங்கள்ல தமிழ்நாட்ல இருந்து கர்நாடகாவுக்குத் தக்காளி போறதும் உண்டு. ஆனா, தொடர்ந்து ஏற்படுற விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தற வகையில அரசாங்கம் திட்டம் தீட்டணும்.

தக்காளிப் பழங்களிலிருந்து ஜாம், ஜூஸ், ஊறுகாய் மாதிரியான மதிப்புக்கூட்டல் செய்யும் சிறு சிறு தொழிற்சாலைகளை அமைக்கணும். தக்காளியைச் சேமிச்சு வைக்க முக்கியமான ஊர்கள்ல குளிர்பதன சேமிப்புக்கிடங்குகளை அமைக்கணும். பதப்படுத்திய தக்காளியை ஏற்றுமதி செய்றதுக்கான நடவடிக்கைகளை எடுக்கணும். அப்போதான் விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்” என்றார்.

ஜி.பழனிச்சாமி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு