Published:Updated:

``பயிர்க் காப்பீட்டுப் பணம் இன்னும் வந்து சேரவில்லை!”- கொதிக்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்

``பயிர்க் காப்பீட்டுப் பணம் இன்னும் வந்து சேரவில்லை!”- கொதிக்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்
``பயிர்க் காப்பீட்டுப் பணம் இன்னும் வந்து சேரவில்லை!”- கொதிக்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய நிவாரணப் பணத்தை விவசாயிகளுக்குக் கொடுக்கப்படாமல் அரசு அதிகாரிகள் ஏமாற்றுவதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் வறட்சி பாதித்த மாவட்டமாகத் தமிழக அரசு அறிவித்தது. வறட்சி பாதித்த மாவட்டம் என்பதால் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால், காப்பீட்டு நிறுவனம் அதை முழுமையாக வழங்கவில்லை எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, ``காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் 21,000 விவசாயிகளுக்கு மேல் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். தமிழக அரசு வறட்சி மாவட்டமாக அறிவித்த பின்னர் 3,000 விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டு நிவாரணம் வழங்கி இருக்கிறது. குறிப்பாக 2016-ம் ஆண்டு காப்பீடு செய்தவர்களுக்கு வங்கியில் பணம் செலுத்தாமல் 2019-ம் ஆண்டில் விவசாயிகளிடத்தில் பேரம்பேசி கையில் பணத்தைக் கொடுத்து வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 24,000 நிவாரணம் அளிக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21,000 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் செலுத்திய ரூபாய் 45 லட்சம் காப்பீட்டுத் தொகையினை வேளாண் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மத்தியக் கூட்டுறவு வங்கியில் செலுத்தவில்லை. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்காமல் தாலுகா வாரியாக ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பணம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலையும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் பட்டியலையும் கூட்டுறவு வங்கிகளில் ஒட்ட வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளோம்” என்றார்.