Published:Updated:

பயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்!

பயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... 4சட்டம்சிவ.இளங்கோ

றட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்தால்... விவசாயிகளின் நஷ்டத்தைக் கொஞ்சம் ஈடுகட்டுவது, பயிர்க்காப்பீடு மூலம் கிடைக்கும் இழப்பீடுதான். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்’ (Prahdhan Mantri Fasal Bema Yojana-PMFBY) மூலம் பயிர்க்காப்பீடு செய்வது மிக அவசியமான ஒன்று. ஏதாவதொரு  காரணத்தால் விளைச்சல் குறையும் சமயத்தில், நாம் செய்த பயிர்க்காப்பீடு நமக்கு உதவும். நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லாத சமயத்தில், நமது பணம், இந்தியாவின் ஏதோ ஓர் மூலையில் உள்ள விவசாயிக்கு உதவலாம். அதனால், அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீட்டை உரியக் காலத்தில் எடுக்க வேண்டியது அவசியம். 

பயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்!

ஒவ்வோர் ஆண்டும் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அரசின் வல்லுநர் குழு நிர்ணயம் செய்கிறது. இந்தப் பிரீமியம் தொகை, மாவட்ட வாரியாக மாறுபடும். இந்தாண்டு சம்பா நெல் பயிருக்குத் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏக்கருக்கு 443 ரூபாய் பிரீமியம் தொகையென நிர்ணயம் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டத்துக்கு 308 ரூபாய்தான் பிரீமியம் தொகை. சம்பாப்பருவத்துக்கு நெல் பயிருக்குக் காப்பீடு செய்ய ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 30-ஆம் தேதிதான் கடைசித் தேதியாக அறிவிக்கப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்!



கடந்த சம்பாப்பருவ நெல் பயிருக்கு அதிகபட்ச இழப்பீட்டுத்தொகையாக ஏக்கருக்கு 29,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 5.4 சதவிகிதம் பிரீமியம் தொகை. அதில் 1.5 சதவிகிதப் பணத்தை மட்டும் விவசாயிகள் கட்டினால் போதும். அதாவது மொத்தம் 1,593 ரூபாய். அதில், 443 ரூபாயை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும். மீதித்தொகையை (1,150 ரூபாய்) தமிழக அரசும் மத்திய அரசும் சரிபங்காகப் பிரித்துக் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்திவிடுகின்றன.

விவசாயிகள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கும்பட்சத்தில்... அவர்களுக்கு வழங்கும் கடன் தொகையில் பிரீமியத்தொகையைப் பிடித்துக்கொண்டு மீதித்தொகையைத்தான் கொடுப்பார்கள். அதனால், பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கண்டிப்பாகக் காப்பீட்டுத்திட்டத்தில் இணைந்து விடுவார்கள். கடன் பெறாத விவசாயிகளும் குறிப்பிட்ட மையங்களில் பிரீமியம் செலுத்தித் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

கேழ்வரகு, மக்காச்சோளம், கம்பு, சோளம், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, காராமணி, பச்சைப்பயறு, துவரை, மஞ்சள், பருத்தி, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கும் காப்பீடு செய்துகொள்ள முடியும். ஒவ்வொரு பயிருக்கும் மாவட்ட வாரியாகக் காப்பீட்டுக்கட்டணம் மாறுபடும். காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதி உள்ளிட்ட விவரங்களைப் பயிர் காப்பீட்டுக் கட்டணம் வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மையங்களில் தெரிந்து கொள்ளலாம். 

பயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்!

அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி, ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு டெண்டர் மூலம் பயிர்க்காப்பீடு செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு இந்த உரிமம் நீடிக்கும். தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனியும், 10 மாவட்டங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியும், 10 மாவட்டங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் கம்பெனியும் காப்பீட்டு நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. 

பயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்!

இயற்கைப் பேரிடர்களால் மகசூல் பாதிக்கப்படும்போது, காப்பீட்டு நிறுவனம் உரிய இழப்பீட்டைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு பயிர்க்காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டபோது பயிர் பாதிப்புகள் மாவட்ட அளவில் கணக்கிடப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, ஒன்றிய அளவில் கணக்கிடப்பட்டது. தொடர்ந்து குறுவட்ட (பிர்க்கா) அளவில் கணக்கீடு செய்யப்பட்டு... தற்போது வருவாய் கிராமம் அளவில் மகசூல் இழப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால், ‘கிராம அளவில் கணக்கெடுக்கும்போது, அதிகமாகப் பாதிக்கப்பட்டவர், குறைவாகப் பாதிக்கப்பட்டவர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஒரே அளவு தொகைதான் இழப்பீடாக வழங்கப்படுகிறது.

அதனால், புல எண் அடிப்படையில் பாதிப்புக்கு ஏற்ற இழப்பீடு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், ‘ஆள் பற்றாக்குறையால் இந்த முறையை நடைமுறைப்படுத்த முடியவில்லை. எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்கள்மூலம் இம்முறை சாத்தியப்படுமானால் அதை நடைமுறைத்தலாம்’ எனக் காப்பீட்டு நிறுவனங்கள் சொல்லி வருகின்றன.

காப்பீடு குறித்த சந்தேகங்கள் இருந்தால் அந்தந்த மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர்க் காப்பீடு) அலுவலகம், காப்பீடு செய்த வங்கிகள், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை அணுகித் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். சட்டப் பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தை வார வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை 76671 00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

-வழிகாட்டல் தொடரும்   

பயிர்க்காப்பீடு செய்யத் தேவைப்படும் ஆவணங்கள்:

1.
சிட்டா – அடங்கல் – கிராம நிர்வாக அலுவலர் (VAO) சான்று.

2. விண்ணப்பப் படிவம்.

3. வங்கிக் கணக்குப் புத்தகம்.

4. ஆதார் அட்டை.

பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் வசூல் செய்யும் மையங்கள்:

1.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்.

2. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள்.

3. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்.

4. வணிக வங்கிகள்.

5. பொதுச்சேவை மையங்கள் (CSC).

காப்பீட்டு நிறுவனங்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள்:

Agriculture Insurance Company - 1800116515, fasalbima@aicofindia.com

New India Assurance Company - 18002091415, customercare.how@new India.co.in

ICICI Lombard General Insurance Co LTD - 18002669725, customersupport@uncivilized.com

இழப்பீட்டைக் கணக்கிடும் தற்போதைய முறை

ரு வருவாய் கிராமத்தில் 4 புல எண்களை ரேண்டம் அடிப்படையில் தேர்வு செய்து, அவற்றில் 25 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ள நெல்லை அறுவடை செய்து மகசூலைக் கணக்கிடுவார்கள் அதிகாரிகள். கடந்த ஏழு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் கிடைத்த மகசூல் அளவைக் கணக்கிடுவார்கள். அந்த ஏழு ஆண்டுகளில் அதிக விளைச்சல் கிடைத்த ஐந்து ஆண்டுகளில், கிடைத்த சராசரி மகசூலைக் கணக்கிட்டு, அதில் தற்போதைய மகசூலைக் கழிப்பார்கள். மீதி வரும் மகசூல் மதிப்புக்கேற்ப இழப்பீட்டுத்தொகையைக் கணக்கிடுவார்கள்.