பத்மஸ்ரீ வாங்கித்தந்த `கேரட்'... நெகிழும் விவசாயி வல்லபாய்! | Interesting story of farmer vallabhbhai who got padma shri award for the Carrot cultivation

வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (14/02/2019)

கடைசி தொடர்பு:10:40 (14/02/2019)

பத்மஸ்ரீ வாங்கித்தந்த `கேரட்'... நெகிழும் விவசாயி வல்லபாய்!

சினிமா நடிகராகவும், அரசியல்வாதிகளாகவும், கலைஞராகவும் இருந்தால்தான் பத்ம விருதுகள் கிடைக்கும் என்றில்லை. விவசாயியாக இருந்தாலும் விருதுகள் கிடைக்கும் என்பதை இதுபோன்ற விவசாயிகள் நிரூபித்து வருகின்றனர்.

பத்மஸ்ரீ வாங்கித்தந்த `கேரட்'... நெகிழும் விவசாயி வல்லபாய்!

டந்த ஜனவரி 25-ம் தேதி, 2019-ம் ஆண்டுக்கான பத்மஶ்ரீ விருது, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 112 விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களில் 12 பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருபவர்கள், பாரம்பர்ய விதைகளைப் பாதுகாப்பவர்கள், மண்வளத்தைப் பெருக்குபவர்கள் எனச் செயல்படுபவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இயற்கை விவசாயத்துக்காகவும், கண்டுபிடிப்புக்காகவும் குஜராத் மாநிலம், ஜூனாகத் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லபாய் வஸ்ரம்பாய் மார்வானியாவுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே விவசாயத்துக்காகச் செயலாற்றி வரும் இவரை மத்திய அரசு அடையாளம் கண்டு இந்த விருதை அறிவித்திருக்கிறது. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 92 வயதாகும் வல்லபாய், அம்மாநிலத்தில் இருந்த நாட்டு ரக கேரட்டிலிருந்து மாதுவன் காஜர் (Maduvan Gajar) என்றொரு கேரட் ரகத்தைக் கண்டுபிடித்துள்ளார். ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தையோடு சேர்ந்து 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார் வல்லபாய். பயறு வகைகள், தானிய வகைகள், நிலக்கடலை என்று சாகுபடி செய்து வந்துள்ள இவரது குடும்பம், இதோடு மாட்டுத் தீவனத்துக்காக சோளம், மக்காச்சோளம், ராஜ்கோ (ஒருவகை கால்நடைத் தீவனம்), கேரட் என்று சாகுபடி செய்து வந்துள்ளார்கள். 1943-ல் நாட்டு ரகமாக இருந்த கேரட்டை விளைவித்து மாட்டுக்குத் தீவனமாக அந்தப் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது கேரட்டை உணவுக்காகப் பயன்படுத்தும் வழக்கம் குஜராத் மக்களிடம் இல்லை. ‘தன் அப்பாவிடம் இதை ஏன் நம் உணவுக்குப் பயன்படுத்தக்கூடாது’ என்று கேட்டுள்ளார். அந்தக் கேள்வியை அவரது அப்பா நிராகரித்துள்ளார். 

விவசாயி

ஆனால், தன்னுடைய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ளாத வல்லபாய், கால்நடைகள் சாப்பிடும்போது மனுஷன் ஏன் சாப்பிடக்கூடாது என்று எண்ணி கேரட்டுகளை மூட்டை பிடித்து சந்தையில் கொண்டு போய் விற்பனை செய்துள்ளார். நகரத்து மக்கள் இதை விரும்பி வாங்கியிருக்கின்றனர். தொடர்ந்து கேரட்டுகளைச் சந்தையில் கொண்டு போய் விற்பனை செய்ய, கேரட் மூலம் வரும் வருமானம் உயர்ந்தது. இதனால், கேரட்டை மட்டுமே 2 ஏக்கருக்கு விதைத்து உற்பத்தியைப் பெருக்கியுள்ளார். தொடர்ந்து தேவை அதிகரிக்க அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு கேரட் விதைகளைக் கொடுத்து பயிர் செய்யச் சொல்லியிருக்கிறார். அவர்களும் கேரட்டில் நன்றாக வருமானம் பார்க்க, அந்தப் பகுதியில் கேரட் சாகுபடி அதிகரித்தது. இப்படி 1943-ம் ஆண்டு தொடங்கிய முயற்சி, 1970- களில் அந்தப் பகுதியில் பிரபலமானது. கேரட்டிற்காக தன்னுடைய இரண்டரை ஏக்கரில் விடாமல் சாகுபடி செய்து வந்த இவர், மூன்று ஏக்கரை விதைப் பெருக்கத்துக்காகவே ஒதுக்கி கேரட் சாகுபடி செய்தார். அதில் கிடைத்த விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியும் வந்தார். 

அதிக நீளம் மற்றும் தடிமனான கிழங்கு, அடர்ந்த சிவப்பு நிறம், அதிக இனிப்புச் சுவை, இதுதான் இந்தக் கேரட்டின் தன்மை. இந்தக் கேரட்டைப் பற்றி அறிந்துகொண்ட ஜூனாகத் பகுதி மூன்றாம் நவாபான முகம்மத் மகாபத் கான் தனக்கு விளைவித்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். மன்னர் குடும்பத்துக்கும் இதை விளைவித்து தினந்தோறும் அனுப்பியுள்ளார் வல்லபாய்.

நாள்தோறும் சந்தையில் இந்த வகை கேரட்டுக்கு வரவேற்பு கூட, அதற்கான தேவையும் அதிகரித்தது. அதனால், 1985 முதல் வளமான கேரட் செடியிலிருந்து விதைகளை எடுத்து அதைப் பயிரிட்டு விதைப்பெருக்கம் செய்துள்ளார். நுகர்வோர் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் இந்த ரக கேரட் பற்றிய பேச்சு பரவலானது. இதைத் தொடர்ந்து 2017-ல் நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணையில் இந்த ரகத்தைப் பயிரிட்டு பரிசோதனை செய்தது. ஒரு ஹெக்டேருக்கு சராசரி 40-50 டன் கேரட் மகசூல் கிடைக்கும். ஆனால், துறையின் பரிசோதனை முடிவில் ஒரு ஹெக்டேருக்கு 74 டன் மகசூல் கிடைக்கும் என்பதை உறுதி செய்தது வேளாண் ஆராய்ச்சி நிலையம். அதேபோன்று ஒரு செடியிலிருந்து 275 கிராம் பயோமாஸ் கிடைக்கும் என்பதை உறுதி செய்தது. அதன்பிறகு 2016-17-ல் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகளின் நிலங்களில் விதைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வயல் சோதனையிலும் வெற்றி பெற, அரசுகளே இந்த கேரட் ரகத்தைப் பயிரிட விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்காக 2017-ம் ஆண்டு நேஷனல் இன்னோவேஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது பத்ம விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நெகிழ்ச்சியில் இருக்கிறார் வல்லபாய்.

விவசாயி

இதுகுறித்து தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட வல்லபாயின் மகன் அரவிந்த் பாய், ``நாங்கள் இயற்கை விவசாய முறையில்தான் கேரட்டைப் பயிர் செய்து வருகிறோம். அதேபோல விதைப் பெருக்கமும் இயற்கை விவசாய முறையில்தான் நடக்கிறது. எங்கள் அப்பா இந்தக் கேரட்டுக்கு மாதுவன் காஜர் என்று பெயரிட்டு பரவலாக்கினார். இப்போது அவருக்கு வயதாகிவிட்டதால், நாங்கள்தான் விவசாய வேலைகளைச் செய்து வருகிறோம். இந்தக் கேரட்டைப் பயிரிட்டிருந்த போது, பூக்கும் தருணத்தில் ஏராளமான தேனீக்கள் பயிர்களுக்கு வந்து சென்றது. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை நடத்துவதற்கு எங்களின் வயலில் எந்தத் தடையும் இல்லை. இதனால், மகசூலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கேரட் சாகுபடி சம்பந்தமாக எந்தவிதமான தகவல் என்றாலும் எங்களுடைய பண்ணைக்கு வருகை புரிந்து தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்குத் தயாராக உள்ளோம்” என்றார். 

சினிமா நடிகராகவும், அரசியல்வாதிகளாகவும், கலைஞராகவும் இருந்தால்தான் பத்ம விருதுகள் கிடைக்கும் என்றில்லை. விவசாயியாக இருந்தாலும் விருதுகள் கிடைக்கும் என்பதை இதுபோன்ற விவசாயிகள் நிரூபித்து வருகின்றனர். 

தொடர்புக்கு, அரவிந்த் பாய், செல்போன்: 9377635148

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்