Published:Updated:

திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விருத்தாசலத்தில் விவசாயிகள் சோகம்!

திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விருத்தாசலத்தில் விவசாயிகள் சோகம்!
திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விருத்தாசலத்தில் விவசாயிகள் சோகம்!

விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் ஒருங்குமுறை விற்பனைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம் சுற்றியுள்ள பகுதி இல்லாமல் அருகில் உள்ள அரியலூர், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளும் தங்கள் வயலில் விளையும் நெல், மணிலா, எள் போன்ற  விளை பொருள்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கம். அதிக அளவில் விவசாயிகள் வரும் இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருள்களை பாதுகாப்பாக வைக்க குடோன் வசதியும் போதுமான அளவில் இல்லை.

இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் பாதுகாப்பு இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மழை பெய்தால் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருள்கள் மழையில் நனைந்து சேதமடைவது வழக்கம். தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி அதிக அளவில் நடந்து வருகின்றது. இதன் காரணமாக விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு அதிக அளவில் நெல் மூட்டைகள் வரத்து உள்ளது. 

நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 மூட்டைகள் வரை வரத்து உள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் விருத்தாசலத்தில் திடீரென கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த கன மழையால் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த சுமார் 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவ மழை இல்லாமல் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பயிர் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்த நிலையில் விற்பனைக்குக் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மழையில் நனைந்த இந்த நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.