Published:Updated:

1,50,000 மரங்கள்... கூட்டு முயற்சியில் மியாவாகி காடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மியாவாகி காட்டின் மேற்புறத் தோற்றம்
மியாவாகி காட்டின் மேற்புறத் தோற்றம்

சுற்றுச்சூழல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் 15 ஏக்கர் நிலப்பரப்பில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகளுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது ‘மழை ஈர்ப்பு மையம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள மியாவாகி காடு. இருங்களூர் ஊராட்சி மன்றத் தலைவர், திருச்சி மாவட்ட ஆட்சியர், லால்குடி கோட்டாட்சியர் மற்றும் பசுமை நண்பர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் கூட்டு முயற்சியால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மறந்துபோன மரங்கள் நடவு

இது தொடர்பாகப் பேசிய இருங்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் வின்சென்ட், ‘‘எங்க அப்பா வனத்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவருடனே இருந்ததால் எனக்கு சின்ன வயசுல இருந்தே இயற்கை மேலே ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. ஊராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மக்களுக்கு நன்மை செய்றதோடு இயற்கையைப் பாதுகாக்கவும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அந்த எண்ணத்தில் செயல்படுத்தியதுதான் இந்த ‘மழை ஈர்ப்பு மையம்.

வளர்ந்து வரும் மரங்கள்
வளர்ந்து வரும் மரங்கள்

’ 15 ஏக்கரில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரங்களை நட முடிவு செஞ்சோம். கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி, ‘மழை ஈர்ப்பு மையம்’ என்ற பெயரில் இந்த மியாவாகி காட்டை உருவாக்க ஆரம்பிச்சோம். வேம்பு, மலைவேம்பு, இலுப்பை, வாத நாராயணி மரம் என நாம் மறந்துவிட்ட, எண்ணிக்கை குறைந்து வரும் மர வகைகளை நட ஆரம்பிச்சோம். அதோடு மா, கொய்யா, சீத்தாப்பழம் மாதிரியான பழ மரங்கள், பல வகையான பூச்செடிகள், குறு மரங்கள்னு மிகப்பெரிய காட்டையே உருவாக்கியிருக்கிறோம். இப்ப 1,50,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, 6 முதல் 8 அடி வரை வளர்ந்துள்ளது.

சொட்டுநீர்ப் பாசன முறை
சொட்டுநீர்ப் பாசன முறை

60 லட்சம் செலவு

என்னுடைய ஆர்வம் ஒரு காரணமாக இருந்தாலும் பலருடைய உழைப்பு, உதவியாலதான் இவ்வளவு பெரிய காட்டை உருவாக்க முடிஞ்சது. முக்கியமா லால்குடி கோட்டாட்சியர் வைத்தியலிங்கம், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ரெண்டு பேரும் ரொம்பவே ஊக்கம் கொடுத்து, தேவையான உதவிகளையும் செஞ்சு கொடுத்தாங்க. பல தன்னார்வ நிறுவனங்கள் மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்தாங்க. ஜேசிபி கொண்டு மண்ணைச் சமன்படுத்துதல், போர்வெல் போடுதல், மரம் நடுதல், பராமரித்தல்னு இந்தக் காட்டை உருவாக்க இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய்ச் செலவாகியிருக்கு. இதில் 23 லட்சம் அரசும், 10 லட்சம் என்னுடைய பங்கும் இருக்கு. மீதி எல்லாம் பல்வேறு தரப்பினரின் உதவிகள் மூலமே முழுமையாக்கபட்டன’’ என நெகிழ்ந்தவர்,

மியாவாகி காட்டின் மேற்புறத் தோற்றம்
மியாவாகி காட்டின் மேற்புறத் தோற்றம்

இது பறவைகள் வீடு

‘‘எங்களுடைய இந்த முயற்சிக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் உதவியா இருந்தாங்க. மரம் நடுவது, களை எடுப்பது, தண்ணீர் விடுறதுனு பல வேலைகளை இன்னிக்கு வரைக்கும் அவங்கதான் பார்த்துக்கிடுறாங்க. இங்கு விளையுற பழங்கள், காய்கள் எல்லாமுமே விலங்குகள், பறவைகளுக்கு மட்டும்தான். பறவைகளுக்குச் செயற்கைக் கூடுகளையும் இந்தக் காடுகளில் சில இடங்கள்ல வெச்சிருக்கோம். இப்ப பறவைகள் வந்து தங்க ஆரம்பிச்சிடுச்சு. எதிர்காலத்தில் இந்த இடத்தை இயற்கை சார்ந்த சுற்றுலாத் தளமாக, ஆராய்ச்சிக்குப் பயன்படும் இடமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றார்.

வின்சென்ட், ரொசரியோ பிரேம்
வின்சென்ட், ரொசரியோ பிரேம்

இந்த மியாவாகி காட்டைப் பராமரிக்கும் பணியைப் பசுமை நண்பர்கள் குழுவினர் செய்கிறார்கள். குழுவின் உறுப்பினரான ரொசரியோ பிரேம் என்பவரிடம் பேசினோம்,

‘‘பசுமை என்று யோசித்த எங்களுக்குப் பசுமையான இந்தக் காட்டைப் பராமரிப்பது மன நிறைவான செயலாக இருக்கு. அரசு, தனியார் துறை அதிகாரிகள், நடைப்பயிற்சி செய்றவங்க, வெளிநாட்டுல இருந்து இங்க வந்து பார்க்குறவங்கனு நிறைய பேர் வரும்போது மனசு இலகுவாகிடுது. மியாவாகி காடுகளை உருவாக்கும்போது ஏற்படுற ஆச்சர்யத்தைவிட, அதோட ஒவ்வொரு படிநிலையிலும் ஆச்சர்யம் அதிகமாகிட்டே இருக்கு’’ என்றார்.

தானிய கதிர்கள்
தானிய கதிர்கள்
பறவைக் கூடுகள்
பறவைக் கூடுகள்

மிகப் பெரிய மியாவாகி காட்டில் வெறுமனே காட்டை மட்டும் உருவாக்காமல், உயிரினங்களுக்கான வாழ்விடம், அவற்றின் உணவு, வேலி கூடப் பசுமையாக இருக்க வேண்டும் எனப் போத்து நடுவது என இயற்கை சார்ந்த நிறைய விஷயங்கள், தென் இந்தியாவின் மிகப் பெரிய மியாவாகி காடு என்ற இந்த ‘மழை ஈர்ப்பு மையத்தில்’ உள்ளது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு