Published:Updated:

மகசூல்: 1.5 ஏக்கர்... ரூ.5,00,000... தெளிப்பு நீர்ப் பாசனத்தில் செழிக்கும் பப்பாளி!

பப்பாளித் தோட்டத்தில் அழகர்சாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பப்பாளித் தோட்டத்தில் அழகர்சாமி

டீ குடிக்க வர்றவங்களும், சாலையில போறவங்களும் பப்பாளியைப் பார்த்து வாங்கிட்டுப் போறாங்க.

இயற்கை விவசாயத்தோட நன்மையைச் சொல்லிப் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார்; நம்மாழ்வார் பேச்சுக்களைக் கேட்டேன்.

ற்போதைய வறட்சியான சூழலில் குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிரைச் சாகுபடி செய்தால் மட்டுமே விவசாயத்தில் ஜெயிக்க முடியும் என்றாகிவிட்டது. குறைவான பராமரிப்பு என்பதாலும், சந்தையில் எப்போதும் தேவை இருப்பதாலும், விவசாயிகள் பரவலாகப் பப்பாளிச் சாகுபடியில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் இயற்கை முறையில் ரெட்லேடி ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த அழகர்சாமி.

பப்பாளித் தோட்டத்தில் அழகர்சாமி
பப்பாளித் தோட்டத்தில் அழகர்சாமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விருதுநகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சீனியாபுரத்தில் உள்ளது அழகர்சாமியின் தோட்டம். பப்பாளி அறுவடைப் பணியைக் கவனித்துக் கொண்டிருந்த அழகர்சாமியைச் சந்தித்தோம். “பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். இறவைப் பாசனத்தில் தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டை போன்ற காய்கறிகளை ரசாயன உரம் பயன்படுத்தித்தான் அப்பா சாகுபடி செய்துட்டு வந்தார். 6-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்குப் பிறகு டீக்கடையில வேலை பார்த்தேன். தொடர்ந்து சொந்தமா டீக்கடை, சின்னதா ஹோட்டல் வெச்சு நடத்தினேன். ஒருபக்கம் தொழிலைக் கவனிச்சாலும், மற்றொரு பக்கம் காய்கறி விவசாயம் பார்த்துட்டு வந்தேன். அதிக மகசூல் ஆசையில ரசாயன உரத்தை இஷ்டத்துக்கும் தூவினேன். ரசாயனப் பூச்சிக்கொல்லியையும் அளவில்லாம தெளிச்சேன். அதன் விளைவு, மண் மலடாயிடுச்சு.

ரெயின்கன் மூலம் பாசனம்
ரெயின்கன் மூலம் பாசனம்

கிணத்துல தண்ணியும் இல்லாமப் போக, ஒரு கட்டத்துல வெறுத்துப் போயி, விவசாயத்தையே கைவிட்டு நிலத்தைச் சும்மா போட்டுட்டேன். இயற்கை விவசாயியான நண்பர் சுந்தரமூர்த்தி, ‘நிலத்தைச் சும்மா போட்டு வெச்சிருக்கியேப்பா. ரசாயன உரம் போட்டுதான விவசாயத்துல நஷ்டமாயிடுச்சுன்னு சொல்ற. ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது? முதல்ல 50 சென்ட்ல சாகுபடி செஞ்சிப்பாரு. நம்பிக்கை வந்தா 5 ஏக்கர்ல விவசாயம் பண்ணு’ன்னு சொல்லி, இயற்கை விவசாயத்தோட நன்மையைச் சொல்லிப் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார். யூடியூப்பிலயும் நம்மாழ்வார் பேச்சுக்களைக் கேட்டேன். அதுக்கு பிறகு ஒரு ஏக்கர்ல மண்ணை வளப்படுத்தி, தக்காளியைச் சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூலுடன் நம்பிக்கையும் கிடைச்சுது. காய்கறிகள்ல பராமரிப்பு அதிகம். அதனால ‘குறைஞ்ச பராமரிப்புல, தொடர் வருமானம் கொடுக்குற பப்பாளியைச் சாகுபடி செஞ்சுப் பார்’னு நண்பர் சுந்தரமூர்த்தி ஒரு யோசனை சொன்னார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இயற்கை முறையில பப்பாளிச் சாகுபடி செய்யிற சில விவசாயிகளோட தோட்டத்துக்கு நேர்ல போய், சாகுபடி முதல் விற்பனை வரை எல்லாத்தையும் கேட்டுத் தெளிவுபெற்ற பிறகு சாகுபடியைத் தொடங்கினேன். முதல்ல சொட்டுநீர்ப் பாசனம் மூலம்தான் சாகுபடி செஞ்சேன். அப்ப திண்டுக்கல் பிரிட்டோ ராஜ்கிட்ட ஆலோசனை கேட்டேன்.

‘பப்பாளிச் சாகுபடி, மாவுப்பூச்சி பிரச்னை ரெண்டுக்கும் ஒரே தீர்வு வேணும்னா, ரெயின்கன்(தெளிப்பு நீர்) போடுங்க. அதுக்கு தோட்டக்கலைத்துறையில மானியம் இருக்கு’ன்னு சொன்னார்.
கழுகுப் பார்வையில் பப்பாளித் தோட்டம்
கழுகுப் பார்வையில் பப்பாளித் தோட்டம்

அந்த யோசனை எனக்குப் பிடிச்சிருந்தது. உடனே அதைச் செயல்படுத்திட்டேன். மூணு வருஷமா ரெயின்கன் முறையில்தான் பப்பாளிச் சாகுபடியை செய்துட்டு வர்றேன். இது மொத்தம் 5 ஏக்கர் கரிசல் நிலம். ஒன்றரை ஏக்கர்ல பப்பாளி பறிப்புல இருக்கு. மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தில ஒன்றரை ஏக்கர்ல பப்பாளியும், ஒன்றரை ஏக்கர்ல வாழையும் நடவு செய்ய நிலத்தைத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்றவர்,

மகசூல்: 1.5 ஏக்கர்... ரூ.5,00,000... தெளிப்பு நீர்ப் பாசனத்தில் செழிக்கும் பப்பாளி!

“ஆரம்பத்துல அறுவடை செஞ்சப் பழங்களைச் சந்தையிலதான் விற்பனை செய்தேன். ‘இயற்கை முறையில விளைஞ்ச பழம்யா. மற்ற பப்பாளிகளைவிடக் கூடுதலா விலை வச்சுக் கொடுங்க’ன்னு நாலஞ்சு கடைகள்ல கேட்டுப் பார்த்தேன். ‘எல்லாப் பப்பாளி வியாபாரிகளுக்கும் கொடுக்குற விலைதான் கொடுக்க முடியும். தனி விலையெல்லாம் கிடையாது’னு சொல்லிட்டாங்க.

டீக்கடையில் விற்பனை
டீக்கடையில் விற்பனை

விருதுநகர்-சிவகாசி பைபாஸ் சாலையிலதான் என்னோட விவசாயத் தோட்டமும், டீக்கடையும் இருக்கு. டீக்கடையில பப்பாளியை அடுக்கி வெச்சு நாமளே விற்பனை செஞ்சா என்னனு ஒரு யோசனை தோணுச்சு. அப்படியே செஞ்சேன். டீ குடிக்க வர்றவங்களும், சாலையில போறவங்களும் பப்பாளியைப் பார்த்து வாங்கிட்டுப் போறாங்க. நானே நேரடியா விற்பனை செய்யுறதுனால கூடுதல் வருமானம் கிடைக்குது. இப்போ ஒன்றரை ஏக்கர்ல பப்பாளி பறிப்புல இருக்கு. இன்னொரு ஒன்றரை ஏக்கர்ல பப்பாளி நடவு செய்யப்போறேன். இதோட அறுவடை முடியுற நிலையில நடவு செய்யப்போற பப்பாளி பறிப்புக்கு வந்திடும். அதனால, எங்கிட்ட எப்பவுமே பப்பாளி பறிப்புல இருக்கும். வாரம் 750 முதல் 1,000 கிலோ வரை பப்பாளி பறிக்கிறேன். வருஷத்துக்கு 50 டன் வரை பழம் பறிக்கலாம். சந்தையில ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரைதான் விலை போகுது. ஆனா, நான் நேரடி விற்பனையில ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யுறேன். சந்தை விலையை வெச்சிகிட்டாலும் ரூ. 5,00,000 வருமானம் கிடைக்குது. இதுல, களை, பறிப்பு, அடியுரம், இடுபொருள் தயாரிப்பு மற்றும் தெளிப்புக்கூலி உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்கு மொத்தம் 2 லட்சம் வரை பிடிக்கும். மீதமுள்ள ரூ.3,00,000 நிகர லாபமாக் கிடைக்குது” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, அழகர்சாமி,

செல்போன்: 97875 24777

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் ரெட்லெடி பப்பாளிச் சாகுபடி செய்வது குறித்து அழகர்சாமி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

ரெட்லேடி ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்ய ஆடி, கார்த்திகை ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த பட்டத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பே உழவுப்பணிகளைத் தொடங்கிவிட வேண்டும். 15 நாள் இடைவெளியில் 4 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவுக்குப் பிறகு, செறிவூட்டப்பட்ட மட்கிய தொழுவுரத்தை நிலத்தில் பரவலாகத் தூவி பிறகு, நான்காவது உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 8 அடி மற்றும் குழிக்குக் குழி 8 அடி இடைவெளியில் அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். (இவர் இந்த இடைவெளிக் கணக்கில் ஒரு ஏக்கருக்கு 650 முதல் 680 குழிகள்வரை எடுத்திருக்கிறார்) 5 நாள்கள் குழியை ஆறவிட்டு கன்றுகளை நடவு செய்யலாம்.

2 மாதக்கன்றுகள் நடவுக்கு ஏற்றது. கன்றுகளை அதிகாலையில் நடுவதைவிட, மாலை நேரத்தில் நடுவது சிறந்தது. கன்று நடவு செய்வதற்கு முந்தைய நாள் குழி நனையும்படி தண்ணீர் விடலாம். 2 மாதங்கள்வரை மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்சி வந்தால் போதும். 3-ம் மாதத்திலிருந்து மாதந்தோறும் 100 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சூடோமோனஸைக் கலந்து பாசன நீரில் விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) மற்றும் மீன் அமிலம் (10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி) என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கன்று நட்ட 20 மற்றும் 40-ம் நாளில் களை எடுக்க வேண்டும். முதல் களை எடுத்தபிறகு ஒரு கன்றுக்கு 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு என்ற கணக்கில் ஒவ்வொரு கன்றின் தூர்ப்பகுதியைச் சுற்றிலும் தூவி விட்டு மண் அணைத்துவிட வேண்டும். கடலைப்பிண்ணாக்கு வைத்தால் நூற்புழுத்தாக்குல் வர வாய்ப்புள்ளதால் வேப்பம் பிண்ணாக்கு வைத்தாலே போதும்.

6-ம் மாதத்தில் பூக்கள் தென்படும். 7-ம் மாதம் பிஞ்சு பிடித்து, காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதத்திலிருந்து காய் பறிக்க ஆரம்பிக்கலாம். 11-ம் மாதத்திலிருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். கன்று நட்ட 6 மற்றும் 10-ம் மாதங்களில் கன்றுக்கு அரைக்கிலோ அளவு மட்கிய குப்பையைத் தூரைச் சுற்றிப் போடலாம். 35 முதல் 40-ம் நாள் மற்றும் 70 முதல் 75-ம் நாளென இரண்டு களை எடுத்தால் போதும். பப்பாளியைப் பொறுத்தவரையில் மாவுப்பூச்சிகள்தான் அதிகம் தென்படும். மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த தண்ணீரைப் பீய்ச்சித் தெளித்தாலே போதும். பப்பாளிச் சாகுபடி நிலத்தைச் சுற்றி அகத்தியை நடவுசெய்தால், அசுவினிப்பூச்சிகள், வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். அகத்தியிலிருந்து தனி வருமானமும் கிடைக்கும். இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் தேவையில்லை.

நூறு சதவிகித மானியத்தில் ரெயின்கன் பெறுவது எப்படி?

விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் ரெயின்கன் பெறுவதற்கான வழிமுறைகள்குறித்து விருதுநகர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பரமசிவனிடம் பேசினோம். “சிறு, குறு விவசாயிகளுக்குத்தான் இது பொருந்தும். நஞ்சை நிலமாக இருந்தால் 2.5 ஏக்கருக்குக் குறைவாகவும், புஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், கம்ப்யூட்டர் பட்டா நகல், ஆதார் கார்டு நகல், ரேசன்கார்டு நகல், பயிர் சாகுபடி அடங்கலில் நீர் ஆதாரம் கிணற்றுப்பாசனமா அல்லது போர்வெல் பாசனமா என்பதைக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற வேண்டும். நில வரைபடம், மண்மாதிரி பரிசோதனை சான்று, தண்ணீர் மாதிரி பரிசோதனைச் சான்று மற்றும் விவசாயியின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து மானியம் பெறலாம்” என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: 99523 53724

70 சதவிகிதத் தண்ணீர் சேமிப்பு! 30 சதவிகிதக் கூடுதல் மகசூல்!

தெளிப்புநீர்ப் பாசனத்தின் பயன்கள் குறித்துப் பேசிய அழகர்சாமி, “தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமான பரப்பில் பரப்புவதுதான் இப்பாசனத்தின் முக்கிய நோக்கம். வெயில், பனிக்காலத்தில் குளுமையான சூழலை உருவாக்கும். தெளிப்பு நீர்ப் பாசனத்தின் மூலம் 20 முதல் 70 சதவிகிதம் வரை தண்ணீரைச் சேமிக்க முடியும். 30 சதவிகிதம் வரை மகசூலும் அதிகரிக்கும். கிணற்றுத் தண்ணீர் இருப்பு, மோட்டாரின் திறன், குழாயின் அளவு, தெளிப்பு நீர்ப் பாசனக் கருவியிலிருந்து தண்ணீர் வெளியேறும் துளையின் அளவு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பிறகு அமைக்க வேண்டும். 30 மீட்டர் முதல் 100 மீட்டர் சுற்றளவு வரை இதன் மூலம் தண்ணீரைப் பரவச் செய்யலாம். குறைந்தபட்சம் ஒருமணி நேரத்திற்கு 18,000 முதல் 23,000 லிட்டர் வரை தண்ணீர் வெளியேறக்கூடிய வகையில் இம்முறை செயல்படும்.

ரெயின்கன்னின் முன்பு உள்ள உருளையை மூடித் திறப்பதன் மூலம் தண்ணீர்த் திவளையின் அளவைக் கூட்டிக் குறைக்கலாம். உருளையை இறுக்கமாக்கும்போது தூரத்தில் தண்ணீர் சிறிய திவளையாகப் படரும். இறுக்கத்தை இளக்கமாக்கும்போது பெரிய திவளைகளாக அருகில் விழும். பப்பாளியைப் பொறுத்தவரையில் மாவுப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த இது மிகவும் உதவுது. பப்பாளி இலை, தண்டுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவுப்பூச்சிகளின் மீது வேகமாகப் பீய்ச்சி அடிப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

வாய்க்கால் பாசனத்தின் மூலம் ஒரு ஏக்கருக்குப் பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு இப்பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடியும். இதனால், தண்ணீர், மின்சாரத்தைச் சேமிக்கலாம். நிலக்கடலை, பயிறுவகைப் பயிர்கள், சின்னவெங்காயம், கீரை வகைகள், காய்கறிகள் ஆகியவற்றுக்கும் தெளிப்பு நீர்ப்பாசன முறை பயன் அளிக்கும். செயற்கை மழைப்போல் பூப்பூவாகத் தண்ணீர் விழுவதால் பயிர் செழிப்பாக வளரும்” என்றார்.

செறிவூட்டப்பட்ட மட்கிய தொழுவுரம்!

பிளாஸ்டிக் தாள் விரித்து அதில், 2 டன் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, அதனுடன் தலா ஒரு கிலோ சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் முழுவதும் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட மட்கிய தொழுவுரம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு.