Published:Updated:

முடிவுக்கு வந்த போராட்டம்; டெல்லியிலிருந்து டிராக்டர்களுடன் வீடு திரும்பும் விவசாயிகள்!

விவசாயிகள் போராட்டம்
News
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும், விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். ஆனாலும் சட்டபூர்வமாக சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரையிலும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையிலும் போராட்டம் தொடரும் என்றனர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்த நிலையில் ஓராண்டுக்கும் மேல் டெல்லியில் முகாமிட்டு போராடிவந்த விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப தொடங்கியுள்ளனர். விவசாயிகளை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் வெற்றி பேரணியை தொடங்கியதால் டெல்லியில் போக்குவரத்து நெருக்கடி உண்டானது.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 2020-ம் ஆண்டு நவம்பரில் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை பல இன்னல்கள் துயரங்களுக்கு இடையிலும் கைவிடாமல் ஓராண்டாக கடைபிடித்து வந்தனர். 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போரட்டத்தில் உயிரிழந்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனாலும் சற்றும் பின்வாங்காத மத்திய அரசு சட்டங்களை நிறைவேற்றுவதில் தீர்மானமாக இருந்தது. விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே நடந்த இந்த பரீட்சையில் கடைசியில் விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்தது.

பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் விவசாயிகள் போராட்டம் பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒருவழியாக சட்டங்களைத் திரும்பப் பெற முடிவெடுத்தது.

பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறினார். ஆனாலும் சட்டபூர்வமாக சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரையிலும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையிலும் போராட்டம் தொடரும் என்றனர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூடத் தொடரில் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதையடுத்து இன்று டிசம்பர் 1-ம் தேதி1 போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புவோம் என விவசாயிகள் கூறியிருந்தனர். அதன்படி தாங்கள் தற்காலிகமாக அமைத்த கூடாரங்களை அகற்றி, வாகனங்களைத் தயார் செய்துகொண்டு புறப்படத் தயாராயினர். டிராக்டர்களுடன் விவசாயிகள் வெற்றி பேரணியைத் தொடங்கினர். இவர்களை வரவேற்க நெடுஞ்சாலைகளில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போராட்டம் முடிவுக்கு வருவது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயித் கூறுகையில், ``இன்று பெரும்பான்மையான விவசாயிகள் வீடுகளுக்கு திரும்புவார்கள். ஆனால் முழுமையாக போராட்டக் களத்திலிருந்து விவசாயிகள் செல்ல நான்கு முதல் 5 நாட்கள் ஆகும். போராட்டத்தில் உறுதுணையாக இருந்தவர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது" என்றார்.

சமீப காலங்களில் வெற்றி பெற்ற மக்கள் போராட்டங்களில் விவசாயிகள் போராட்டமும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமுமில்லை.