Published:Updated:

வறட்சியில் வளரும் நோனி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறுவடையான நோனிப் பழங்களுடன் கோவிந்தசாமி
அறுவடையான நோனிப் பழங்களுடன் கோவிந்தசாமி

1 ஏக்கர் மாதம் 150 லிட்டர் சாறு...

பிரீமியம் ஸ்டோரி

மகசூல்

ருத்துவ குணம் கொண்ட நோனிப்பழச் சாகுபடியைக் கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பெரிய புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி. பரந்து விரிந்துகிடக்கும் மேய்ச்சல் நிலம். அதன் மத்தியில் பாலைவனச் சோலையாகக் காட்சிதருகிறது கோவிந்தசாமியின் நோனிப்பழத் தோட்டம்.

வறட்சியில் வளரும் நோனி!

ஓர் இளங்காலைப் பொழுதில் தோட்டத்திலிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘ஒரு ஏக்கர்ல நோனிப்பழம் நடவு செஞ்சிருக்கேன். அதுல ஊடுபயிரா கொய்யா, புளி, பேரீச்சை செடிகளையும், வரப்புகள்ல மலைவேம்பு, தேக்கு மரங்களையும் வளர்க்கிறேன்.

இது கடும் வறட்சியான பகுதி. நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்குக் கீழே போயிடுச்சு. பெய்யும் மழைத் தண்ணியைச் சேமிச்சு வைக்க ஏரி, குளம், குட்டை எதுவும் இங்கே இல்லை. ஏக்கர் கணக்குல நெலம் இருந்தாலும், 750 அடி ஆழ்துளைக் கிணத்துல கிடைக்கிற குறைவான தண்ணியைவெச்சுதான் வெள்ளாமை செய்யறேன்’’ என்று தற்போதைய நிலைமையைச் சொன்னவர், மலரும் நினைவுகளுக்குள் புகுந்தார்.

“பருவமழை தப்பாம பெய்ஞ்ச காலம். கேணிகள்ல தண்ணி ததும்பி வழியும். சோளம், கம்பு, கேழ்வரகு, கடலைனு கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பசுமையா இருக்கும். பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துல 9-ம் வகுப்பு வரை படிச்சேன். அதுக்கு மேல படிக்க முடியலை. 20 வயசு வரைக்கும் மாடு பூட்டின கமலை ஏத்தம் இறைச்சு, வெள்ளாமைக்குப் பாசனம் செய்யும் வேலைதான் பிரதானமா இருந்துச்சு. இடையில கடுமையான வறட்சி வந்துச்சு. அதுல கிணறு வத்திப்போச்சு. சொம்பு தண்ணிகூடக் கிடைக்கலை. உள்ளூர்ல ஜீவனம் செய்ய முடியாத நிலைமை. இருந்த ஆடு, மாடுகளை வித்து, அதுல கிடைச்ச கொஞ்சம் பணத்தை எடுத்துக்கிட்டு சென்னைக்கு வண்டி ஏறினேன்.

சென்னையை அடுத்த `பம்மல்’-ங்கிற ஊருக்குக் குடிபோனேன். எவர் சில்வர் பாத்திரங்களை சைக்கிள்ல கட்டி எடுத்துட்டு போய், தவணை முறையில ஏவாரம் செஞ்சேன். கல்யாணம் முடிஞ்சு, சென்னையில வீடு வாங்கி நிரந்தரமா தங்கிட்டேன்.

`` `நீங்கள் கேட்டவை’ பகுதியில் தூத்துக்குடி சீனிவாசன் என்பவர் நோனிப்பழச் சாகுபடி குறித்து பதில் சொல்லியிருந்தார்.’’ ``ஒரு நபருக்கு 10 நாற்றுகள் வரை இலவசமாகக் கொடுத்துட்டு வர்றேன்.’’

என்னதான் சென்னை வாழ்க்கை நல்லபடியா போனாலும் என்னைக்காவது சொந்த ஊருக்குப் போய்ப் பூர்வீக நெலத்துல மறுபடியும் விவசாயம் செய்யணும்கிற ஆசை குறையாம இருந்துச்சு. அதுக்கு தூபம் போடுறது மாதிரி பசுமை விகடன் இதழ் எனக்குக் கிடைச்சது. சின்ன வயசுல இருந்தே வார இதழ்கள் படிக்கிற ஆர்வம் அதிகம். சென்னைக்கு வந்த பிறகும் அது தொடர்ந்தது. குறிப்பா ‘ஆனந்த விகடன்’ தொடங்கி, ‘தடம்’ இதழ் வரைக்கும் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கிற வழக்கம் எனக்கு உண்டு. அப்படித்தான் பசுமை விகடனையும் முதல் இதழிலிருந்து வாங்கிப் படிக்கிறேன்.

அறுவடையான நோனிப் பழங்களுடன் கோவிந்தசாமி
அறுவடையான நோனிப் பழங்களுடன் கோவிந்தசாமி

எனக்கு ரெண்டு பெண்கள். அவங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. அமெரிக்காவுல ஒருத்தரும், பெங்களூருல இன்னொருத்தரும் குடும்பமா இருக்காங்க.

ஒரு கட்டத்துல சென்னை வாழ்க்கை போதும்னு முடிவு செஞ்சு, வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஊருக்குத் திரும்பிட்டேன். இனி தீவிரமா விவசாயம் செய்யணும்கிற ஆர்வத்துல போர்வெல் போட்டேன். 750 அடி ஆழத்துல தண்ணி கிடைச்சுது. அந்தத் தண்ணியைவெச்சு ஒரு ஏக்கர் நெலத்துலதான் விவசாயம் செய்ய முடியும். சரி, அதுக்கு தோதா என்ன வெள்ளாமை பண்ணலாம்னு யோசனையில் இருந்தபோதுதான் பசுமை விகடன் கை கொடுத்தது.

10.7.2013 தேதியிட்ட இதழில் வெளியான, `நீங்கள் கேட்டவை’ பகுதியில் தூத்துக்குடி சீனிவாசன் என்பவர் நோனிப்பழச் சாகுபடி குறித்து பதில் சொல்லியிருந்தார்.

அந்தச் செய்தி எனக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. தூத்துக்குடி சீனிவாசனைத் தொடர்பு கொண்டு பேசி, விருப்பத்தைச் சொன்னேன். அவரும் ஊக்கம் கொடுத்ததோடு, நோனி விதைகளை அனுப்பி வெச்சார். நோனி விதைகளை நேரடியா ஊன்றக் கூடாது. மா, கொய்யா, பலா போன்ற பழச்செடிகளைச் சாகுபடி செய்வதுபோல நாற்றுகளைத்தான் நடவு செய்யணும். அவர் விதைகள் மூலமா நாற்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொடுத்தார்’’ என்றவர் அந்த நுட்பத்தை விளக்கினார்.

நோனிப் பழச்சாறுடன்
நோனிப் பழச்சாறுடன்

நோனி நாற்று உற்பத்தி

“இரண்டடி அகலம், நான்கடி நீளம், ஓரடி உயரமுள்ள பாத்திகளை செங்கற்களால் அமைத்துக்கொள்ள வேண்டும். கற்கள், கட்டிகள் இல்லாத செம்மண்ணைக் கொட்டிப் பரப்பி, அதன்மீது ஒரு கூடை தொழுவுரத்தை இறைத்து, சமன் செய்துகொள்ள வேண்டும். ஒரு விதையில் அடுத்த விதை படாதவாறு இடைவெளிவிட்டு விதைகளை ஊன்றி, அதன்மேல் அரையடி உயரத்துக்கு வைக்கோல் பரப்பி மூட வேண்டும். காலை, மாலை நேரங்களில் வைக்கோல்மீது பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

30 நாள்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும். ஆறு மாத காலத்தில் அரையடி உயரம் நாற்றுகள் வளர்ந்திருக்கும். நாற்றுகளைப் பிடுங்கி, 10 அடிக்கு ஒரு நாற்று வீதம் தயார் செய்யப்பட்ட நிலத்தில் நடவு செய்ய வேண்டும்’’ என்றவர், நோனிச் சாகுபடி பற்றி விளக்கினார்.

‘‘மா, கொய்யா, எலுமிச்சைபோல நோனிப்பழங்களைச் சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய முடியாது. நோனிப்பழங்களைப் பதப்படுத்தி, பிழிந்து, சாறு தயாரித்துதான் விற்பனை செய்ய முடியும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்ல மகசூலுக்கு ஐந்து ஆண்டுகள்!

“மணல் கலந்த செம்மண் நிலத்தில் நோனி செழிப்பாக வளரும். நோனியை நடவு செய்த பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர்விட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உரம் கொடுக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு முதல் காய்க்கத் தொடங்கும். ஆனால் ஐந்தாம் ஆண்டு முடிவில்தான் நல்ல மகசூல் கிடைக்கும்.

நோனிக் காய்
நோனிக் காய்

30 அடி உயரம் வரை வளரக்கூடிய தன்மை உடையது நோனி. ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை பக்கக் கிளைகளை கவாத்துச் செய்து 10 அடிக்கு மேல் வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் பறிப்பதற்கு எளிதாக இருக்கும். யானைக்காதுகள் போன்ற அடர் பச்சை நிற இலைகளைக் கொண்டிருக்கும் நோனிச் செடிகளில் காய்க்கும் காய்கள் தலா 200 கிராம் வரை எடை இருக்கும். இதற்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் காய்ப்பில் இருக்கும். நடவு செய்த ஐந்தாம் ஆண்டு முடிந்ததும், மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 50 கிலோ பழங்களைப் பறிக்கலாம். மா, கொய்யா, எலுமிச்சைபோல நோனிப்பழங்களைச் சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய முடியாது. அதற்கான மதிப்பே மருத்துவ குணம் கொண்ட நோனிச்சாறுதான்.

ஐந்து கிலோ பழங்கள், ஒரு லிட்டர் சாறு!

நோனிப்பழங்களைப் பதப்படுத்தி, பிழிந்து சாறு தயாரித்துதான் விற்பனை செய்ய முடியும். நானும் நோனிப்பழங்களை மதிப்புக்கூட்டல் செய்து பழச்சாறு தயாரித்து, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறேன். பறித்த பழங்களை அவற்றிலுள்ள ஈரப்பதம் போகும்வரை நிழலில் காயவைக்க வேண்டும்.

நோனி வத்தல்
நோனி வத்தல்

உலர்ந்த பிறகு, சுத்தமான துணியில் மூட்டைபோல் கட்டி முடிந்து, கையால் பிழிந்தால் துணி மூட்டையில் சாறு வடியும். கடைசிச் சொட்டு வடியும் வரை மீண்டும் மீண்டும் பிழிந்து வடிகட்டிச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஐந்து கிலோ பழங்களிலிருந்து ஒரு லிட்டர் நோனிச்சாறு எடுக்கலாம். நன்றாகப் பராமரிப்பு செய்த மரம் ஒன்றிலிருந்து குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10 லிட்டர் நோனிச்சாறு எடுக்கலாம். ஒரு லிட்டர் பழச்சாறு தோட்டத்திலேயே 300 ரூபாய் என்று விற்கிறேன். கடைக்குக் கொண்டுபோய்க் கொடுத்தால் 375 ரூபாய்க்கு விற்கலாம்’’ என்றவர், தனது அனுபவத்தைத் தொடர்ந்தார்.

மாதம் 30 ஆயிரம்

“ஆரம்பத்துல ஒரு ஏக்கர்ல இருந்து சுழற்சி முறையில மாசம் 150 லிட்டர் நோனிச்சாறு தயாரித்து விற்பனை செய்தேன். கடுமையான வறட்சி காரணமாக இப்போ உற்பத்தி குறைஞ்சு போச்சு. அதோடு சில போலி நிறுவனங்களின் நடமாட்டம், மக்களிடம் இதன் நம்பகத் தன்மையைக் குறைத்துவிட்டது. அதனால, என் தோட்டத்தில் விளையுற நோனிப்பழங்கள்ல ஒரு பகுதியைத் துண்டு துண்டுடாக நறுக்கி, முறுகலாகக் காயவெச்சு, வத்தல் ஊறுகாய் தயாரிக்கும் வேலைகளைச் செய்யறேன். நோனிப்பழ ஊறுகாய்க்கு வெளிநாடுகள்ல நல்ல வரவேற்பு இருக்கு. அங்கு வசிக்கும் என் நண்பர் ஒருவர் வத்தல் ஊறுகாய் அனுப்பச் சொல்லிக் கேட்டார். அதற்கான ஆயத்த பணிகளைச் செஞ்சுகிட்டு இருக்கேன். எப்படியும் நோனிச்சாறு மற்றும் வத்தல் ஊறுகாய் விற்பனை மூலம் ஒரு ஏக்கர் நோனிச் சாகுபடியில் மாதம் 30 ஆயிரம் வருமானம் திரும்பவும் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு’’ என்ற கோவிந்தசாமி நிறைவாக,

‘‘அநேக நோய்களைக் கட்டுப்படுத்தும் அருமருந்தான நோனிச் செடிகளை வீட்டில் வளர்க்க விரும்புறவங்க நேரில் வந்தா, ஒரு நபருக்கு 10 நாற்றுகள் வரை இலவசமாகக் கொடுத்துட்டு வர்றேன். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையது நோனிச்சாறு. வளரிளம் குழந்தைகள் பயன்பெறும்விதமாக, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுக்க அரசாங்கம் முன் வரணும். அப்போதுதான் நோனிச் சாகுபடி அதிகரிக்கும்’’ என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, என்.கோவிந்தசாமி, செல்போன்: 99628 34374

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு