Published:Updated:

‘லேஸ்’ போட்ட கேஸ்... கொந்தளிக்கும் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘லேஸ்’ போட்ட கேஸ்... கொந்தளிக்கும் விவசாயிகள்!
‘லேஸ்’ போட்ட கேஸ்... கொந்தளிக்கும் விவசாயிகள்!

‘லேஸ்’ போட்ட கேஸ்... கொந்தளிக்கும் விவசாயிகள்!

பிரீமியம் ஸ்டோரி

‘லேஸ் சிப்ஸ்’களுக்கான பிரத்யேக உருளைக்கிழங்கைப் பயிர்செய்த குஜராத் விவசாயிகளிடம் 1.05 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகக் கேட்டு பெப்சி நிறுவனம் தொடர்ந்த வழக்கு, இந்தியா முழுவதும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெப்சி நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான, ‘லேஸ்’ சிப்ஸ் தயாரிப்பதற்காக, FL 2027 OR FC 5 என்ற புதிய வகை உருளைக்கிழங்கை 2016-ம் ஆண்டு, பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டத்தின்படி பதிவுசெய்து உரிமை பெற்றிருக்கிறது பெப்சி நிறுவனம். தொடர்ந்து பஞ்சாப், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநில விவசாயிகளிடம் அந்த உருளைக்கிழங்கு விதைகளைக் கொடுத்து, பயிரிடச் சொல்லி, அந்த உருளைக்கிழங்கை, `லேஸ்’ சிப்ஸ் தயாரிப்புக்காகப் பயன்படுத்திவருகிறது.

சமீபத்தில் தனியார் உளவு நிறுவனம் ஒன்றை அனுப்பிய பெப்சி நிறுவனம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மற்ற உருளைக்கிழங்கு விவசாயிகளின் நிலங்களை வீடியோவில் பதிவு செய்தது. மேலும், அங்கிருந்து உருளைக்கிழங்கு மாதிரிகளை எடுத்துவந்து, அவர்களுடைய ஆய்வகத்தில் ஆய்வும் செய்தனர். இதில் அந்த உருளைக்கிழங்குகள், பெப்சி நிறுவனம் பதிவு செய்திருந்த உருளைக்கிழங்கு ரகத்தைப் போலவே இருந்தது.

‘லேஸ்’ போட்ட கேஸ்... கொந்தளிக்கும் விவசாயிகள்!

இதையடுத்து, ‘நாங்கள் பதிவுசெய்த உருளைக்கிழங்கு ரகத்தை, சட்டவிரோதமாகப் பயிர் செய்தார்கள்’ என்று குற்றம்சாட்டி நான்கு விவசாயிகள்மீது, ‘1.05 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என்று அகமதாபாத் கமர்சியல் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது, பெப்சி நிறுவனம். இந்த வழக்கைக் கண்டித்து, இரு தினங்களுக்கு முன் நாடு முழுவதுமிருந்து விவசாய மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். இந்நிலையில் ஏப்ரல் 26-ம் தேதி இந்த வழக்கு அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அந்த உருளைக்கிழங்குகளை எங்களுக்கு விற்பதற்குச் சம்பந்தப்பட்ட விவசாயிகள் உறுதி கொடுத்தால், வழக்கை முடித்துக்கொள்கிறோம்’ என்றது பெப்சி நிறுவனம். இதுகுறித்து, அந்த நான்கு விவசாயிகளுடன் கலந்து பேசி, அடுத்த விசாரணையின்போது தெரிவிப்பதாக, விவசாயிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் யக்னிக் தெரிவித்தார். இதனால், காப்புரிமை பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து முன்னர் பிறப்பித்த உத்தரவை, அடுத்த விசாரணை தேதியான ஜூன் 12 வரை நீட்டித்து, நீதிபதி
எம்.சி.தியாகி உத்தரவிட்டார்.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் பேசும்போது, “பெப்சி நிறுவனம் உருவாக்கிய உருளைக்கிழங்கு ரகம், கைமாறி கைமாறிப் பல விவசாயிகளிடம் சென்றிருக்கிறது. அதை அந்த விவசாயிகள் பயிர்செய்து வெளிச்சந்தையில் விற்பனை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், குஜராத் பகுதியில் பெப்சி நிறுவனத்தின் ‘லேஸ்’ சிப்ஸ்க்கு போட்டியாக இரண்டு சிப்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து உருளைக்கிழங்கைப் பெற்றிருக்கிறார்கள். அந்த உருளைக்கிழங்குகள், பெப்சி நிறுவனம் உருவாக்கிய ரகம் என்று பெப்சி நிறுவனத்துக்குத் தெரிந்த பின்னர்தான் விவகாரம் இப்படி ஆகியிருக்கிறது.

‘நான் உருவாக்கிய உருளை ரகத்தை வாங்கி நீ சிப்ஸ் போடக்கூடாது’ என பெப்சி நிறுவனம், சம்பந்தப்பட்ட போட்டி நிறுவனங்கள்மீது வழக்குத் தொடுப்பதை விடுத்து, விவசாயிகளை மிரட்டும் வகையில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். இது சட்ட மீறல்”என்றார், அரச்சலூர் செல்வம்.

‘லேஸ்’ போட்ட கேஸ்... கொந்தளிக்கும் விவசாயிகள்!

பயிர் பாதுகாப்புச் சட்டம் குறித்து பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். “பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டத்தின்படி, காப்புரிமை வாங்கிய ஒரு நிறுவனத்தின் விதையை அதன் அனுமதி இல்லாமல் விவசாயிகள் விதைக்கவோ, உற்பத்தி செய்யவோ முடியாது. ஆனால், பாரம்பர்ய விதைகளை உற்பத்தி செய்யவோ, சேமிக்கவோ, பயன்படுத்தவோ எந்த தடையும் இல்லை. உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தத்துக்குப் பின்னர்தான் காப்புரிமை விதைகளைப் பயிரிடுவது தவறு என்று கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கில் விவசாயிகள் அனுமதி வாங்காமல் பயன்படுத்தியிருப்பது தவறுதான். அந்த விவசாயி தெரியாமல்கூட உற்பத்தி செய்திருக்கலாம். அதற்காக நான்கு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியிடம் ஒரு கோடி ரூபாய் கேட்பது நியாயமல்ல’’ என்றார்.

“பெப்சி நிறுவனமே வேறு ஆட்கள் மூலமாக விவசாயிகளுக்கு விதை கிழங்குகளைக் கொடுத்துச் சாகுபடி செய்யச் சொல்லிவிட்டு... அந்த விவசாயிகளை மிரட்டும் வகையில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயந்து இனிமேல் போட்டி நிறுவனங்களுக்கு உருளைக் கிழங்குகளைக் கொடுக்க மாட்டார்கள் என பெப்சி நினைக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறது, பெப்சி. நீதிமன்றத்தில், உருளைக்கிழங்குகளை எங்களுக்கு விற்றால், வழக்கை முடித்துக்கொள்கிறோம் என்று பெப்சி கூறியிருப்பதை வைத்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.

விதைகளே ஆயுதம் என்பார்கள். அதை வைத்தே நம்மைத் தாக்குகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்!

- துரை.நாகராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு