Published:Updated:

`தேனி நகரில் பென்னிகுவிக்கிற்கு சிலை’ - துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்

`தேனி நகரில் பென்னிகுவிக்கிற்கு சிலை’ - துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்
`தேனி நகரில் பென்னிகுவிக்கிற்கு சிலை’ - துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்

'தேனி நகரில் பென்னிகுவிக்கிற்கு சிலை அமைக்க வேண்டும்' என நேற்று (25/02/2019) துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாலார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆண்டி, ``தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி லோயர்கேம்பில், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. அதனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து, தேனியில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்துநிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பெயரைச் சூட்டியது தமிழக அரசு. தற்போது, பென்னிகுவிக்கின் பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. இவை அனைத்தும் முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகள் மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளையும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

இதே நேரத்தில், தேனி நகரில் பென்னிகுவிக்கிற்கு சிலை நிறுவ வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை. அதுவும் குறிப்பாக, புதிய பேருந்துநிலையப் பூங்காவில் சிலை நிறுவப்பட்டால் நன்றாக இருக்கும் எனக் கருதி, அது தொடர்பான கோரிக்கை மனுவை தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்தோம். அதன் நகலை மாவட்ட கலெக்டரிம் கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்” என்றார்.