`விவசாயிகளுக்கு கைகொடுக்கும் உழவன் ஆப்!’ - நாகை ஆட்சியர் | Farmers should use Uzhavan app to get benefits says Nagapattinam collector

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (27/02/2019)

கடைசி தொடர்பு:21:10 (27/02/2019)

`விவசாயிகளுக்கு கைகொடுக்கும் உழவன் ஆப்!’ - நாகை ஆட்சியர்

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் வேளாண்மைத் திருவிழா தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் சீ.சுரேஷ்குமார் இன்று (27.02.2019) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து விவசாயிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ``வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் (அட்மா திட்டம்) முக்கிய நோக்கம், விவசாயிகளுக்கு செயல்விளக்கங்கள் மூலம் வேளாண் மற்றும் வேளாண்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் எளிதில் சென்றடையவேண்டும் என்பதுதான். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.99.76 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பல்வேறு வகையான விவசாயிகள் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

உழவன் ஆப் குறித்து குறிப்பிட்ட நாகை மாவட்ட ஆட்சியர்

உழவன் கைபேசி செயலி மூலம் வேளாண்மைத்துறை மானியத் திட்டங்கள், பயனாளிகள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரம் மற்றும் விதை இருப்பு விபரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் விபரம், விளை பொருட்கள் சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திகள் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் வருகை விபரம் ஆகிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு பயன்பெறமுடியும். இதுவரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19,278 விவசாயிகள் இச்செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள். எனவே அனைத்து விவசாயிகளும் உழவன் கைப்பேசி செயலியினை உடன் கூகுள் பதிவிறக்க செயலி மூலமாக தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

நிகழ்ச்சியில்

அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு நேரில் தங்களது கைபேசியினைக் கொண்டு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் (பயறுவகை பரப்பினை அதிகரித்தல்) கீழ் மாவட்டத்தில் பயறுவகை பரப்பினை அதிகரித்திட ஏதுவாக விவசாயிகளுக்கு  பயறுவகை செயல்விளக்கங்கள் மேற்கொள்ள 900 எண்களுக்கு ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக வேளாண்மைத் திருவிழா நடைபெறும் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விதைகள், வேளாண் உபகரணங்கள் தொடர்பான கண்காட்சியினை விவசாயிகள் பார்வையிட்டு பயனடைந்தனர்.


[X] Close

[X] Close