Published:Updated:

தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!

தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!
பிரீமியம் ஸ்டோரி
தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!

2 ஏக்கர்... 60 நாள்கள்... 1,60,000 ரூபாய் வருமானம்...மகசூல்

தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!

2 ஏக்கர்... 60 நாள்கள்... 1,60,000 ரூபாய் வருமானம்...மகசூல்

Published:Updated:
தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!
பிரீமியம் ஸ்டோரி
தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!

கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. சாப்பிடுபவர்களுக்குக் குளிர்ச்சியையும் நீர்ச்சத்தையும் தாராளமாக வழங்குவதோடு, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நிறைவான வருமானத்தைத் தருகிறது, தர்பூசணி. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்கள் பயன்படுத்தித்தான் தர்பூசணிச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களுக்கிடையில் இயற்கை விவசாயத்தில் தர்பூசணி விளைவிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம். இவர் இயற்கை முறையில் தர்பூசணிச் சாகுபடி செய்து வருகிறார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேர்ந்தநாடு கிராமத்தில் அமைந்துள்ளது, சச்சிதானந்தத்தின் தோட்டம். ஒரு காலைவேளையில் சச்சிதானந்தத்தைச் சந்திக்கச் சென்றோம்.தர்பூசணி பறிப்புப் பணியிலிருந்தவர், நம்மை வரவேற்று அமர வைத்தார். சற்று நேரத்தில் பணிகளை முடித்துவிட்டு வந்த சச்சிதானந்தம், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!

“இதுதான் என்னோட சொந்த ஊர். தாத்தா, அப்பா எல்லோரும் விவசாயம்தான் செஞ்சாங்க. ஸ்கூல்ல படிக்கிற காலத்துல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். படிப்பை முடிச்ச உடனே பேங்க்ல வேலை கிடைச்சது. அப்பாவுக்குப் பிறகு, நானும் அண்ணனும் சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். நான், வேலையில இருந்துக்கிட்டே விவசாயம் பார்த்துட்டுருக்கேன். மொத்தம் 15 ஏக்கர் நிலம் இருக்கு. வண்டல் மண் நிலம். இங்க இருக்குற 2 போர்வெல் மூலமாத்தான் பாசனம் செய்றேன். சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். முன்னாடி நிலக்கடலை, நெல்னுதான் சாகுபடி செய்துட்டுருந்தேன்.

அஞ்சு வருஷத்துக்கு முன்ன, ஒரு நண்பர் மூலமா ‘பசுமை விகடன்’ புத்தகம் அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கைக்கு மாறணும்னு தோணுச்சு. அப்புறம், ‘வானகம்’ பண்ணைக்குப் போய்ப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். பயிற்சியில தெரிஞ்சுக்கிட்டு பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு தயாரிச்சு… மாப்பிள்ளைச் சம்பா, சீரகச்சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செஞ்சேன். அதுக்கடுத்து ரெண்டு ஏக்கர் நிலத்துல அடர் பச்சைநிறத் தர்பூசணியைச் சாகுபடி செஞ்சுருக்கேன். இந்தத் தர்பூசணி ரகத்தோட பெயர் ‘கிரண்’. இதை ஐஸ்பாக்ஸ்னும் சொல்வாங்க. வீரிய ரகமா இருந்தாலும், இயற்கை விவசாயத்துல செழிப்பான விளைச்சலைக் கொடுக்குது. ஒரு ஏக்கர் நிலத்துல நிலக்கடலை, 7 ஏக்கர் நிலத்துல நெல், 5 ஏக்கர் நிலத்துல சவுக்கு, 1 ஏக்கர்ல எள்னு பயிர் செஞ்சுருக்கேன். இதுபோக 30 கோழிகளையும், 5 நாட்டு மாடுகளையும் வெச்சிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாராள வருமானம் கொடுக்கும் தர்பூசணி!

பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு இடுபொருள்களை உபயோகிச்சு சாகுபடி செஞ்சதுனால பூச்சி, நோய்த் தாக்குதல்னு எதுவுமே இல்லை. ஒரு பழம்கூடப் பழுதாகலை. அதிக வெயிலால, தரையில இருக்குற பழங்களோட தோல் மட்டும் மஞ்சளா மாறியிருக்கு. மத்தபடி, பழம் நல்ல சுவையா இருக்கு” என்ற சச்சிதானந்தம், ஒரு தர்பூசணிப் பழத்தை நறுக்கிக் கொடுத்தார். மிகுந்த சுவையுடன் இருந்தது, அது.

நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார், சச்சிதானந்தம். “தர்பூசணியை ‘மல்ச்சிங் ஷீட்’ போட்டு சாகுபடி செஞ்சுருக்கேன். அதனால, களைப்பிரச்னை இல்லை. நடவு செஞ்சு 65 நாள்கள் ஆகுது. இப்போ அரை ஏக்கர்ல பறிப்பு முடிச்சுருக்கேன். மொத்தம் 4 டன் அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. ஒரு பழம் குறைஞ்சபட்சமா 3 கிலோவுல இருந்து அதிகபட்சமா 5 கிலோ வரை இருக்குது. மொத்த வியாபாரிகள் கிலோவுக்கு 10 ரூபாய்ல இருந்து 12 ரூபாய் வரை விலை கொடுக்குறாங்க.

பழக்கடைகள்ல ஒரு கிலோவுக்கு 10 ரூபாய்தான் விலை கொடுக்கிறாங்க. 4 டன் தர்பூசணி விற்பனை மூலமா, 40,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. மீதி ஒன்றரை ஏக்கர் நிலத்துல இருந்து மொத்தம் 12 டன் தர்பூசணி கிடைக்கும். கிலோ 10 ரூபாய்னு விற்பனை செஞ்சா 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தம் 1,60,000 ரூபாய் வருமானம். அதுல எல்லாச்செலவும் சேர்த்து 60,000 ரூபாய் போக, 1,00,000 ரூபாய் லாபமா நிக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார், சச்சிதானந்தம்.

தொடர்புக்கு,
சச்சிதானந்தம்,
செல்போன்: 98650 95225

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ரு ஏக்கர் நிலத்தில் கிரண் ரகத் தர்பூசணியைச் சாகுபடி செய்யும் விதம்குறித்துச் சச்சிதானந்தம் சொல்லிய தகவல்கள் பாடமாக இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தைச் சட்டிக்கலப்பை கொண்டு இரண்டு முறை உழுது 5 நாள்கள் காயவிட வேண்டும். பிறகு ரோட்டோவேட்டர் கொண்டு இரண்டு முறை உழுது, 10 நாள்கள் காயவிட வேண்டும். பிறகு 6 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து, பார்களின் நடுவில் சொட்டுநீர்க் குழாய்களை வைத்து மல்ச்சிங் ஷீட் கொண்டு மூட வேண்டும். பிறகு, ஒன்றரை அடி இடைவெளியில் மல்ச்சிங் ஷீட்டில் துளையிட்டு சிறிய பள்ளம் பறிக்க வேண்டும். அதில் மாட்டு எரு மற்றும் சூடோமோனஸ் கலந்து வைத்துத் தண்ணீர் பாய்ச்சிப் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்த விதைகளைக் குழிக்கு ஒன்றாக விதைக்க வேண்டும். தினமும் இரண்டு மணிநேரம் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 7-ம் நாளுக்குமேல் முளைத்து வரும். 12-ம் நாளில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும்.

15-ம் நாளிலிருந்து வாரம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15-ம் நாளுக்குமேல் நிலத்தில் கொடி படரத் தொடங்கும். தேவைப்பட்டால், கொடிகள்மீது பஞ்சகவ்யா கரைசலைத் தெளிக்கலாம். 25-ம் நாளுக்குமேல் பூ எடுத்து 30-ம் நாளுக்குமேல் பிஞ்சு பிடிக்கும். 40-ம் நாள் பாசன நீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து விட வேண்டும். காய்கள் பருமனாகவும் எடை கூடுதலாகவும் இருக்க வளர்ச்சியூக்கியாக 50-ம் நாளில் நவதானியக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 60-ம் நாளுக்குமேல், தேவையைப் பொறுத்து அறுவடை செய்யலாம். பழங்களைத் தட்டிப் பார்த்தால், ‘பொத்’ எனும் மந்தமான ஓசை கேட்டால், முதிர்ச்சி அடைந்துவிட்டது என்று அர்த்தம்.

எலித் தொல்லைக்கு நொச்சி

“10
லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ மீன் கழிவுகளைப் போட்டு, நான்கு நாள்கள் ஊறவைத்து, வேலி ஓரத்தில் தெளித்து வந்தால்… மயில், ஆடு, மாடுகள் போன்றவை பயிருக்கு அருகில் வருவதில்லை. நொச்சி இலைகளைப் பறித்து வயல் வெளிகளைச் சுற்றிலும் எலி வளைகளில் போட்டு வைத்தால் எலித்தொல்லை தீரும்” என்கிறார், சச்சிதானந்தம்.

- துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism