Published:Updated:

மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...

மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...
பிரீமியம் ஸ்டோரி
மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...

மகசூல்

மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...

மகசூல்

Published:Updated:
மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...
பிரீமியம் ஸ்டோரி
மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...

காலங்காலமாக விவசாயிகள் பயிரிட்டு வந்த பாரம்பர்ய ரகங்களை, ‘பசுமைப்புரட்சி’ என்ற பெயரில் புகுத்தப்பட்ட வீரிய ரகங்கள் ஓரங்கட்டிவிட்டன. வீரிய ரகங்களைப் பயிரிட்டு அவற்றில் பூச்சிகள், நோய்களைக் கட்டுப்படுத்த முடியாத விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்துக்கு மாறிப் பாரம்பர்ய ரகங்களைப் பயிரிட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன். இவர் தூயமல்லி, சீரகச்சம்பா, நவரா ஆகிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

பாவூர்சத்திரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கீழப்பாவூர் கிராமம். இங்குதான், முருகனின் நெல்வயல் இருக்கிறது. ஒரு காலைவேளையில் முருகனைச் சந்தித்தோம்.

“விவசாயம் எங்களுக்குப் பூர்வீகத் தொழில். நான் டிப்ளமோ பார்மஸி முடிச்சுட்டு மெடிக்கல் ஷாப் வெச்சுருக்கேன். எங்க பகுதியில நெல், சின்னவெங்காயம் ரெண்டையும்தான் பரவலாச் சாகுபடி செய்வாங்க. பசுமைப்புரட்சிக்குப் பிறகு எல்லோரும் ரசாயன விவசாயத்துக்கு மாறினப்போ, நாங்களும் மாறிட்டோம். மெடிக்கல் ஷாப்பைப் பார்த்துக்கிட்டே விவசாயத்தையும் செஞ்சிட்டு இருந்தேன். அதிக விளைச்சல் ஆசையில விவசாயிகள் போட்டி போட்டுக்கிட்டு வயல்ல உரத்தைக் கொட்டுவாங்க. 2016-ஆம் வருஷம், ஒருமுறை வெங்காயம் போட்டப்போ வேர் அழுகல் நோய் தாக்கி வெங்காயம் முழுசும் காலி. அந்தச் சமயத்துல எனக்கு அதிகளவு நஷ்டம்.

மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...

அந்த விஷயத்தை என் நண்பர் வெற்றிவேல் முருகன்கிட்ட சொல்லிப் புலம்பிக்கிட்டு இருந்தேன். அவர்தான், ‘இயற்கை விவசாயத்துக்கு மாறிவிடு. செலவு குறையுறதோடு மகசூல் அதிகமாகக் கிடைக்கும்’னு சொன்னார். அவரே, என்னைக் கடையம்கிற ஊர்ல ஒரு தோட்டத்துக்கு அழைச்சுட்டுப் போனார். அது ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் நடராஜன் சாரோட தோட்டம். அவர் இயற்கை விவசாயம் பத்தி நிறையச் சொன்னார். அவரோட எலுமிச்சைத் தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவர் தயாரிச்சு வெச்சுருந்த ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், மீன் அமினோ அமிலம் போன்ற இடுபொருள்களைக் காட்டி தயாரிக்கிற முறைகளையும் சொன்னார்.

அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு 60 சென்ட் நிலத்துல இயற்கை முறையில சக்கை வாழையைச் சாகுபடி செஞ்சேன். அடியுரமா குப்பை அடிச்சேன். ஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம் ரெண்டையும்தான் இடுபொருள்களாகப் பயன்படுத்துனேன். நல்லா விளைஞ்சு வந்தது, வாழை. குலைகளின் எடை அதிகமாவும், காய்கள் திரட்சியாவும் இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் எனக்கு இயற்கை விவசாயத்து மேல முழு நம்பிக்கை வந்துச்சு” என்று தான் இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதை சொன்ன முருகன் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...

“அடுத்து சின்ன வெங்காயம், குள்ளக்கார் நெல் ரெண்டையும் சாகுபடி செஞ்சதுல நல்ல மகசூல் கிடைச்சது. சின்ன வெங்காயத்துல வேர் அழுகல் பிரச்னையே வரலை. இப்போ மூணு வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செய்றேன். மொத்தம் 1 ஏக்கர் 36 சென்ட் நிலம் இருக்கு. அதுல 50 சென்ட் நிலத்துல தூயமல்லி, 50 சென்ட் நிலத்துல சீரகச்சம்பா போட்டு அறுவடை முடிச்சுட்டேன். 36 சென்ட் நிலத்துல நவரா போட்டு அறுவடை முடிஞ்சு மறுதாம்பு விட்டு அதுவும் அறுவடையாகிடுச்சு. இதுமட்டுமில்லாம வீட்டுக்கிட்ட இருக்குற ஒரு ஏக்கர் நிலத்துல, கிருஷ்ணா, காஞ்சன், பங்கனபள்ளி, மல்கோவா, கிளிமூக்கு, நீலம், செந்தூரான்னு கலந்து 100 கன்றுகள் வெச்சுருக்கேன். அதுல ஊடுபயிரா தென்னை, கொய்யா நடவு செஞ்சுருக்கேன்” என்ற முருகன், நெல் சாகுபடியில் கிடைத்த மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“50 சென்ட் நிலத்துல 911 கிலோ தூயமல்லி ரக நெல் கிடைச்சது. 50 சென்ட் நிலத்துல 842 கிலோ சீரகசம்பா நெல் கிடைச்சது. 36 சென்ட் நிலத்துல போட்டிருந்த நவரா ரகத்துல முதல் அறுவடையில் 436 கிலோவும், மறுதாம்புவில் 68 கிலோவும் சேர்த்து மொத்தம் 504 கிலோ நெல் கிடைச்சுது. தூயமல்லியை அவலாவும், சீரகச்சம்பாவை அரிசியாகவும், நவராவை விதை நெல்லாகவும் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். 911 கிலோ தூயமல்லி நெல்லை மதிப்புக் கூட்டினால் 400 கிலோ அளவுக்கு அவல் கிடைக்கும். 842 கிலோ சீரகச்சம்பா நெல்லை அரைச்சா, 450 கிலோ அளவுக்கு அரிசி கிடைக்கும். அவல் ஒரு கிலோ 100 ரூபாய்னு விற்பனை செய்யலாம். சீரகச்சம்பா அரிசியை ஒரு கிலோ 80 ரூபாய்னு விற்பனை செய்யலாம்.

மருந்துக் கடைக்காரரின் மருத்துவ நெல் சாகுபடி! - 1 ஏக்கர் 36 சென்ட்... ரூ.64,320 லாபம்! தூயமல்லி, நவரா, சீரகச்சம்பா...

அந்த வகையில் தூயமல்லி அவல் விற்பனைமூலம் 40,000 ரூபாயும், சீரகச்சம்பா அரிசி விற்பனைமூலம் 36,000 ரூபாயும், நவரா விதைநெல் விற்பனைமூலம் 40,320 ரூபாயும் வருமானமாகக் கிடைக்கும். ஆக மொத்தம், 1,16,320 ரூபாய் வருமானம். இதுல எல்லாச் செலவும் சேர்த்து 52,000 ரூபாய் போக, 64,320 ரூபாய் லாபமா நிக்கும்” என்ற முருகன் நிறைவாக,

“போன முறை குள்ளக்கார் நெல்லை அவலாக மாத்தி வெச்சுக்கிட்டு ‘இங்கு இயற்கை அவல் கிடைக்கும்’னு என்னோட மெடிக்கல் ஷாப்ல ஒரு போர்டு வச்சேன். நல்லா விற்பனையாச்சு.

அதே மாதிரி இந்த முறையும் அவல், அரிசி ரெண்டையும் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். ஏற்கெனவே நவரா விதைநெல் வேணும்னு சில விவசாயிகள் சொல்லி வெச்சுருக்காங்க. அவங்கள்ட்டயே விதைநெல்லை விற்பனை செய்திடுவேன். அரிசியாவோ அவலாவோ மதிப்புக்கூட்டி விற்பனை செய்றப்போ லாபமும் கூடுது” என்று சொல்லி விடைகொடுத்தார்.

 தொடர்புக்கு,
முருகன்,
செல்போன்: 98948 80263.  

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

பாரம்பர்ய நெல் சாகுபடி குறித்து முருகன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

நவரா 90-95 நாள்கள் வயதுடையது. சீரகச்சம்பா 125-130 நாள்கள் வயதுடையது. தூயமல்லி 135-140 நாள்கள் வயதுடையது. 50 சென்ட் சாகுபடிக்குத் தூயமல்லி ரகத்தில் 10 கிலோ விதைநெல் தேவை. 50 சென்ட் சாகுபடிக்குச் சீரகச்சம்பா ரகத்தில் 8 கிலோ விதை நெல் தேவை.

20 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ கல் உப்பைக் கரைத்து, அதில் விதைநெல்லைக் கொட்டி அலசினால், பழுதான விதைகள் மிதக்கும். அவற்றை நீக்கிவிட்டு, மீதமுள்ள விதைநெல்லை மூன்று முறை நல்ல தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, அதில் விதைநெல்லை 10 நிமிடங்கள் ஊறவைத்துப் பிறகு நாற்றங்காலில் தூவி விதைக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வந்தால், 5-ம் நாளில் முளைப்பு எடுக்கும். விதைத்த 10 மற்றும் 15-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி ஜீவாமிர்தத்தைக் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 20-22 நாள்களில் நாற்றுகளை எடுத்து வயலில் நடவு செய்யலாம். நடவுக்கு முன் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து, அதில் நாற்றுகளின் வேர்ப்பகுதியை 10 நிமிடங்கள் மூழ்க வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். இதனால், வேர் சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்காது.

நடவு செய்த 15 மற்றும் 30-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை (50 சென்ட் நிலத்துக்கு) தண்ணீரில் கலந்து விட வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும் (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா. 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம்). 30-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 50 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மூலிகைப் பிண்ணாக்கு கலவைக் கரைசலைக் கலந்து பாசன நீருடன் விட வேண்டும்.

மூலிகைப் பிண்ணாக்கு கலவைக் கரைசல்!

200 லிட்டர் டிரம்மில் பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டுச் சிறுநீர் 20 லிட்டர், வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றைப் போட வேண்டும். நொச்சி, எருக்கு, ஆடாதொடை, வேம்பு, சீத்தா, ஆமணக்கு, புளி, கொய்யா மர இலைகள் ஆகியவற்றில் தலா 2 கிலோ அளவில் டிரம்முக்குள் இட்டு... பழ இ.எம்.கரைசல் 500 மில்லி, பஞ்சகவ்யா 500 மில்லி, சூடோமோனஸ் 1 கிலோ, பாஸ்போபாக்டீரியா 1 கிலோ, அசோஸ்பைரில்லம் 1 கிலோ ஆகியவற்றைச் சேர்த்து 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து 1 மாதம் ஊறவிட வேண்டும். 1 லிட்டர் கரைசலை 50 லிட்டர் தண்ணீர் சேர்த்துப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

மறுதாம்பு!

நவரா ரகத்தைவிடத் தூயமல்லி, சீரகச்சம்பா ஆகியவை 40-50 நாள்கள் கூடுதல் வயது கொண்டவை என்பதால், நவராவை மறுதாம்பு விடலாம் எனத் தோன்றியது. அறுவடை முடிந்த மூன்று நாள்களில் முளைப்பு எடுத்து 10 நாள்களிலேயே கதிர்கள் வந்தது. 10 நாள்கள் இடைவெளியில் பஞ்சகவ்யாவையும் மீன் அமினோ அமிலத்தையும் தெளித்ததில் 35-ஆம் நாளிலேயே அறுவடைக்கு வந்துள்ளது.

- இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism