Published:Updated:

‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்!’’

‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்!’’

நாட்டு நடப்புஜெ.லெவின்

டந்த மாதம் மே 9-ம் தேதி சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில், ‘ஊட்டச்சத்துகள் மற்றும் மதிப்புக்கூட்டல்’ குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார், முன்னாள் சி.எஃப்.டி.ஆர்.ஐ இயக்குநர் மற்றும் சர்வதேச ஊட்டச்சத்து அறிவியல் கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.பிரகாஷ்.

‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்!’’

விழாவில் பேசிய பிரகாஷ், “2050-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உணவு தானியங்கள் 285 மில்லியன் டன் என்ற அளவிலும் தோட்டக்கலைப் பயிர்கள் 305 மில்லியன் டன் என்ற அளவிலும் உற்பத்தி ஆகின்றன. இந்த உற்பத்தி அளவு தற்போதைக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் இதன் தேவை அதிகரிக்கும். அப்போது மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்தான் கைக்கொடுக்கும். மேலும், ஊரகச் சந்தைகள், நகரச் சந்தைகள் மற்றும் மாநகரச் சந்தைகளை இணைத்து விளைபொருள்களை எளிதாகச் சந்தைப்படுத்த வழிகளை ஏற்படுத்த வேண்டும். ‘ஃபுட் செயின்’ என்றழைக்கப்படும் இம்முறையைச் செயல்படுத்தினால் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும்.

விவசாயத்தில் அறுவடையின்போதும், மதிப்புக்கூட்டும்போதும் சேதாரம் என்று அழைக்கப்படும் ‘வேஸ்ட்டேஜ்’  தவிர்க்க முடியாத ஒன்று. அதைக் குறைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். எதிர்காலத்தில் ஆரோக்கியம் சார்ந்த உணவுப்பொருள்களே சந்தையில் முக்கிய அங்கம் வகிக்கும். அதுதான் நிலைத்த வியாபாரத்துக்கும் கைக்கொடுக்கும். ஒரு காலத்தில் அரிசி என்றாலே கைக்குத்தல் அரிசிதான். ஆனால், இன்று பாலீஷ் செய்யப்பட்ட அரிசிதான் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல. நாவின் சுவைக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம். உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

அடிப்படையாகவே இந்திய, சீன உணவுப் பொருள்கள் மருத்துவத்தன்மை கொண்டவை. அதைப் புரிந்துகொண்டு நாம் சாப்பிடும் பொருள்களில் ஊட்டச்சத்துகள் அழியாமல், மதிப்புக்கூட்டும் முறைகளைக் கையாள வேண்டும். நம் முன்னோர், ஊட்டச்சத்துள்ள உணவைத்தான் தயாரித்துச் சாப்பிட்டனர்” என்றார். நிகழ்வில் மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் கலந்து கொண்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கைக்குத்தல் அரிசியில் முன்னோரின் தொழில்நுட்பம்!

“மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் கைக்குத்தல் அரிசியும் ஒன்று. நம்முடைய கைக்குத்தல் அரிசியில்தான் ஊட்டச்சத்துகள் மிகுதியாக உள்ளது என்கிறீர்கள். இதை ஏன் மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது” என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பனை வாரிய தலைவருமான குமரி அனந்தன் கேள்வி எழுப்பினார்.

‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்!’’

அதற்குப் பதிலளித்த பிரகாஷ், “இதற்கான பதில் நம் பாரம்பர்யத்திலேயே இருக்கிறது. நம் முன்னோர் எளிதில் பூச்சித்தாக்குதலுக்கு உள்ளாகும் தானியங்களை எப்போது தேவையோ, அப்போதுதான் அரைத்துப் பயன்படுத்துவார்கள். வீட்டுக்கு விருந்தினர் வரும் நேரங்களிலோ, திருவிழாக் காலங்களிலோதான் நெல்லைக் குத்தி அரிசியாக்கிச் சமைப்பார்கள். கம்பு, சோளம் போன்றவற்றையும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு தேவையோ அந்த அளவைத்தான் எடுத்து இடித்துச் சமைப்பார்கள். ஏனென்றால், கைக்குத்தல் அரிசி எளிதில் பூச்சித்தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியது. இந்த நுட்பத்தைப் புரிந்து வைத்திருந்த நம் முன்னோர், மெச்சத்தகுந்தவர்கள். கைக்குத்தல் அரிசி ஒரு வாரம் வரைதான் தாங்கும். தற்போதைய நிலையில், ஒரு வாரத்துக்கு மேல் தாங்கக்கூடியதாக மாற்ற விரும்பினால் அதற்கான செலவு அதிகமாகும். அதனால், மதிய உணவுத்திட்டத்தில் கைக்ககுத்தல் அரிசியைப் பயன்படுத்துவது சிரமமானது” என்றார்.

“முன்பெல்லாம் எங்க பாட்டி, அரிசித்தவிட்டில் கருப்பட்டி மற்றும் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடக் கொடுப்பார். அதன்மூலம் சத்துக்கள் உடலுக்குக் கிடைத்தது. இப்போது பாலீஷ் செய்யப்பட்ட அரிசிக்குப் பழகிவிட்ட நாம் சத்துக்களைப் பெறுவது எப்படி” என்று கேட்டார் குமரி ஆனந்தன்.

“தற்போது தவிட்டிலிருந்து எடுக்கப்படும் ரைஸ் பிரான் ஆயில், சந்தையில் குறைவான விலையில்தான் (ஒரு லிட்டர் 90-110 ரூபாய்) கிடைக்கிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். குறைந்த கொழுப்புச்சத்து, அதிகப் புரதச்சத்து என்பதுதான் பாலீஷ் செய்யப்படாத அரிசியின் தாரக மந்திரம். கேரளா மற்றும் கர்நாடக மாநில மக்கள், உணவில் சிவப்பு அரிசிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நெல்லுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டிலும் சிவப்பு அரிசிப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்” என்றார், பிரகாஷ்.