Published:Updated:

”பயிருடன் சேர்த்து எங்க உயிரையும் காப்பாத்திட்டீங்க!” - கஜா களத்தில் விகடன் பணிகள்

ஜெனரேட்டர் வைத்து தண்ணீர் இறைக்க எங்களிடம் பணம் இல்லை. மேற்கொண்டு கடனும் வாங்க முடியாது. தாலிச் சங்கிலியைத் தவிர பொட்டுத் தங்கம் கூட இல்லை. இந்த முறை நெல் அறுவடை பண்ண முடியாமல் போயிருந்தா, பிள்ளைங்களோட தற்கொலைப் பண்ணியிருப்போம். நெல் மூட்டைகளை எங்க கண்ணால பார்த்த பிறகுதான் எங்களுக்கு உசுரே வந்துச்சு. விகடன் சரியான நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் கொடுத்ததை என்றென்றும் மறக்க மாட்டோம். எங்கள் ``பயிர்களோட சேத்து உசுரையும் காப்பாற்றிக் கொடுத்திட்டீங்க" என விகடனுக்கு நன்றி தெரிவித்தார்.

”பயிருடன் சேர்த்து எங்க உயிரையும் காப்பாத்திட்டீங்க!” -  கஜா களத்தில் விகடன் பணிகள்
”பயிருடன் சேர்த்து எங்க உயிரையும் காப்பாத்திட்டீங்க!” - கஜா களத்தில் விகடன் பணிகள்

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஈவு இறக்கம் இல்லாமல், சிதைத்துப் போட்டுப்போனது கஜா புயல். புதுக்கோட்டையில் உள்ள பல கிராமங்களில் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் வீடுகளில் மின்சாரம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. ஆனால், விவசாய மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால், தண்ணீரின்றி விவசாயிகள் நடவுப்பயிர்கள், காய்கறிகள் உள்ளிட்டவை காய்ந்து கருகத் தொடங்கின. விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பாற்ற செய்வதறியாது திகைத்தனர். விவசாயிகளுடன் விகடன் குழுமம் கைகோத்தது.

விவசாயிகளின் வேதனையை அறிந்து அதைச் செய்தியாக்கியதுடன், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் கவனத்துக்குக் கொண்டு சென்றது. இதுகுறித்து அப்போது நம்மிடம் பேசிய ஆட்சித்தலைவர், ``மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசினேன். பயிர்கள் கருகும் நிலையில் உள்ள விவசாய நிலங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். அதற்கு ``விவசாயிகளின் நடவுப் பயிர்களுக்குள்ளும் மின் கம்பங்கள் உடைந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றி மீண்டும் உடனே மின்சாரம் வழங்குவதில், ஏராளமான சிரமங்கள் உள்ளது எனக் கூறினர். தற்போது விவசாயிகள் தரப்பிலிருந்தும் கோரிக்கை மனுக்கள் வருகிறது. காய்ந்து கருகும் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் இறைத்துக் கொடுப்பதுதான் ஒரே வழி.

அவ்வாறு செய்தால் உடனடியாக அந்தப் பயிர்களைக் காப்பாற்றி விடலாம். உங்களால் உதவ முடியுமா என்றார். உடனே நாம் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, அலுவலகத்தில் உடனே ஒப்புதல் கிடைத்தது.

இதையடுத்து, டிசம்பர் 16ம் தேதி முதல் விகடன் மற்றும் வாசகர்கள் சார்பில் ஜெனரேட்டர் மூலம் விவசாயிகளின் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து பயிர்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக, கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான செட்டிக்காடு, கரிசக்காடு, காயக்காடு, புளிச்சங்காடு, கறம்பக்காடு, நெடுவாசல் ஆகிய பகுதிகளில் பணியைத் தொடங்கினோம். ஜெனரேட்டர் வைத்து தண்ணீர் பாய்ச்ச முடியாத விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களின் விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கொடுத்து உதவினோம். தொடர்ந்து ஒவ்வொரு கிராமமாக நடவுப்பயிர்களின் நிலை குறித்து விசாரித்தபோது, கம்மங்காட்டில் 10 ஏக்கருக்கும் மேல் பயிர்கள் முழுமையாகத் தண்ணீரின்றி கருகிப்போனது தெரியவந்தது. அந்தப் பகுதியில் படும் நிலையில் இருந்த பயிர்களுக்கு உடனே தண்ணீர் வழங்கப்பட்டது.

கம்மங்காடு அருகே மாந்தாங்குடி விவசாயிகள் நிலை நிறையவே மோசம். விவசாய நிலத்திற்குள் செல்லும் வழியானது. சீமைக் கருவேல மரங்களால் சூழ்ந்திருந்தது. சீமைக்கருவேல மரங்களை அகற்றி கடுமையான சிரமத்திற்குப் பிறகு ஜெனரேட்டர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இருந்த நடவுப்பயிர்களும் காப்பாற்றப்பட்டது. சரியான நேரத்தில் தண்ணீர் கிடைத்ததால், 40க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகளின் 137 ஏக்கர் விவசாயப் பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. தற்போது, உற்சாகத்துடன் விவசாயிகள் அனைவரும் அறுவடையை முடித்துள்ளனர்.

மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விவசாயம் செய்து வரும் கார்த்திக்கிற்கு 4 ஏக்கர் குத்தகை விவசாயம் நிலம் உள்ளது. 
கார்த்திக் மனைவி திவ்யாவிடம் பேசினோம். ``5 வருஷத்துக்கும் மேலாகக் குத்தகை விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றோம். விவசாயத்தை விட்டா வேற எந்த வேலையும் என் கணவருக்குத் தெரியாது. அவர் ஒருத்தர் மட்டுமே கஷ்டப்படுறதால, இப்ப அவருக்கு ஒத்தாசையாக நானும் விவசாயம் செய்யுறேன். இந்த வருஷம் 2 ஏக்கர்ல விவசாயம் செஞ்சா போதுமென்று கார்த்திக் சொன்னாரு.

இல்ல, நான்தான் கடன் வாங்கியாவது 4 ஏக்கர் வரையிலும் நடவு போடுவோம் என்று சொன்னேன். நகையை அடைமானம் வைத்தும், கடன் வாங்கியும் நடவு செய்தோம். ஆனால், கஜா புயல் எங்களை நிலைகுலையச் செய்து விட்டது. ஜெனரேட்டர் வைத்து தண்ணீர் இறைக்க எங்களிடம் பணம் இல்லை. மேற்கொண்டு கடனும் வாங்க முடியாது. தாலிச் சங்கிலியைத் தவிர பொட்டுத் தங்கம் கூட இல்லை. இந்த முறை நெல் அறுவடை பண்ண முடியாமல் போயிருந்தா, பிள்ளைங்களோட தற்கொலை பண்ணியிருப்போம். நெல் மூட்டைகளை எங்க கண்ணால பார்த்த பிறகுதான் எங்களுக்கு உசிரே வந்துச்சு. விகடன் சரியான நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் கொடுத்ததை என்றென்றும் மறக்க மாட்டோம். எங்கள் ``பயிர்களோடு சேத்து உசிரையும் காப்பாற்றிக் கொடுத்திட்டீங்க" என விகடனுக்கு நன்றி தெரிவித்தார்.

கம்மங்காடு வடிவேலுவிற்கு 5 ஏக்கர் விவசாயம். 2 ஏக்கர் கருகிப்போனது. 3 ஏக்கருக்கு தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றினோம்.
வடிவேலிடம் பேசினோம், ``தண்ணீர் இல்லாமல் 2 ஏக்கர் பயிரும் சுத்தமாப் பட்டுப்போச்சு. நிறையவே கஷ்டப்பட்டேன். 3 ஏக்கர் மட்டும்தான் மிச்சம் இருந்தது. அதுவும் தண்ணீர் இல்லாமல், பட்டுப்போகிற நிலையில் இருந்துச்சு. என் சத்துக்கு ஜெனரேட்டர் வைத்து பயிர் நனையிற வரைக்கும் தண்ணீர் பாய்ச்சிட்டேன். ஆனாலும், பயிர் தெளிவுக்கு வரலை. போனா போகட்டும்ன்னு விட்டுற மனசு வரலை. யாராவது உதவிக்கு வருவார்களா? என்று ஏங்கிய சமயத்தில்தான் மகராசனாக விகடன் வந்து உதவி கிடைச்சிச்சு. புயல் இல்லையின்னா 5 ஏக்கருக்கும் சேர்த்து 150 மூட்டை நெல் கிடைத்திருக்கும். 2 ஏக்கரும் பட்டபிறகு, 30 மூடை நெல் கூட கிடைக்காதென்றுதான் மொதல்ல நெனச்சேன். தற்போது 70 மூட்டை நெல் கிடைத்திருக்கிறது" என்றார் மகிழ்ச்சியுடன்.

கறம்பக்காடு விவசாயி முனியசாமிக்கு 31/2 ஏக்கர் விவசாயம். கதிர் வெளியே வரும் நேரத்தில் காய்ந்த பயிர்களுக்கு உடனடியாக தண்ணீர் இறைத்துக் கொடுத்தோம். ``இந்தப் போகத்தில் கிடைத்த வருமானத்தை வச்சி, வீட்டுச் செலவு போக பிள்ளைகள் படிப்புக்குப் பணம் கட்டிட்டேன். நாமதான் படிக்கவில்லை. நம்ம பிள்ளைகளையாவது படிக்க வைக்க வேண்டும் இல்லையா! என்று கூறும் முனியசாமிக்கு 2 பெண் பிள்ளைகள். 40 வருஷத்துக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். அறுவடைக்கு முன் நடந்த சோகமான நிகழ்வுகளை விவரித்தார் முனியசாமி.

 ``இந்த போகத்தில் வருகிற வருமானத்தை வைத்து பிள்ளைகள் கல்லூரிக்குப் பணம் கட்டிடலாம்ன்னு நெனச்சேன். கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருக தொடங்கிருச்சு. மனைவியின் தோடு, மூக்குத்தியை வச்சுத்தான் நடவு செஞ்சிருக்கோம். ஜெனரேட்டர் வச்சி தண்ணீர் பாய்ச்சுவதற்கு அடகு வைக்கவும் ஏதும் இல்லை.

40 வருஷத்துக்கும் மேல் விவசாயத்திலேயே வாழ்க்கையை ஓட்டியாச்சு. விவசாயத்தை விட்டால் வேற எந்தத் தொழிலும் தெரியாது. என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாத நேரத்தில் விகடனால், கிடைத்த உதவிதான் என் குடும்பத்திற்கும், என் பிள்ளைகளின் படிப்புக்கும் உதவியாக இருந்தது. இப்போது, அடகு, வைத்த நகைகளையும் மீட்டு விட்டேன். பிள்ளைகளின் படிப்புச் செலவையும் கட்டி விட்டேன்" என்று பூரிக்கிறார்.

ஆங்காங்கே நன்றி தெரிவித்து ஃப்ளக்ஸ் பேனர்கள் வைத்ததுடன், அதனுடன் ஒரு படி மேலாக, களிமண்ணால் விகடன் தாத்தா உருவம் செய்து அதில் அறுவடை செய்த நெல்மணிகளை நிரப்பிக் கொடுத்ததன் மூலம் விவசாயிகளின் அன்பை நம்மால் உணர முடிந்தது.